Wednesday, November 18, 2015

தாமரை இலைகள்

விபச்சார
குளத்தில்
மிதந்தாலும்
நாங்களும்
தாமரை
இலைகள் தான்
அந்த ஒரு
சூரியனுக்காக
தினம் தினம்
முகம் மலர்கிறோம்
பின் மீண்டும்
மடிகிறோம்........

Sunday, November 15, 2015

உயிரா உரமா?

9/11,26/11,13/11
உலக
பெரு நகரங்களில்
பறிக்கப்பட்ட
உயிர்
மட்டும்
உயிரா?
தினம் தினம்
பசியிலும்
பட்டினியிலும்
வெள்ளத்திலும்
கடத்தலிலும்
பலாத்காரத்திலும்
சிசு வதைப்பிலும்
ஜாதி சண்டையிலும்
மதப் பிரிவினையிலும்
போரிலும்
ஆக்கிரமிப்பிலும்
அரசியல் வாதிகளின்
சுயநலத்தாலும்
பறிக்கப்படும்
உயிர் யாவும்
வெறும்
மண்ணுக்கான
உரமா??

Wednesday, November 11, 2015

கோலம் பேசியது




இரண்டு
ஆண்கள்
இருக்கும்
இவ்வீட்டில்
இரண்டு
நாட்கள்
ஆகியும்
மிதிபடாமல்
நான்
தப்பிப்
பிழைத்தேன்....
மனமிருந்தால்
மார்க்கமுண்டு,
பிறர்
கோலம்
அழியாமல்
காப்பதற்கு.....

Wednesday, November 4, 2015

வேற்றுமை

தன்
குழந்தையின்
சிறு கிறுக்கல்களும்
பெரும் ஓவியமாய்
தெரியும்
அப்பாவிற்கு
தன் மனைவியின்
பெரிய  கவிதையும்
சிறு கிறுக்கலாய்
தெரிவது எதனால்??

அவளை
போற்றி கொண்டாட
அவளப்பன்
இருப்பதாலோ???

Monday, November 2, 2015

எதை ரசிப்பது.....

வண்ண விளக்குகள்
தோரணமாய் ஜொலிக்க,
சந்தனமும்
குங்குமமும்
வரவேற்க,
பூக்கள் மனம்
வீடெங்கும் வீச,
தாம் சிருஷ்டித்த
பொம்மைகளுடன்
விளையாட
கடவுள்
யாவரும்
வீடுதோரும்
கொலுவில் வீற்றிருக்க,
சொர்கமே
பூலோகம் வந்ததோ
என்று புத்தி நிணைக்க,
இதைகான வந்த
கண்களுக்கு
கொலுவில் அமர்ந்திருக்கும்
கலைவண்ணமிகு
பொம்மைகளை கண்டு
ரசிப்பதா
அல்ல
வண்ண உடையுடுத்தி
அலங்காரமாய்
கொலு காண வந்த
அழகு
பதுமைகளாய்
உலாவரும்
உயிர் ஓவியங்களை
கண்டு ரசிப்பதா
என்று
சந்தேகம்.
கண்கள் இரண்டாயினும்
காட்சி ஒன்றே,
மனதே நீயே
முடிவு செய்
எதை கண்டு ரசிப்பதென்று......

Thursday, October 29, 2015

ஆதிக்கம்


ஒரு
நிமிடமும்
வீணாக்காமல்
அன்னலும்
நோக்கினாள்
அவனும்
நோக்கினான்
யாரை?
கையில்
இருந்த
செல்பேசியை
தனி தனியாக.....

Wednesday, October 28, 2015

உறவு பாலம்.....

உறவு பாலம்.....
முக நூலும்
வைபரும்
வாட்ஸ் ஆப்பும் 
இல்லையென்றால்
இன்று
பல
உறவுகள்
வால் அறுந்த
காற்றாடிகள் தான்....
சலைக்காமல்
தேடுகிறோம்
ஓயாமல்
அழைக்கிறோம்
கண்டதையெல்லாம்
பகிர்கிறோம்
ஓசி என்று
இருக்கும் வரை
அத்துனை பேரும்
கூட்ட கூட்டமாக
உறவு பாதையில்
பயணிக்கிறோம்
காசு மட்டும்
வசூலித்தால்
எத்தனை
பாதை
காட்டுப் பாதையாகும்?
கால் பதியா
பாதையாகும்??

Saturday, October 24, 2015

கொலு பொம்மைகள்

ஒன்பது நாட்கள்
வெளி உலகம் வந்து
தூய காற்றை
சுவாசித்து,
உற்றார் உறவினரோடு,
உண்டு மகிழ்ந்து
கூடி குலாவி
பாடி ஆடி
விடுதலை வாழ்க்கையை
சுவைக்க,
நாங்கள்
வருடத்தில்
முன்ணூற்றி ஐம்பத்தாறு
நாட்கள்
இருக்கிறோம்
சிறைவாசமும்
உண்ணா நோன்பும்
மௌன விரதமும்!!

ஆனாலும்
நம்பிக்கையுடன்
காத்திருப்போம்
வருடம் ஒருமுறை
கிடைக்கும்
அந்த விடுதலைக்காக!!!!!!

Saturday, October 17, 2015

ஏற்றமெனில்.....!!!!

கோப்பைகள் வேண்டாம்,
வண்ணப் பட்டு சால்வைகள் வேண்டாம்,
மெடல்கள் வேண்டாம்,
பாராட்டு மழை பொழியவும் வேண்டாம்,
பத்திரமும் வேண்டாம்,
காசோலையும் வேண்டாம்
காகித பணமும் வேண்டாம்!!

