Sunday, November 27, 2016

வேதங்கள் பொய்பதில்லை!!

என் தாய்,
பெண்ணியத்தை
காதில்
வேதமாய்
ஓதினாள்!
நானோ,
காகிதத்தில்
வார்த்தையாய்
வார்த்தேன்!
என் மகளோ,
வாழ்க்கையாய்
வாழ்கிறாள்!
பாட்டி நான்கடி,
தாய் எட்டடி,
குட்டியோ
பதினாறடி!!
ஆம்
வேதங்கள்
என்றும்
பொய்பதில்லை!!

Tuesday, November 22, 2016

நிழல் பேசுகிறது!!

நிஜத்துடன் ஜனனம்
நிஜத்துடன் மரணம்...
கருவறை நான் கண்டதில்லை,
கல்லறை எனக்கு புதிதில்லை!

உன் உயரம் உன் மரபணுவில்,
நான் வளர்வதும், தேய்வதும்,
வாழ்வதும், வீழ்வதும்
ஒளியின் வழியில்!
வண்ணமிகு ஆடை நீ அணிந்தபோதும்
என் உடை என்றுமே கருமைதான் !

நீ ஒருவன் தான் என்றாலும்
சில நேரங்களில் உனக்காக நான்
இரட்டைப் பிறவி எடுக்கின்றேன்!
உன் முன்னும், பின்னும்
உனக்கு காவலாய் வருகின்றேன்!

தீண்டாமை நான் அறிந்ததில்லை,,
பேதம் நான் பார்த்ததில்லை!
உயிரற்ற பொருளுக்கும் என்றும்
நான் துணையாவேன்!

நீ செய்யும் யாவையும்
மெளனமாய் செய்கின்றேன்!
அடக்கி  எனை நீ ஆண்டாலும்
விடுதலை நான் வேண்டவில்லை!!
ஒளி படைத்த என் உருவம்
ஒலியின்றி தான் வாழும்!!
நீ சுமக்கும் பாவ , புண்ணியம்
நான் சுமந்து மரிப்பதில்லை!

எனக்கும் உண்டு ஓர் ஆசை!
உருவம் கொண்ட எனக்கு
வேண்டும் ஓர் மனது!
அது மட்டும் கிட்டிவிட்டால்
நீ வேறு , நான் வேறு!
நானும் நிஜமாக மாறிவிடுவேன்,
நானாக வாழ்ந்து விடுவேன்!!


Saturday, November 19, 2016

வரப்பிரசாதம்!!

தினம் காலை சிறிது நேரம் உடற் பயிற்சி செய்வது எனக்கு வழக்கம். மிகவும் பிடித்துப் போய் ஒன்றும் நான் செய்வதில்லை. கடமையே என்று செய்வேன். இல்லையேல் எண்ணையில்லா சக்கரம் போல் எல்லா பாகமும் இருக்கமாக இருப்பது போன்ற உணர்வு. அது மட்டுமில்லாமல் இது  பல வருடங்களாக நான் செய்து வருவது. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை போன்றது. இப்படி உடற்பயிற்சி செய்யும் பொழுது டிவி பார்த்துக்கொண்டே செய்வது பழக்கமாகி போனது. அப்படி செய்வதனால் உடற் பயிற்சி ஒரு பளுவாக தெரிவதில்லை.

அப்படித்தான் இரண்டு  நாட்களுக்கு முன் சன் டிவியில் “குட்டீஸ் சுட்டீஸ்” பார்த்துக்கொண்டே உடற் பயிற்சி செய்து கொண்டிருந்தேன். எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி அது. என் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டதால் வீட்டில் மழலையின் குரல் கேட்க வாய்ப்பே இல்லை. வீட்டில் கல கல என்று பேசும் மகள் கல்லூரிப்  படிப்பு படிக்கச் சென்று விட்டாள். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகனுக்கோ கைத்தொலைபேசியை கீழே வைப்பதற்கே நேரம் போதுமானதாக இருப்பதில்லை. அப்படி இருக்க மழலை குரல் கேட்கவே நான் குட்டீஸ் சுட்டீஸ் பார்ப்பேன். குழந்தைகளின் குழந்தைத்தனமான பேச்சு நம் மனதில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி படைத்தது. அந்த நிகழ்ச்சியை பார்க்கும் பொழுது நான் என்னை மறந்து சிரிப்பது உண்டு.