என் சிறிய செயலுக்கு,
நான் சமைக்கும் உணவிற்கு,
நான் பாடும் பாட்டிற்கு,
நான் கிறுக்கும் கவிதைக்கு,
நான் தீட்டும் ஓவியத்திற்கு,
நான் உடுத்தும் உடைக்கு,
என் குழந்தை வளர்ப்பிற்கு,
நம் இல்லம் கோவிலாய்
இருப்பதற்கு,


 சிறு அங்கீகாரமே எனக்கு
பெரும் விருது,
அது இல்லையேல்
நான் வெறும் எருது...

ஒரு சிரிப்பு,
ஒரு அணைப்பு,
ஒரு சொல்,
கண்களில் ஆச்சரியக் ஒளி,
வாய் மொழியில் ஒரு சிறு
ஆச்சரியக் குறி!!


இவையாவும் உண்மையாக
இருக்கும் வரை,
போதும் இவை எனக்கு,
ஏணியில் எனை ஏற்றிவிட,
வாழ்வதனில் நாம் ஏற்றம் பெற.........



தனிமை.....



வானம்
நிலவு
சூரியன்
பனை மரம்
ரோஜா
இவை யாவும்
ஒருமையிலும்
தனிமையிலும்
அழகு,
மனிதர்கள் மட்டும்
இதில் விதி விலக்கு........

Monday, October 12, 2015

குற்றமா?

வெளியில் வைத்து
அடை காத்தால்
மனித கழுகுகள்
கொத்திவிடும் என
பத்து மாதமும்
என்னுள் வைத்து
அடைகாத்தேன்.

நீ பூமியில் வந்து
விழுந்த நாள் முதல்
கண்விழித்து பாதுகாத்தேன்.
என் உலகம் நீயே ஆக
உலாவந்தேன்.

உன் குரலே நான்
ரசிக்கும் இசையானது.
என் கைப்பிடித்து
நடந்த போது உன் 
பிஞ்சு கைகளே
என் ஊன்று கோலானது.

உன்னுடன் விளையாடிய போதெல்லாம்
நானும் ஒரு குழந்தையேனேன்.

நட்சத்திரங்களுக்குள்
நீ நிலவாய்
ஜொலித்திட கனாக்கண்டேன்.

நீ ஏறிய படிக்கற்கள்
சரியா வண்ணம் 
தாங்கிப் பிடித்தேன்.

நீ கொண்டு வந்த
பரிசுக்கோப்பைகளை
கண்டு வானுயரம்
உயர்ந்து
பின் நிலம் வந்தடைந்தேன்.

நான் படிக்க முடியாததை
நீ உன் குறிக்கோளாய்
தெர்ந்தெடுத்த பொழுது
வியப்புற்றேன், ஆச்சரியப்பட்டேன்.

என் கனவை உன்னுள்
நானறியாமல் விதைத்துவிட்டேன்.
அதை நினைவாக்க 
நீ விழைந்த போது
என்னை மறந்தேன்.

இத்தனையும் ஒரு புறம் இருக்க,

உன் பாதை நோக்கி
தேசம் விட்டு,
என் கூட்டை விட்டு
நீ செல்லும்
நாள் வந்த போது,

விழியோரம் நின்ற
கண்ணீரை அணை போட்டு
தடுத்து விட்டு
பொய்யாக உதட்டோரம்
சிரிப்பை மலரச்செய்து
போய் வா மகளே
என்று வழியனுப்பி
வீட்டுக்கு வந்தவுடன்

அணை திறந்த வெள்ளமாய்
கண்ணங்களில்
கண்ணீர் 
கரைபுரண்டோட,
உன் புகைப்படம்
தடவி,
உன் படுக்கை தழுவி,
உன் வாசனை
வரும் என
உன் ஆடை முகர்ந்து
இந்த ஐந்து வருடமும்
எப்படி நகரும்
என காத்து இருக்க 
அறியாமல்
தூக்கம்
கண்களை தழுவாமல்
இரவு பகல் 
பாராமல் காத்து இருக்கின்றேன்...

தாயானது
குற்றமா?

உன்னை பெண் புலியாய்
வளர்த்தது
என் குற்றமா?

என் கனவை
உனக்குள் திணித்தது
என் குற்றமா?

இறக்கை முளைத்த பின்னும்
என் கூட்டுக்குள்ளேயே
உன்னை வைத்துக்கொள்ள
ஆசைப்படுவது 
என் குற்றமா?

எது குற்றம்?
என் மகளாக மட்டுமே
இருந்துவிடு என்ற 
பெருங்குற்றம்
புரியாதவைரையில்
தாய்மை பிறவியில்
யாதும் 
நியாயமே!!!

Saturday, April 11, 2015

மாற்றம்

சூரியன் உதிக்கும் முன்
எழுந்து, நீராகாரம் குடித்து,
ஏரு தூக்கி
வயல் நோக்கி
கால் நடை போட்டு
உழுது விட்டு
கம்பங் கூழும்
பச்சை வெங்காயமும்  உண்டு
உடலுக்கு உரம் சேர்த்து
களைத்துப் போய்
மாலை வீடு வந்து
திண்ணையில் பழங்கதை பேசி
இருட்டிய உடன் உணவு உண்டு
உடன் தூங்கினான் என் பாட்டன்.

சூரியன் விழித்தவுடன்
தானும் விழித்து
உடலுக்கு வலு சேர்க்க
நடை பயிற்சி செய்து
செய்தித்தாள் வாசித்து
டிகிரி காப்பி அருந்தி
இரண்டு இட்டிலியும் 
கெட்டிச் சட்டினியும் உண்டு
பை தூக்கி
வேலைப் பார்க்க
அலுவலகம் சென்று
மாலை வீடு திரும்பி
பிள்ளைகளுடன் 
பேசி மகிழ்ந்து
எட்டு மணிக்கு
பசி தீர்த்து,
பத்து மணிக்கு
உறங்கச் சென்றான்
என் தந்தை.