அந்த நிகழ்ச்சியை வழி நடத்தும் அண்ணாச்சி குழந்தைகளை பல கேள்விகள் கேட்பார். அந்த மழலைகளும் அழகாக பதில் சொல்வார்கள். சில வேலைகளில் அதிகபிரசங்கிதனமான பதில்களும் வரும்.அன்று  குழந்தைகளிடம், “உங்கள் வீட்டில் உங்களை  எப்படிம்மா செல்லமாக கூப்பிடுவார்கள்?” என்று கேட்டார். குழந்தைகள் ,”கண்ணே, மணியே, செல்லம்,” என்று பல பதில்களை கூறின. ஒரு பெண் குழந்தை,”என் அப்பா என்ன ராசாத்தினு சொல்லுவார்,”என்று அழகாக கூறியது. அதற்கு அண்ணாச்சி,” சரிமா, உங்க அப்பா உன்ன ராசாத்தினு கூப்பிடுவார், உங்க அம்மா உன்ன என்னனு கூப்பிடுவாங்க?”என்று கேட்டார். அதற்கு  மனம் முழுதும் சந்தோஷமுடன் கண்கள் சுருங்க சிரித்துக்கொண்டே அக்குழந்தை,”என்ன எங்க அம்மா வரப்பிரசாதோ, வரப்பிரசாதோனு கூப்பிடுவாங்க,” என்று அழுத்தமாக கூறியது.


அந்த பதிலை கேட்ட உடனேயே நான் அசந்து போனேன், ஆச்சரியப்பட்டு போனேன்.  கேட்ட மாத்திரத்தில் நான் என் உடற்பயிற்சியை நிறுத்திவிட்டு ஒரு நிமிடம் கண்கொட்டாமல் டிவியையே உற்றுப்பார்த்தேன். அக்குழந்தையின் அம்மாவை காண்பிப்பார்களா என்று பார்க்க ஆசையாக இருந்தது. அந்த தாயை ஃபோகஸ் செய்து காண்பித்தார்கள்.  அவர்கள் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். அண்ணாச்சி உடனே,” வரப்பிரசாதம் என்றால் என்ன அர்த்தம்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள்,”பிரஷ்சியஸ்” என்ற ஆங்கில வார்த்தையை கூறினார்கள். வரப்பிரசாதம் என்ற தமிழ் வார்த்தையில் புதைந்து இருந்த அழகு, கவிதை, இசை, இன்பம் யாவும் “பிரஷ்சியஸ்” என்ற ஆங்கில வார்த்தையில் கிடைக்கவில்லை. என்ன அழகான வார்த்தை ஒரு குழந்தையை கொஞ்சுவதற்கு. இது வரை நான் யாரும் இப்படி கூப்பிட்டு கேட்டதில்லை.  அழகான வார்தை மட்டும் அல்ல அதில் அவ்வளவு அர்த்தங்கள் பொதிந்து கிடந்தது. இப்படி ஒரு அழகான வார்த்தையை தன் குழந்தையை கொஞ்ச ஒர் நாளைக்கு நூறு முறை உபயோகிக்கும்  அந்த தாயை பாராட்டுவதா, இல்லை தமிழ் மொழிக்கு மட்டுமே உரித்தான இந்த அழகியலை வர்ணிப்பதா? வார்தையிலேயே உணர்வுகளின் வெளிப்பாட்டை தமிழ் மொழியால் மட்டும் தான் அழகாகவும் ,அழுத்தமாகவும் கொண்டு  வர முடியும்


பெண் பிள்ளைகள் என்றால் கருவிலேயே கல்லறைக்கு அனுப்பும் சமூகத்தில் தனக்கு பிறந்த பெண் பிள்ளையை அப்பா “ராசாத்தி” என்றும், அம்மா காணக்கிடைக்காத , தவம் இருந்து வரம் கேட்டு கிடைக்கப்பெற்ற பிரசாதமாக,”வரப்பிரசாதம்” என்று கொஞ்சுவதை கேட்டது மனதுக்குள்   நெகிழ்வை ஏற்படுத்தியது. அம்மா தன்னை வரப்பிரசாதம் என்று கூப்பிடுவதை எவ்வளவு சுகமாக சுகிக்கிறது  அக்குழந்தை என்பது  வரப்பிரசாதம் ,வரப்பிரசாதம் என்று இரண்டு முறை அழுத்தி கூறியதிலிருந்தே தெரிந்தது.  நானே பல முறை “வரப்பிரசாதம்,வரப்பிரசாதம்” என்று கூப்பிட்டு பார்த்தேன். ஒவ்வொரு முறை உச்சரித்த பொழுதும் மனதில் ஒரு பரவசம் --தாய்மையின் வெளிப்பாடு இது தானோ!


இரண்டும்  பெண் பிள்ளைகளாக பிறந்து விட்டது என்று என் தந்தையை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள என் பாட்டி தாத்தா எவ்வளவோ கட்டாயப்படுத்தியும் என் தந்தை அதற்கு சம்மதிக்கவில்லை. ஆனால் அவரின் மனதில் ஓர் ஆண் மகனுக்காக ஏக்கம் இருக்கத்தான் செய்தது. அதற்காக என்னையும் என் தங்கையையும் அவர் ஒரு பொழுதும் சுமையாக பார்க்கவில்லை. அதற்காக எங்களை வாங்கி வந்த வரமாகவும் கொண்டாடவில்லை. கடவுள் தனக்கென விதித்தது என்று ஒர் சராசரி மனிதனைப்போல்  ஏற்றுக்கொண்டார்.  எந்த குறையும் இன்றி எங்களை வளர்த்தார். இரண்டுப் பெண் பிள்ளைகளுக்குப் பின் ஓர் ஆண்பிள்ளை பிறக்குமா என்று மூன்றவதாக பெண் பிள்ளை பெற்ற சிலர் என் உறவிலே உண்டு. அப்படி எதுவும் செய்யாமல் என் தந்தை,”நாம் இருவர் நமக்கிருவர்”என்று முடிவெடுத்துவிட்டார்.