சூரியன் நன்றாக
உதித்தப் பின்
கண் கூசுகிறதென்று
திரைச்சீலையை நன்றாக 
இழுத்து விட்டு
போர்வையால் முகத்தை மூடி
தூங்கியது பத்தாது என்று
இன்னும் அரைமணி நேரம் 
உறங்கி
பின், அவசர, அவசரமாக
பாதி வெந்த சீரியலை
முழுங்கி விட்டு
அலுவலகம் சென்று
இரவு உறங்கும் நேரம் 
வந்தப் பின் 
வீடு திரும்பி
தொலைக்காட்சி முன் 
அமர்ந்து
தட்டில் இருப்பது
என்ன என்று
அறியாமல் எடுத்து விழுங்கி
தூங்கும் பிள்ளைகளை
தொட்டு முத்தமிட்டு
பேய்கள் வெளிவரும்
நேரம் பார்த்து
உறங்கச் செல்கிறோம்
நாம். 
உடல் பயிற்சியிலும்
அட்டவனை
மனைவி , மக்களுடன்
பேசி மகிழவும்
அட்டவனை
உண்ணும் உணவிலும்
அட்டவனை .


இதற்கெல்லாம் மகுடம்,
என் பிள்ளையோ,
சூரியன் தலைக்கு மேல்
வந்தவுடன் எழுகிறான்
தொலைபேசி ஒன்றிலேயே
உலக வேலையை
முடிக்கிறான்
நடை பயில மறக்கிறான்
உரையாட மறுக்கிறான்
திரையை பார்த்தே
வாழ்க்கையை வாழ்கிறான்
தவறி மனிதர்களை 
நேரில் பார்த்தால்
வேற்று கிரகவாசியென
தவிர்க்கிறான்........

Tuesday, March 31, 2015

ஆச்சரியம்!!!!

கடமை,
கண்ணியம்,
கட்டுப்பாடு,
அன்பு,
பண்பு,
ஆளுமை,
ஆண்மை,
அரவனைப்பு,
கண்டிப்பு,
நேசம்,
பாசம்,
பசுமை,
தூய்மை,
விடாமுயற்சி,
அறிவு,
ஆற்றல்,
தன்னம்பிக்கை,
நட்பு,
அக்கறை,
தொலைநோக்கு,
மொழிப்பற்று,
அயரா உழைப்பு,
புரட்சி,
நம்பிக்கை,
சத்தியம்,
ஒற்றுமை,
கலாச்சாரம்,
எழுச்சி,
அரசியல்,
கட்டமைப்பு,
தலமைத்துவம்,
இளமை,
சுறுசுறுப்பு,
ராஜ தந்திரம்,

இவ்வளவு அர்த்தங்களா
இருக்கின்றன
லீ கான் யு என்ற உங்கள் பெயருக்குப் பின்னால்???


அன்புள்ள லீ கான் யு அவர்களுக்கு.....

அன்புள்ள லீ கான் யு அவர்களுக்கு,

கடந்த ஒரு வாரமாகவே நான் நானாக இல்லை. மனதில் ஏதோ இறக்கி வைக்க முடியாத பாரம். யாரிடமும் சொல்லி அழ முடியவில்லை. ஏனென்றால் எல்லோருமே இதே வலியையும் , வேதனையையும் அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் மரணப்படுக்கையில் இருந்த பொழுது கூட , எப்படியும் பிழைத்து விடுவீர்கள் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. செயற்கை சுவாசத்தில் நீங்கள் சுவாதித்துக்கொண்டு இருந்தபொழுதும் ஏதோ உயிரோடாவது இருக்கிறீர்களே என்ற நிம்மதி. அதுவும் நின்றபொழுது மனம் வலித்தாலும் உங்கள் உடலாவது எங்களுடன் இருக்கிறதே என்ற பெருமூச்சு. ஆனால் இன்று அந்த உடலும் கண்களில் இருந்து மறைந்துவிட்டது.


சொல்லி அழ வார்த்தை இல்லை, கதறி அழ கண்ணீரும் இல்லை, தழுவி அழ உங்கள் உடலும் இல்லை. ஏழு நாட்களாக மரப்பெட்டிக்குள் சூழ்நிலைக் கைதியாக இருந்த உங்களுக்கு இன்று விடுதலை.உங்கள் மேல் இரக்கப் பட்டு , அந்த காலன், உயிருடன் இருக்கும் வரை நீங்கள் ஓய்வெடுக்க போவதில்லை என்று அந்த உயிரை உங்களிடமிருந்து மீட்டுக்கொண்டானா என்று எனக்கு புரியவில்லை.நீங்கள் சாவா வரம் பெற்ற மார்க்கண்டேயனைப் போல் வாழ்வீர்கள் என்றல்லவா நாங்கள் நம்பி இருந்தோம். வானமே எல்லை என்றார்களே, நீங்கள் ஏன் அதையும் தாண்டி மறைந்துவிட்டீர்கள்?


கேளிக்கை நிகழ்ச்சிகளை தவிர வேறெதுவும் நெடுநேரம் தொலைக்காட்சி முன் அமர்ந்து பார்த்திராத என்னை என்ன வசியம் செய்து நாண்கு மணி நேரமும் ஒரே இடத்தில் அமர்ந்து உங்கள் இறுதி சடங்கை பார்க்கச் செய்தீர்கள்? கல்யாணச் சாவாகிய ஒரு தொன்னூறு வயது முதியவரின் இழப்பு எனக்குள் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. கடந்த ஏழு  வருட சிங்கப்பூர் வாழ்க்கையில் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளாததை இந்த ஏழு நாட்களுக்குள் மிகுதியாக அறிந்து கொண்டேன்.உங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய ஒரு பல்கலைக்கழகம் போதாது. உங்களைப்  பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள தொலைகாட்சியைப் பார்க்கிறேன், பத்திரிக்கையை படிக்கிறேன், வானொலியை கேட்கிறேன், நண்பர்களுடன் கலந்து பேசுகிறேன். எங்கெங்கெல்லாம் உங்கள் பெயர் உச்சரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் என் ஐம்புலனும் திரும்புவதை உணர்கிறேன்.  ஒரு தாயாக இருந்து உணர்கிறேன் உங்களைப் பெற்றத் தாய் எவ்வளவு பாக்கியசாலி என்று.