என்னைப் பொறுத்த வரை பெண் பிள்ளை பெற்றவர் யாவரும் வரம் வாங்கி வந்தவர்கள், கொடுத்து வைத்தவர்கள். அதற்காக ஆண் பிள்ளை மட்டும் பெற்றவர்கள் பாவம் செய்தவர்கள் என்பதல்ல என் கருத்து. சில வீடுகளில்    மகனே மகளாகிறார். என் தந்தை அப்படி பட்ட ஒருவர் தான். இரண்டு தம்பிகள்,இரண்டு தங்கைகள் என்று கூடப்பிறந்தவர்களோடு பிறந்திருந்தாலும் சிறு வயதில் என்   பாட்டிக்கு தண்ணீர் தூக்கி கொடுத்ததிலிருந்து, வாசலில் சாணம் தெளித்து கூட்டுவது, வயலுக்கு சாப்பாடு எடுத்து செல்வது , பின்னாளில் தாய் தந்தையரை அன்போடு பார்த்துக்கொண்டது, அவர்களுக்கு பணிவிடை செய்தது என்று ஒரு மகளாகவே வாழ்ந்தார்.


. என் தோழி ஒருத்திக்கு மூன்றும் ஆண் பிள்ளைகள். மூன்றாவது ஆண் பிள்ளை பிறந்த பொழுது நான் பார்க்கச்சென்றிருந்தேன்.  ஆண் பிள்ளை பிறந்து விட்டால் தாம் ஏழேழு பிறவில் செய்த புண்ணியம் என்று கனவில் மிதக்கும் மூடர்களுக்கு நடுவே, என் தோழி, பிறந்த குழந்தையை தழுவிய படி,” ஏன் கீதா நான் என்னடி பாவம் செஞ்சேன். எனக்கு ஒரு பொம்பள பிள்ளையை கடவுள் கொடுக்கல?,என்று விழி ஓரங்களில் கண்ணீர் வழிய கேட்டாள். அவளை சமாதானப்படுத்த என்னிடம் ஒரு பதிலும் அப்பொழுது  இருக்கவில்லை. வண்ண வண்ண உடை உடுத்தி, நகை போட்டு அலங்கரித்து அழகு  பார்க்க மட்டுமல்ல பெண் பிள்ளைகள். பெண் பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் அழகும் ,ஆனந்தமும், கலை நயமும், குதூகலமும் கூடுதலாக தளிர் நடை  போடும் .....

பல ஆண்டுகள் குழந்தை பாக்கியம்  இல்லாதவருக்கு ஆணோ , பெண்ணோ பிறக்கையில் அது வரமாகவே நினைக்கிறார். முதல் குழந்தை பெண்ணாக பிறந்தவருக்கு இரண்டாம் குழந்தையும் பெண்ணாக  பிறக்கையில் சாபம் என நினைகிறார்.  உண்மை என்னவென்றால் இரண்டும் பெண்ணாக பிறந்தால் கடைசி வரை அவர்களுக்குள் ஓர் ஒற்றுமை இருக்கும். ஒருவருக்கொருவர் துணையாக இருப்பார்கள். கடைசி வரை அன்போடு இருப்பார்கள். இரண்டு சகோதரிகளுடன் பிறந்த என் தாய் அதற்குச் சான்று.  என் பெரியம்மா தன் இரு சகோதரிகளுக்கும் தாயாகவே வாழ்ந்தார். ஓர் ஆண் , ஓர் பெண் என்று வருகையில் , தனக்கென்று குடும்பம் என்று ஆனப்பின் அங்கே பல நேரங்களில் விரிசல் உருவாகிறது.


ஆணோ ,பெண்ணோ குழந்தை பேறு என்பதே ஓர் வரம். அந்த வரம் கிட்டாதவர்களுக்குத்தான் அதன் துயரம் தெரியும். பெண் பிள்ளைகளை வரப்பிரசாதமாக பார்க்காவிட்டாலும் வெறும் சாதம் என்றாவது கருதுங்கள். அவர்கள் உங்களின் வயிற்றுப் பசியை மட்டுமல்ல, அன்புப் பசியையும் போக்குவார்கள். நீங்களும் கூறிப்பாருங்கள்,”வரப்பிரசாதம், வரப்பிரசாதம்” என்று .. ஆம் இவ்வாழ்கையே நமக்கு கடவுளின் பிரசாதம்  தான். அதிலும் பெண் பிள்ளைகள் என்றால் வரப்பிரசாதம் தான்.......