உங்கள் தாயின் மடி மீது தலைவைத்து உறங்க சென்றுவிட்டீர்களா? அல்லது ஆசை மனைவியின் தோல்சாய்ந்து ஓய்வெடுக்கச் சென்றுவிட்டீர்களா? பாதி தூரம் தானே எங்களுடன் நடந்து வந்தீர்கள், மீதிப்பாதியை நாங்கள் யாருடன் கைகோர்த்து கடந்து செல்வது? எங்கள் கூக்குரல் உங்கள் செவிகளுக்கு எட்டவில்லை என்று அந்த வருண பகவானையும் நாங்கள் துணைக்கு அழைத்து வந்தோமே. ஆனாலும் ஏன் செவி சாய்க்காமல் சென்று விட்டீர்? வேறு பிள்ளைகளை தத்து எடுக்க வேறு இடம் சென்றுவிட்டீர்களா?? சாமி இல்லா கோவிலாக உணர்கிறேன். இந்த வெற்றிடம் நிரம்ப வேண்டுமென்றால் மீண்டும் வந்து விடுங்கள், எங்களுடன் தங்கிவிடுங்கள்.

இப்படிக்கு,
உங்கள் மறு வரவிற்காக காத்துகிடக்கும்,
பல்லாயிர உள்ளங்களில் ஒர் உள்ளம்.

Wednesday, March 18, 2015

சொர்கம்

உன்னை சீராட்டி,பாராட்டி,
பாலூட்டி, சோறூட்டி
வளர்த்தேன்.
நீ உறங்குகிறாயா என்று
ராவெல்லாம் கண்முழித்து
பார்த்தேன்.
உன் உடம்புக்கு ஒன்றென்றால்
உண்ணாமல் உருகினேன்.
இவை யாவும்
கடமை என்று
நினைக்கவில்லை
வரம் என்றே நினைத்திருந்தேன்.


இன்று என் கூடு
வெறும் கூடு
உனக்கென்று தனி கூடு
நான் உனக்கு
செய்ததை
நீ எனக்கு
செய் என்றால்
மாற்றாந்தாய் ஆகிவிடுவேன்.

நீ என் வீடு
வரும் நாளில்
என் அருகில்
அமர்ந்து
ஒரு ஐந்து நிமிடம்
என் ரத்தம் சுண்டிய
சுறுங்கிய கையை
உன் கைகளுக்குள்
இறுக வைத்து மூடிக்கொள்.
அம்மா என்று ஆசையாய்
ஒரு வார்த்தை.
என் கண்களுக்குள்
ஒளிந்திருக்கும்
உன்னை ஒரு நிமிடம்
உற்றுப்பார்
போதுமடா
வாழ்நாளில்
அந்த ஒரு நிமிடம்.
என் வீட்டுக்குள்
வந்திடுமே
சொர்கமுமே!!!

Saturday, March 14, 2015

கேள்வி ஞானம்

தோழி ரம்யாவிடமிருந்து , அவரின் “அகம்” புத்தக வெளியீட்டுற்கான அழைப்பிதழ் வந்தது. சனிக்கிழமை என்பதால் நானும்,  ரவியும் போகலாம் என்று முடிவு செய்து பிள்ளைகளை வீட்டில் படிக்க சொல்லிவிட்டு(??) கிளம்பிச் சென்றோம். வெளியில் போகும் போது “டிவி பார்க்காமல், செல்போனில் விளையாடாமல் படிக்க வேண்டும் ” என்று தேய்ந்த ஒலிப்பேழையாய் சொல்வது பழக்கமாகி போனது. அவர்களுக்கும் அது செவிடன் காதில் ஊதிய சங்கை போல் ஆகிவிட்டது. 

புத்தக வெளியீட்டு விழாவில் அய்யா சொ.சொ.மீ . சுந்தரம் , அவர்களின் பேச்சு இடம்பெற்றிருந்தது. அய்யாவை முன் பின் பார்த்ததோ, அவரைப் பற்றி கேட்டதோ இல்லை. எனது அறிவீன்மைக்கு முக்கிய காரணம், நான் இலக்கியவாதியோ, படிப்பாளியோ, படைப்பாளியோ இல்லை. நான் ஒரு சராசரி இல்லத்தரசியாகவே காலம் கழித்தாகி விட்டேன். வீடு, குழந்தைகள் , குடும்பம் தான் என் உலகமாகி போனது. இது, என் அறிவை நான்  வளர்த்துக்கொள்ளாமல் மழுங்கி போனதற்காக நான் கூறும் சாக்கு. நொண்டிக் குதிரைக்கு சறுக்கினதெல்லாம் சாக்காம்!! ஒரு மாறுதலுக்காகவே ரவி என்னை அழைத்துச்சென்றார். ரவிக்கு புத்தகம் என்றால் கொள்ளை பிரியம். என் குழந்தைகளையும் எப்படியோ புத்தகப்புழுக்களாக வளர்த்துவிட்டேன். ஒரு காலத்தில் புத்தக புழுவாக இருந்த நான் இப்பொழுது வெறும் புழுவாகி போனேன். புத்தக வெளியீட்டிற்கு சென்ற பின் தான் அது எவ்வளவு ஒரு அழகான அனுபவம் என்பதை உணர்ந்தேன். அய்யாவை முதலில் என் கண் எடை போட்டது. ஒரு எழுபது வயது பெரியவர். கறுத்த தேகம் , சிரித்த முகம். வெள்ளை வேட்டிச் சட்டை.  சரி இந்த பெரியவர் தூய தமிழில் பேசப்போகிறார் என்று நினைத்து உடல் அரங்கிலும், உள்ளம் வீட்டிலுமாக அமர்ந்து இருந்தேன். அய்யா புத்தகத்தை பற்றியும், அதன் எழுத்தாளர் ரம்யாவை பற்றியும் ஒரு சிறிய உரையாற்றினார். அழகு தமிழில், புரியும் படியான தெளிவான அவரது பேச்சும், கனீர் என்ற அவரது குரலும்,  என்னை மிகவும் கவர்ந்தது. மனம் வீட்டிலிருந்து அரங்கிற்கு பறந்து வந்து அமர்ந்தது.அவரது அந்த சிறிய உரையில்  தான் எவ்வளவு ஆழமான கருத்துக்கள்.இவ்வளவு காலம் துரு பிடிக்க விட்ட என் மூளையை கசக்கி பிழிய வேண்டும் என்று தோன்றியது. அதனால், மறுநாள் அய்யா அவர்கள், டேங் ரோடு முருகன் கோவிலில் ஆற்றவிருந்த  திருச்செந்தூர் முருகனைப் பற்றிய ஆன்மீக சொற்பொழிவிற்கு போக முடிவு செய்தோம். உடனே நீங்கள் என்னை ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவள் என்று அவசரமாக தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள்.

சிறு வயது முதலே கோவிலுக்கு போவது எனக்கு வழக்கம். இதை யாரும் எனக்குள் திணிக்க வில்லை. பள்ளிக்கு அருகில் இருந்த ஓம்சக்தி மடத்தில் எந்நேரம் சென்றாலும் கல்கண்டு கொடுப்பார்கள். அப்படித்தான் கோவிலுக்குள் ஈர்க்கப்பட்டேன். பல நேரங்களில் பிரசாதத்திற்காகத்தான் கோவிலுக்குப் போன அனுபவம். என்னை ஆன்மீக பாதையில் வழி நடத்தியதில், என் சிறு வயது தோழி ரங்க லக்ஷ்மிக்கு பெரும் பங்கு உண்டு. அவர்கள் வைணவர்கள். கிருஷ்னரை குழந்தையாகவே காண்பார்கள், பேசுவார்கள், உணவு ஊட்டுவார்கள், தூங்க வைப்பார்கள். நான் என்னவோ, பிறப்பு முதல் இறப்புவரை கடாவெட்டி சாமிக்கு படைக்கும் வர்க்கத்தில் வந்தவள். அறுவாளை சுவற்றில்  தொங்கவிட்டு அதற்கு மதுரைவீரன், ஐய்யனார் என்று பெயர் வைத்து வழிபடும் குடும்பத்தில் பிறந்தவள். அம்மா, அக்கம் பக்கம் உள்ளவர்களை பார்த்து முருகன், பிள்ளையார், அம்மன் என்று சில சாமி படங்களை வைத்து வழிப்பட்டார்கள். சாமிக்கென்று மாடம் இருந்ததே தவிர சாமிக்கென்று தனி அறை எல்லாம் இருந்தது இல்லை. ரங்க லக்‌ஷ்மியின் வீட்டில் சாமிக்கென்று ஒரு தனி அறை. சாமி தூங்க ஊஞ்சல். சாமிக்கு ஆடை அலங்காரங்கள், உணவு படைக்க அழகிய தாம்பூள தட்டுக்கள் என்று,  பார்க்க , பார்க்க ஆசையாக இருக்கும். பலமுறை ரங்க லக்‌ஷ்மியுடன் கோவிலுக்கு சென்றதால் தானாகவே எனக்குள் ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாயிற்று.


பிரசாதத்திற்காக கோவிலுக்கு போன காலம் போய் இப்பொழுது ஆண்டவனை தரிசிக்கவே கோவிலுக்கு போகிறேன். தேவைகளும், வேண்டுதல்களும், கோரிக்கைகளும் பெருக பெருக கோவிலுக்குச் செல்லும் நாட்களும் அதிகரித்து விட்டது. வீட்டில் யார் வருகிறார்களோ இல்லையோ எல்லோர் சார்பிலும் நான் போய்வருகிறேன்.  வயது ஆகி கொண்டிருக்கிறது என்பதன் அடையாளமாகக் கூட இது இருக்கலாம். என்னால் தீர்வு காண முடியாத பல பிரச்சனைகளை கடவுளிடம் சமர்ப்பித்து விட்டு ‘ராமா’ என்று அமர்ந்துவிடுகிறேன். எவ்வளவு குறைகூறினாலும், கோரிக்கை வைத்தாலும், கடவுள் மட்டும் ‘ஏன் புலம்புகிறாய், பிதற்றுகிறாய், அழுகிறாய் என்று கேட்கப்போவதில்லை.அழுது புலம்பினாலும் சரி, மகிழ்ச்சிக்கடலில் குளித்தாலும் சரி , திட்டி தீர்த்தாலும் சரி, எல்லாவற்றிற்கும் ஒரே ஒரு புன்னகை மட்டுமே பதில். அதனால் தான் மனிதர்களை காட்டிலும் கடவுளை நாம் நம்புகிறோம். கேள்வி ஏதும் கேட்காமல் கடவுளை நம்பத்தெறிந்த எனக்கு கண்ணப்பனார் போன்ற பக்தி நிறையவே உண்டு. ஆன்மீக கதைகளோ, பாட்டுக்களோ, சுலோகங்களோ எனக்குத் தெரியாது. நூத்தியெட்டு போற்றிகளை தவிர நீளமானவற்றை படிக்கும் பொறுமையும் இல்லை. எந்த பூசையை எந்த முறைப்படி செய்ய வேண்டும் என்பது கூட எனக்கு தெரியாது. கோவிலுக்கு போனால் தேங்காய் உடைத்து அர்ச்சனை கூட செய்ய மாட்டேன். ஏன் தெரியுமா? தேங்காய் அழுகியிருந்தால் நல்லது அல்ல என்று சிறுவயது முதல் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதை நான் நம்புகிறேனா இல்லையா என்பது இல்லை . எதற்கு தேவையில்லா சந்தேகம் என்று விளக்கு மட்டுமே ஏற்றி வைத்து கும்பிட்டுவிட்டு வந்துவிடுவேன். கஷ்டம் மிகுந்தால் கந்த சஷ்டியே துணை எனக்கு. வீட்டில் சாமிக்கு வைக்கும் பிரசாதத்தை கூட ருசி பார்த்து விட்டுத்தான் வைப்பேன். சாமி மட்டும் இனிப்பு, புளிப்பு, உப்பு கம்மியாக எப்படி உண்ண முடியும்? இப்படிப்பட்ட உறவு தான் கடவுளுக்கும் எனக்கும் உள்ள உறவு.