பிகு: முடிவெடுத்துவிட்டேன் நான்... என் பேரப்பிள்ளைகளை எப்படி கூப்பிட வேண்டும் என்று.....



Monday, November 14, 2016

காணவில்லை

கோவில் செல்லும் வழியில்
மர இடுக்கின் ஊடே தேடுகின்றேன்!
காணவில்லை அவளை,
திரும்பி வரும் பொழுது
சன்னல் வழி பார்க்கிறேன் ,,
காணவில்லை அவளை!
வீடு வரும் வழியில்
வழி நெடுகிலும் கழுத்து எலும்பு நோக
அன்னாந்து பார்க்கிறேன் அங்கும் இங்கும்,
காணவில்லை அவளை,
வீட்டின் அறையிலிருந்து
எட்டி எட்டி சன்னல் வழி தேடுகிறேன்
காணவில்லை அவளை!
கரும் போர்வைக்குள்
மறைந்து கொண்டாள்
அந்த பேரழகி நிலா.......
அருகில் வருவாள் என்றனர்
அவளோ தொலைவில் சென்று விட்டாள்
காத்துக்கிடக்கின்றன என் கண்கள்...
.வெளி வருவாளா? ஒளி தருவாளா?

மழை!!



”தஞ்சையில் மழை”
என்று
தொலைபேசியில்
நண்பன் சொல்ல
கேட்கிறேன்!

மனம்
டிக்கெட் வாங்காமல்
வானூர்தி ஏறாமல்
பயணித்துவிட்டது!

மண் வாசம்,
கருத்த வானம்,
அதனிலிருந்து கொட்டும் அருவி,
நனைந்த என் வீட்டு மர ஊஞ்சல்,
சாரல் அடிக்கும் திண்ணை,
நீர் ஒழுகும் என் வீட்டு தென்னங்கீற்று,
வாசல் வழி
சிறு வாய்க்காலாய் ஓடும் மழை நீர்,
நணைந்து விழும் பழுத்த மா இலை,
தண்ணீர் சுமை தாங்காமல்
தலை கவிழும் என் வீட்டு ரோஜாப்பூக்கள்,
கார் கொட்டகையில் விழும்
மழையின் சட சட சத்தம்,
மரத்தடி ஒதுங்கும் பசுமாடு,
நணைந்த படி ஓடும் நாய்,
தெரு வழி குடை பிடித்து போகும் என் மக்கள்,
அப்பா எப்படி வீடு வருவார்களோ
என்ற அம்மாவின் தவிப்பு,
வழுக்கும் தரையில்
பொத்தி பொத்தி,
கால் பொதிந்து உள்ளே வரும் தந்தை,
கதவை திறக்க
அவசர அவசரமாக
சமையல் கட்டிலிருந்து
நடந்து வரும் அம்மா,
அம்மாவின் சூடான ஆவிபறக்கும்
சமையலின் சுவை,
யாவும் வந்து போகின்றன
மனதில்!

கடல் தாண்டி பெய்தாலும்
தாய் மண்ணில் விழும்
மழைத்துளியின் வாசம்
மூக்கை துளைக்கிறது!
அங்கே பெய்கிறது மழை,
இங்கே பெய்கிறது என் கண்களில்
கண்ணீர் மழை..






Sunday, November 13, 2016

பணம்!!

நான்கு
நாட்களாக
எம்மூர்
பிணம் கூட
பணம் என்றால்
வாய் பிளக்க
மறுக்கிறது!

பணம்
பாதாளம் வரை
பாயுமாம்,
ஆம்
ஐந்நூறும் ஆயிரமும்
இங்கே
பாதாள சாக்கடை
வரை பாய்கிறது!!

மடியில் கனம்
மனதில் பயம்
சுகம்,சுயம்
இரண்டும்
இழந்து
வலம்
வருகிறது
மனித இனம்
இங்கு தினம்!

Saturday, November 12, 2016

A Drop!!

Drenched in
heavy down pour
I walk along the street.
Never does it
weigh me down
nor make me feel the pain.

A single drop of tear
rolling down my cheek
hurts every cell of me!
Is it the salt in the water
or the pain in the tear
that makes it heavy?

Wish for a shutter
to hold it behind,
that my cheeks
stay smooth and clear
ever again!!

கனம்!!

தண்ணீர்,
அடை மழையாய்
தேகம் தொடினும்
வலியில்லை!

ஒரு துளியாயினும்
கன்னம் உருளும்
கண்ணீர் கனப்பதேனோ?
உப்பை சேர்த்து
சுமப்பதாலோ?
அதற்கும் உண்டோ
அடைக்கும் தாழ்??

Monday, November 7, 2016

துப்பட்டா பேசுகிறது!!