சரி, சொல்லவந்த விஷயத்திற்கு இனி வருவோம்.ஞாயிறு அன்று சாயங்காலம் ஏழு மணிக்கு அய்யாவின் பேச்சை கேட்க முருகன் கோவிலுக்குச் சென்றோம். முதலில் முருகனுக்கு ‘ஓ’ போட்டுவிட்டு பின் சொற்பொழிவை கேட்க போகலாம் என்று கோவிலை சுற்றினோம். ரவிக்கு அவசரம்...எங்கே அய்யாவின் பேச்சை ஆரம்பம் முதல் கேட்க முடியாதோ என்று நினைத்து அவர் மட்டும் முன்னே சென்றார். முருகனிடம் மட்டும் கோரிக்கைகளையும் , நன்றியையும் தெரிவித்துவிட்டு போனால் பின் சிவன், துர்க்கை, வினாயகர் எல்லோரும் நம்மை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்களோ என்று அவர்களுக்கும் ‘ஓ’ போட்டுவிட்டு பின் அவசர அவசரமாக நவகிரகங்களை ஒன்பது முறை சுற்றிவிட்டு, அய்யாவின் பேச்சை கேட்கச் சென்றேன். சொற்பொழிவு ஆரம்பித்து ஒரு பத்து நிமிடங்கள் கழித்துத்தான் நான் போயிருப்பேன்.

ரவி எனக்காக இடம் பிடித்து வைத்திருந்தார். அய்யாவின் சொற்பொழிவு தொடங்கி இருந்தது.போய் அமர்ந்தது தான் எனக்கு தெரியும். அடுத்த ஒன்றறை மணி நேரம் எப்படி போனது என்றே எனக்குத் தெரியவில்லை. பொதுவாக அரைமணி நேரத்திற்கு மேல் ஒரு இடத்தில் அமர்வது என்பது எனக்கு கொஞ்சம் கஷ்டம். வீட்டில் கூட என் தந்தை,”ஏன் இப்படி குட்டி போட்ட பூனையைப் போல் அலைந்து கொண்டே இருக்கிறாய்? ஒரு இடத்தில் உட்கார மாட்டாயா?” என்று கேட்பார்கள். நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் நேரம் மட்டும் இதற்கு விதிவிலக்கு. அய்யாவின் பேச்சு மழையில் நனையத்துவங்கிய எனக்குள் என்ன ஆனது என்று எனக்கு விளங்கவில்லை. திருச்செந்தூர் முருகனைப் பற்றி அவர் ஒவ்வொரு விஷயமும் சொல்ல சொல்ல அம்முருகனே என் கண்முண் தோன்றினான். ‘சொல்ல சொல்ல இனிக்குதையா ‘ என்று அய்யா சொற்பொழிவாற்ற, ‘கேட்க கேட்க இனிக்குதையா’ என்று நான் மெய்மறந்து அமர்ந்து இருந்தேன். ரவியும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஆன்மீகத்தில் ஈடு பாடு உடையவர் அல்ல. குளித்துவிட்டு இரண்டு நிமிடங்கள் தான் கடவுளின் முன் நிற்பார். ஆனால் அவரும் அய்யாவின் பேச்சில் மயங்கி ரசித்துக்கொண்டிருந்தார். அய்யா , முருகனைப் பற்றி கூறிய கதைகளில் லயித்தாரா அல்லது அய்யாவின் அழகிய தமிழுக்கு மயங்கி அமர்ந்து இருந்தாரா என்று தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். ரவிக்கு இஷ்ட தெய்வம் முருகன் எனவே இரண்டுக்காகவும் தான் அவர் அமர்ந்து இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