இரு தோள் தொட்டு,
தாய் மடி கிடந்த சேயாய்
நெஞ்சில் விரிந்து கிடந்ததும் உண்டு,


இருகை பின்னால் விழ 
அட்டிகையாய்
கழுத்தை தழுவியதும் உண்டு,


இரு கைகள்
முன்னே விழ
மாலையாய்
அலங்கரித்ததும் உண்டு,
சொர்ப்ப காலம்
குறுக்கு மாலையாய்
இடைத் தொட்டு
முடியுண்டு கிடந்ததும் உண்டு,

ஒர் கை முன்னும்
ஓர் கை பின்னும்
ஓர் தோளில் நீண்டு
உலா வந்ததும் உண்டு!

மழைக்கும், வெயிலுக்கும்
தலைக்கு
கவசமாகி போனதும் உண்டு, 

நனைந்த கைகளுக்கு

துண்டாய் இருந்ததும் உண்டு!

ஆனால் இன்றோ,
தோளுக்கு சுமையென
பெட்டிக்குள்
மடிந்து 
உறங்குகின்றேன் நான்!!!






Sunday, November 6, 2016

சர்ச்சை!!

சர்ச்சை!!
படைத்தவனுக்கு
நாமம்
போடுவதில்
சர்ச்சை!
”U” வா ”Y” ஆ
”ப” வா!!
வாரம்
ஒரு முறை
நாமம் மாற்றும்
ஸ்ரீரங்க
யானைக்கு
சந்தேகமாம்
தான்
வடகலையா
தென்கலையா?
என்று!
பிறருக்கு
நாமம்
போடும்
மனிதன்
மட்டும்
தன் நெற்றியை
மறைத்து
போகிறான்......

Tuesday, October 25, 2016

தீபாவளி சுவடுகள்

அம்மா சுட்ட அதிரசமும்,
சுத்தி வைத்து உடைத்து உண்ட
பொறிவிலங்காய் உருண்டையும்
எங்கே?

ஆனந்தபவன்,கிருஷ்னா ஸ்வீட்ஸிலிருந்து
டப்பாவில் அடைக்கப்பட்ட
காஜு கத்திலியும்,  மோத்தி சூர் லட்டுவும்
 இங்கே!

விரல்களுக்கு குப்பி வைத்து
கைமுழுதும் இட்ட வட்ட வட்ட
மருதாணி எங்கே?

பேப்பர் குப்பியில் அடைக்கப்பட்டு
கைகளில் ஓவியம் வரையப்படும்
மெஹன்ந்தி இங்கே!!

ரா முழுதும் விழித்திருந்து
விடியலுக்கு காத்திருக்காமல்
விடியும் முன்பே எண்ணெய் தேய்து குளித்தது
எங்கே?

சூரியன் வந்த பின்
மெதுவாய் எழுந்து குளித்தது இங்கே!
சீயக்காய் ஷாம்பூ ஆனது இங்கே!

புத்தாடை உடுத்தி
அக்கம் பக்கம் உள்ளோர் பார்க்க
பலகாரம் எடுத்துக் கொண்டு
உலா வந்தது எங்கே?


புத்தாடை உடுத்துவது
செல்ஃபி எடுக்கவே இங்கே!

உற்றார் உறவுகளோடு
தீபாவளி கொண்டாடியது எங்கே?

தொலைக் காட்சி பெட்டியில்
அடைக்கப்பட்ட நடிக நடிகையரின்
தலை தீபாவளி கொண்டாடுவது இங்கே

லக்‌ஷ்மி வெடி போனது எங்கே?

தலையும், தளபதியும்
வெடியாயினர் இங்கே!

வாழ்த்து மடல் தபால் பெட்டியில்
வந்தது எங்கே?

வாட்ஸ் ஆப்பிலும்
பேஸ்புக்கிலும்
வாழ்த்துக்கள் குவியுது இங்கே!

இதுவும் ஒரு வகை கொண்டாட்டம் தான்!
வரும் சந்ததியினர் அறிவாரோ
நாம் விட்டுச் செல்லும் சுவடுகளை?

Thursday, September 29, 2016

என் பெரியன்னைக்கு .......





அம்மாயி பெயரும், உருவமும்
ஞாபகம் உண்டு,
வேறெதுவும்
 எனக்கு நினைவில்லை!
நீயே எனக்கு அம்மாயி ஆனாய்,
பெரியன்னையும் ஆனாய்!
நீ கொஞ்சி மகிழ
உன் செல்வங்கள் ஐந்து இருக்க,
பத்தாது என்று என்னையும் கொஞ்சி மகிழ்ந்தாய்!~

என் தாய்க்கு தாயானாய்!
எனக்கு பெரிய அன்னை ஆனாய்!
என் பிரசவ காலத்தில்
என் தாதியும் நீ ஆனாய்!

உன் தாலாட்டுக்கு
என் தாயும் உறங்கினாள்,
நானும் உறங்கினேன்,
என் மகளும் உறங்கினாள்!

வாழ்க்கையோடு நீ போராடினாயா
இல்லை வாழ்க்கை உன்னோடு
போராடினதா தெரியாது!
 முடிவில் தோல்வி
வாழ்க்கைக்கு, ஜெயம் உனக்கு!


உனக்கு கோபம் வந்து நான் கண்டதில்லை!
கடுஞ்சொல் உன் நாவு பேசியதில்லை!
உதவி என்று நீ யாரிடமும் கேட்டதில்லை!
வந்தாரை உபசரிக்க
உனைப்போல் யாருமில்லை!

குடும்பத்தின் ஆலமரம் நீ சாய்ந்து விட்டாய்!
இந்த விழுதுகள் நீ இன்றி  தழைக்குமா?
உறவுப் பாலமும் நீளுமா?

சொல்லி அழ ஆளில்லை!
சாய்ந்து அழ தோளில்லை!
கூடி அழ உறவும் இல்லை!

தனிமையில் அழுகின்றேன்!
உன் முகம் காண துடிக்கின்றேன்!

கடல் தாண்டி இருக்கையில்
வானம் பார்த்து காத்திருக்கிறேன்,
நட்சத்திரமாக நீ வந்து
எனை  காண்பாய் என!

இம்மண்ணை விட்டு
நீ பிரிந்தாலும்
அந்த விண்ணிலிருந்து
எமை காத்திடுவாய்,
என்றெண்றும் எங்கள் காவல் தெய்வமாய்!!!







Tuesday, September 27, 2016

பகல் நிலவு

முழு இரவு கண் விழித்து
யாருக்காக நீ காத்திருந்தாயோ?
 நான் அறியேன்!கண்மணியே!


சுட்டெரிக்கும் சூரியன்
உலா வரும்
முற் பகல் நேரம்,
இன்னும் நீ
யாருக்காக காத்திருக்கிறாயோ
அதையும் நான் அறியேன்
கண்மணியே!


தகிக்கும் உச்சி வெய்யில் வெளிச்சத்தில்
நீ காத்திருப்பதை யாரேனும் கண்டனரோ?
நான் அறியேன் கண்மணியே!


கடந்து சென்ற வானூர்தி
விட்டுச் சென்ற சுவடை,
நீ லக்‌ஷ்மனக் கோடாக
நினைத்தாயோ?
தாண்டுதற்கு அஞ்சி நீ
பயந்து போய் நின்றாயோ?
தானாக அக்கோடு அழியத்தான்
பார்க்கிறாயோ?
நான் அறியேன் கண்மணியே!


 நெடுங்காலம்
காத்திருக்கும் உன்னை
ராவணன் யாரேனும்
தூக்கித் தான்
சென்று விடுவாரோ?
எச்சிறையில் உன்னை
அடைப்பாரோ?
அஞ்சுகிறேன் நான்
அதை நினைத்து கண்மணியே!


காத்திருப்பு போதும்
பேதை பெண் பகல் நிலவே!
வந்த வழி சென்று விடு,
உன் அறையில்
பகல் முழுதும் கண்ணுரங்கு கண்மணியே!


விளக்கு வைக்கும் நேரத்தில்
அலங்காரம் நீ செய்து
மீண்டும் ஒரு காட்சி கொடு,
நட்ச்சத்திர தோழியரோடு நீ
வலம் வரும் வேலையிலே
உன்னவன் தான்
வந்து நிற்பான்
உன் கரம் பற்றுதற்கே!!


காலம் தான் கனிந்து வரும்,
கலங்காதே கண்மணியே!



Sunday, September 25, 2016

ஒரு ரீ யூனியன் கதை!!

ஓராண்டிற்கு முன், நான், ஆரம்ப பள்ளி படித்த பள்ளியின் பெயரில் ஒரு வாட்ஸ் ஆப் அழைப்பு வந்தது. ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை நான் படித்த சேக்ரட் ஹார்ட் பள்ளி தோழர்களிடமிருந்து வந்த அழைப்பு அது. அதை பார்த்தவுடன் எனக்கு தலை கால் புரியவில்லை! ஒரே சந்தோஷம். உடனே அழைப்பை ஏற்றுக்கொண்டு அந்த குழுவில் ஐக்கியமானேன்! அந்த க்ரூப்பில் என்னுடன் படித்த மாணவ மாணவிகள் மட்டுமில்லை. எங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியைகளும் இருந்தார்கள்.