சிறு வயதில் திருச்செந்தூர் சென்று இருக்கிறேன். கடலைத் தவிர வேரெதுவும் பெரிதாக நினைவில் இல்லை. ஆனால் அய்யா முருகனைப் பற்றிப் பேச பேச என்னால் என் மனக்கண் முன் திருச்செந்தூர் முருகனை கையில் பூவுடன் காணமுடிந்தது. அய்யாவின் பேச்சு ஆன்மீக சொற்பொழிவா, இல்லை கவியரங்கமா, இல்லை நாடக அரங்கேற்றமா என்று எனக்கு பாகு படுத்த தெரியவில்லை. இயல் , இசை , நாடகம் எல்லாமாக அது இருந்தது. நடித்தும் காட்டினார், பாடியும் காட்டினார், அபிநயம் பிடித்தும் காட்டினார். முருகனை பற்றி கூறுகையில் பல கிளைக்கதைகளையும் கூறினார். அருனகிரி நாதரின் பெயரை மட்டுமே கேட்டு இருந்த எனக்கு அவரின் புராணம் அன்று தான் தெரியவந்தது. எவ்வளவு கிளைக்கதைகள் கூறினாலும் கடைசியில் முருகனை சுற்றியே வலம் வந்தார்.. பாரதி முதல், கிருபானந்தவாரியார் வரை எல்லோரை பற்றியும் ஓரிரு வரிகள் கூறினார். அது , அவர்களின் மீது அவர் வைத்து இருந்த பற்றையும், மரியாதையையும் அவரின் ஞானத்தையும் விளக்கியது. பேச்சில் என்ன ஒரு கோர்வை, நகைச்சுவை உணர்வு, தமிழ் உச்சரிப்பில் தான் என்ன ஓர் அழகு, தெளிவு. நடையில் எளிமை, ஞானத்தில் ஆழம். முருகனைப்பற்றியும் அறிந்து இருந்தார், அம்பாளைப்பற்றியும் அறிந்து இருந்தார், கிருஷ்னரை பற்றியும் படித்திருந்தார். இவ்வளவு தெளிவான தமிழை பேசக்கேட்டு பல வருடங்கள் ஆகியிருந்ததால் மகுடிக்கு மயங்கிய பாம்பென நான் மயங்கி கிடந்தேன். பள்ளியில் தமிழம்மாவின் தெள்ளத்தெளிந்த தமிழும், அவர் பாடம் எடுத்த நயமும் நினைவிற்கு வந்து போயிற்று. கூடவே, தமிழம்மாவை எவ்வளவு கேலி , கிண்டல் செய்தோம் என்பதும் நினைவிற்கு வந்தது. தமிழம்மா பாடம் எடுக்கும் பொழுது உணர்ச்சி வசப்பட்டு செய்யுளை வாசித்துக்கொண்டோ அல்லது விளக்க உரையை விளக்கிக்கொண்டோ வகுப்பறையை விட்டு வெளியே போனது கூட அறியாது ஈடுபாட்டுடன் பாடம் எடுப்பார். அந்த சிறு இடைவெளியை பயன்படுத்திக்கொண்டு நாங்கள் உணவு உண்பதும் உண்டு. ஆனால் அய்யா பேசிய பொழுது ஒரு சிறு இடைவெளிகூட இல்லாமல் பேசினார்.அய்யாவின் பேச்சில்  பல நேரங்களில் என் கண்கள் நிரம்பின. அதற்கு காரணம், அவரின் உரையின் தாக்கமா அல்லது அந்த முருகப்பெருமானே என் கண் முன் தோன்றிய மகிழ்ச்சியா என்பதை யான் அறியேன் பராபரமே!!

சொற்பொழிவு முடிந்த பொழுதுதான் எனக்கு புரிந்தது , என் அறிவு கடுகினும் சிறியதென்று. எவ்வளவு புத்தகங்கள் அய்யா படித்திருந்தால் இப்படி பட்ட வற்றாத நதியாக அவரின் ஞானத்தை பிறருடன் பகிர்ந்துகொள்ள முடியும். என்னைப்போன்ற சாதாரனமானவர்களுக்கும் புரியும் படியாக மட்டுமல்லாமல் ஈர்க்கும் படியாகவும் ,  எளிமையான நடையில் எவ்வளவு அழகாக உரையாற்றினார். அறிவாளியாக மட்டும் இருப்பது பெருமை இல்லை. தம் அறிவை பிறருடன் பகிர்ந்துகொள்வதில் திறனாளியாக இருப்பதே பெருமை. பழமையும் , புதுமையும் கலந்த கலவையாய் அவரின் உரை இருந்தது. அய்யா அவர்கள் என் ஆன்மீக அறிவுக்கு தீனி போட்டார்கள், கோவில் நிர்வாகம் வயிற்றிற்கு உணவு போட்டு அனுப்பிவைத்தார்கள். மனம் அய்யாவை வாழ்த்தியது, வயிறு கோவில் நிர்வாகத்தை வாழ்த்தியது. தமிழ் நாட்டில் இருந்திருந்தால் கூட இப்படி பட்ட பாக்கியம் கிட்ட வாய்ப்பில்லை.

வீட்டிற்கு புறப்படுகையில் எனக்குள் ஒரு ஏக்கம். நமக்கு கிட்டிய இந்த வாய்ப்பும் வரப்பிரசாதமும் நம்முடைய அடுத்த சந்ததியரை எப்படி சென்றடையும்? கோவிலுக்கு மாதம் ஒரு முறை கூட வர முடியாத ஓட்டப்பந்தய வாழ்க்கையை ஓடும் இவர்களை எப்படி பிடித்து நிறுத்துவது? நம் பிள்ளைகளுக்கு எப்படி பக்தியை ஊட்டுவது? பீட்சாவும், பர்கரும் சாப்பிடும் இவர்களை பிரசாதம் கிடைக்கும் என்று சொல்லிக்கூட கோவிலுக்கு அழைத்து செல்ல முடியவில்லை. நாம் வீட்டிற்கு பத்திரமாக பக்தியோடு எடுத்துவரும் பிரசாதத்தை கூட நுனி நாக்கில் மட்டும் படும் படி நக்கிவிட்டு சென்று விடுகிறார்கள். தமிழே பேசாத இவர்கள் எப்படி இப்படி பட்ட அழகான அற்புதமான சொற்பொழிவுகளை ரசிக்க முடியும்?வாழ்க்கையில் பொறுப்பு, பருப்பு, வந்து விட்டால் அவர்களும் பக்தி மார்கம் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை மட்டும் தும்பிக்கையாய் எனக்குள் இருக்கிறது. பக்தி விதையை அவர்களுக்குள் விதைத்து வைத்திருக்கிறேன். அது என்றைக்கு செடியாகி, மரமாகும் என்பதை காலம் தான்  முடிவு செய்யவேண்டும். கிருத்தவர்களும் முகமதியர்களும், தாய்ப்பாலுடனேயே பக்திபாலையும் ஊட்டிவிடுகிறார்கள் போலும். பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் , வாரம் ஒரு முறையாவது அவர்கள் தேவாலயத்திற்கும், மசூதிக்கும் தவறாமல் சென்று விடுகிறார்கள். ஆனால் என் வீட்டுப் பிள்ளைகள் பரீட்ச்சைக்குப் போகும் போது மட்டுமே சாமியை பார்க்கிறார்கள். அய்யா அவர்கள், “கடவுளைப் பற்றி பேசா நாள் எல்லாம் பிறவா நாளே” என்பாராம். பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற அவர் தமிழின் பால் ஈர்க்கப்பட்டும், ஆன்மீகத்தின் பால் ஈர்க்கப்பட்டும் தமிழ் தொண்டும், ஆன்மீகத்தொண்டும் சேர்ந்தே இந்த வயதிலும் செய்து கொண்டு இருக்கிறார். எனக்கு  தமிழுக்கு தொண்டு செய்யும் அளவுக்கு அறிவு இல்லை. ஆன்மீகத்தை பொறுத்தவரை என் தோழிகள் பலரை கோவிலுக்கு அழைத்துச் சென்று அதை அவர்களுக்குள் ஒரு பழக்கமாகியிருக்கிறேன். 

சொற்பொழிவு கேட்கும் மட்டும் தெளிந்த நீரோடையாக இருந்த என் மனதில் ஒர் சிறு கல் வந்து விழுந்து சில எண்ண அலைகளை புரளச்செய்தது. சிந்தனை பலவுடன் வீடு வந்தடைந்த எங்களை பார்த்து என் பிள்ளைகள் கேட்ட கேள்வி, “What kept you so long ? How come you spent so much time in the temple today?"  என்ன சொல்லி புரியவைப்பது என்று அறியாமல், நான் செந்தமிழில் சுவைத்த  அர்த்தம் பொதிந்த அந்த நிகழ்வை அந்நியமொழியாம் ஆங்கிலத்தில் விளக்கி கூற பொறுமை இன்றி,”We went to attend a spiritual discourse" என்று மட்டும் கூறினேன்.   மற்ற எப்பொழுது இல்லாத ஒற்றுமை அக்கா, தம்பிடம் காண முடிந்தது அவர்கள் கூறிய, “Boring" என்ற வார்த்தையில். அவர்கள் வயது அப்படி , என் வயது இப்படி என்று நினைத்துக்கொண்டு உள்ளே சென்றேன்..... உடம்பு வீட்டுக்குள் வந்துவிட்டது மனம் என்னமோ திருச்செந்தூருக்கு பயணச்சீட்டு இல்லாமல் போய் விட்டது!!!!!

Wednesday, March 11, 2015

விற்பனைக்கு அல்ல

விற்பனைக்கு அல்ல
விற்பனைக்கு இருப்பவை
மட்டுமே
வாங்குவதற்கான
பொருள்,
மற்றவற்றை
வாங்குவதற்கோ
திருடுவதற்கோ
சூறையாடுவதற்கோ,
அழிப்பதற்கோ,
யாருக்கும் உரிமை
இல்லை -இதில்
பெண்மையும் அடக்கம்.....

Monday, March 9, 2015

பெண் விதை

பெண் விதை


செடியாக , மரமாக
வளரத்தானே
விதைத்தீர்கள்
பின் ஏன்
முளைக்கும் முன்னரே
கிள்ளி எறிந்தீர்?
தவறி முளைத்த பின்னும்
ஏன் வெட்டி களைந்தீர்?
உரங்கள் பல இருக்க
எங்களுக்கு மட்டும் ஏன்
கள்ளிப்பால் மட்டுமே
தெளித்தீர்?
வீட்டுக்கு ஒரு
மரம் வளர்ப்போம்
என்றார்களே,
அது என்ன
ஆண் மரங்களை
மட்டுந்தானா?
எங்களையும் வளரவிட்டுப்
பாருங்கள்,
நாங்கள், பூக்கள் சொரியும்
செடிகளாக,
நிழல் தரும் மரங்களாக,
காய், கனி நல்கும்
தோப்பாக மாறமுடியும்.
தாமாக எங்களை
முகரத்துனியாதீர்,
நாங்களாகவே உங்களைச் சுற்றி
நல்ல சுகந்தத்தை
அள்ளி வீசுவோம்.
அழகாக வளரவிட்டுப் பாருங்கள்
எங்களை,
பின் நீங்களும் அற்புதமாக வளர்வீர்கள்!!!!!!

யாதும் உருவே!!!

யாதும் உருவே!!!


தென்றலாய் வருடுவதா,
புயலாய் வீசுவதா?
அலையாய் தொடுவதா,
ஆழிப்பேரலையாய் அழிப்பதா?
நிலவாய் குளிர்விப்பதா,
சூரியனாய் சுட்டெரிப்பதா?
மயில் இறகாய் வருடுவதா,
தேளின் கொடுக்காய் கொட்டுவதா?
பூவாய் மனம் வீசுவதா,
முட்களாய் குத்துவதா?
தேனாய் இனிப்பதா,
எட்டிக்காயாய் கசப்பதா?
தீபமாய் ஒளிவீசுவதா,
மின்னலாய் குருடாக்குவதா?
புல்லாங்குழலாய் இசைப்பதா,
போர் முரசாய் முழங்குவதா?
ஆல விழுதாய் தாங்குவதா,
பாசக்கயிறாய் இறுக்குவதா?
குழந்தையாய் கொஞ்சுவதா,
ராட்சசியாய் மிஞ்சுவதா?
காளியாய் மாறுவதா,
காமாட்ச்சியாய் காட்சியளிப்பதா?
எல்லாம் உங்கள் கையில்.......