க்ரூப்பில் இருந்த பெருபாலானோர் ஆண்கள் தான். அதனால் ஆரம்பத்தில் எனக்கு கொஞ்சம் தயக்கமாகவே இருந்தது. பல பேரின் முகமோ ,பெயரோ கூட எனக்கு ஞாபகம் இருக்கவில்லை. ஆண்களின் ஞாபக சக்தி இந்த விஷயத்தில் அபாரம். சில பெண் நண்பிகள் க்ரூப்பில் சேர்ந்த பின் என் தயக்கம் சிறிது சிறிதாக விலக ஆரம்பித்தது. பெண்கள் யாவரும் என்னுடன் நீண்ட காலம் தொடர்பில் இருந்தவர்கள். ஒரே கல்லூரிக்கு எங்களில் பலர் சென்றிருந்தது ஒரு காரணம். நாள் ஆக ஆக என் பங்களிப்பு அதிகரிக்க தொடங்கியது.


என் கணவர் எப்பொழுதும் பள்ளி க்ரூப், கல்லூரி க்ரூப் என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருப்பார். என்னடா நம்முடன் படித்த யாருமே ஒரு க்ரூப் அமைக்கவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு இருந்தது. அந்த ஆதங்கம் எனக்கும் நிவர்த்தியானது. என் ஃபோனும் சதா ட்ரிங், ட்ரிங் என்று சத்தம் போட ஆரம்பித்தது. நான் அதை எடுப்பதையும், பின் தானாக சிரிப்பதையும் , அவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் சாட்டிங்கில் மூழ்கி இருப்பதையும் பார்த்த  என் கணவர்,”அந்த நோட்டிபிகேஷன் டொய்ங், டொய்ங்னு சதா சத்தம் போடுது. அதை கொஞ்சம் ஆஃப் பண்ணி வைக்கிறியா” என்று சொல்ல ஆரம்பித்தார்.   எப்பொழுது பார்த்தாலும் ஃபோனும் கையுமாக அவர் இருந்ததை பார்த்து எனக்கும் இப்படித்தானே இருந்திருக்கும் .  பல் வலியும், தலவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்று நான் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.


ஒரு நாள் கவனிக்காமல் விட்டுவிட்டால் மறுநாள் ஒரு ஐம்பது மெசேஜ்கள் அள்ளி தெளிக்கப்பட்டிருக்கும். இப்படித்தான் முகம் தெரியா என் பள்ளித் தோழர்களுடன் நான் பழக ஆரம்பித்தேன். எங்கள் நட்பும் மீண்டும் மலர தொடங்கியது. நான் எழுதும் என் கட்டுரைகளை , கவிதைகளை அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். அதைப் பற்றி அவர்களும், எங்கள் மிஸ்களும் விமர்சிக்கும் பொழுது எனக்கு உலக மஹா சந்தோஷம்.


முதல் முறை ஹபீப் போன் செய்த பொழுது என்ன பேசுவதென்றே எனக்கு தெரியவில்லை. என்ன தான் கூட படித்த மாணவர்கள் என்றாலும் அவர்களை இத்துனை வருடங்களுக்குப் பின் எப்படி  அழைப்பது என்று தெரியவில்லை. அவர், இவர்,என்பதா?,அவன் இவன் என்பதா?, அவங்க இவங்க என்பதா?, நீ , வா என்பதா?, என்ற குழப்பம் வேறு. பல முறை எதுவும் சொல்லாமலேயே மொட்டையாக பேசியதுண்டு. ஆங்கில” you” பல முறை கை கொடுத்தது. தோழிகளிடம் பேசும் பொழுது அந்த தயக்கம் இல்லை. நீ, வா, போ என்று சகஜமாக வந்துவிட்டது. ஆண்களுக்கும் இப்படி தோன்றி இருந்திருக்கும். ஒரு வேளை, பெண்கள் எல்லோரும் அப்படியே அன்று பார்த்த ரோஜாவாக இருந்ததால் அவர்களுக்கு அந்த குழப்பம் வர கொஞ்சம் வாய்ப்பு குறைவு. எளிதாக நீ வா என்று அழைக்க முடிந்திருக்கும். ஆண்கள் தான் உருவத்தில் மிகவும் மாறிப்போய் இருந்தார்கள். இவர்  தான் நம் கிளாஸ் மேட்டா இல்லை இவரின் மகனா? என்ற குழப்பம் பெண்களுக்கு இருந்தது.


என் குடும்பத்தில் எல்லோருக்கும் , ”நாலாங்கிலாஸ் ப்ரெண்ட்ஸ் க்ரூப்பாம்” என்ற நக்கல் வேறு. சுகி என் வீட்டிற்கு முதன் முறை வந்த பொழுது அதை ஊர் முழுதும் தம்பட்டம் அடித்துவிட்டேன். முப்பத்தி ஐந்து ஆண்டுகள் கழித்து பார்த்த மாதிரி எந்த ஒரு இடைவெளியும் எனக்கு தெரியவில்லை. பல வருடங்கள்  பழகிய நட்பாகவே அந்த சந்திப்பு இருந்தது.  அந்த சந்திப்பு மனதிற்கு இதமாக இருந்தது. ஹபீப் வந்த பொழுதும் அவ்வாரே இருந்தது.


க்ரூப்பில் பலருக்கு பல பெயருண்டு. பை பாஸ் பாலா, அலெக்ஸ் நாரதர், ரெட்டை சடை அகிலா, puzzle பரமேஸ்வரி அனுராதா, ராஜேஷானந்தா இன்னும் பல. நானும் அதிலிருந்து தப்ப வில்லை. எனக்கு ஜிஜி( கெத்து கீதா) குயிலி என்ற பட்ட பெயர்கள் சூட்டினார்கள். இப்படியாக எங்கள் வாட்ஸ்சாப் கச்சேரிகள் நடந்து கொண்டிருந்த வேளையில், ஜூன் மாத பள்ளி விடுமுறை வந்தது. நான் இந்தியா வருகிறேன் என்று மட்டும் தான் கூறினேன். உடனே, நீ வருவதால் ஒரு get to together போட்டுடலாம் என்றார்கள். ஆஹா  நாம் போவதனால் எவ்வளவு ஆசையாக get to together ஏற்பாடு செய்கிறார்கள் என்ற ஆனந்தம். பெரிய கிரீடத்தை தலை மேல் வைத்தது போல் இருந்தது. ரீ யூனியன் தேதி ஜூன் பதினொன்று என்று முடிவானது. பியூலா மிஸ், அசம்தா மிஸ் இருவரும் வருவதாக கூறியது இரட்டிப்பு சந்தோஷம். எல்லோரையும் பார்க்க போகிறோமே என்ற ஆவல், எதிர்பார்ப்புடன் என் பயணம் துவங்கியது.


இந்தியா வந்த நாள் முதல் எப்படா ஜூன் பதினொன்று வரும் என்ற எதிர்பார்ப்பு. சொந்தக்காரர்கள் யார் கூப்பிட்டாலும் “இல்லை ஜூன் பதினொன்றுக்கு பிறகு வருகிறேன்”, என்று கூறினேன். ஜூன் பதினொன்றும் வந்தது. காலை முதல் மனதில் ஒரே பட்டாம் பூச்சி பட படக்கும் சத்தம். அன்று மிகவும் இளமையாக உணரத்துவங்கினேன். சாயங்காலம் நான்கு மணிக்கு எல்லோரும் லக்‌ஷ்மி ஹோட்டலில் சந்திப்பதாக ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. ஆவலுடன் ட்ரெஸ் செய்து கொண்டு கிளம்பினேன். நான்கு  நாட்களுக்கு முன்பே தலைக்கு டை அடித்து விட்டேன். எங்கே, ஏதோ ஒரு ரீ யூனியனில் கேட்டது போல்,”நீங்க எந்த க்லாஸ் டீச்சர் எங்களுக்கு? என்று யாரும் கேட்டு விடக்கூடாது என்பதால் கொஞ்சம் அலார்ட் அலமுவாகிவிட்டேன்.


 ஹோட்டல் முன் இறங்கியதும் பட பட என மனது அடித்துக்கொண்டது. எல்லோர் புகைப்படத்தையும் பார்த்திருந்தும், வாட்ஸ்சாப்பில் பேசிக் கொண்டிருந்த போதும் ஏதோ ஒரு படபடப்பு இருக்கத்தான் செய்தது. முதல் மாடியில் ஒரு ஹாலில் எல்லோரும் குழுமி இருந்தார்கள் . ரிசப்ஷனில் அதை கேட்டு தெரிந்து கொண்டு அங்கே சென்றேன். கதவை லேசாக இருமுறை தட்டி விட்டு உள்ளே எட்டிப் பார்த்தேன்! வாவ் எத்தனை முகங்கள். என்னால் நம்பவே முடியவில்லை! பியூலா மிஸ் வந்திருந்தார்கள். அவர்களைத்தான் முதலில் பார்த்தேன். பார்த்தவுடன் அப்பாடா என்ற பெருமூச்சு. ஆசிரியர் இருந்தால் ஒரு கூடுதல் பாதுகாப்பு போன்ற உணர்வு.


ஆண்கள் எல்லோரும் ஒன்றாகவும், பெண்கள் எல்லோரும் ஒன்றாகவும் அமர்ந்திருந்தார்கள். வெல்கம் ஜீஜீ என்ற சத்தம். எனக்கு வாயெல்லாம் பல். யாரை முதலில் பார்ப்பது , பேசுவது என்றே தெரியவில்லை. ஒரு நிமிடத்தில் எல்லோர் முகத்தையும் கண்கள் படம் பிடித்து மூளக்கு அனுப்பியது. அதை கிரகிக்கும் வேகம் தான் மூளைக்கு இருக்கவில்லை. ஒவ்வொருவராக பார்த்து ஹல்லோ, ஹல்லோ என்றேன். எல்லோரும் வட்டமாக நாற்காலிகளை போட்டு அமர்ந்து கொண்டோம். மீனாவும், அகிலாவும் “எங்களுக்கு சப்போர்ட் வந்தாச்சு”, என்றார்கள். என் ஐந்தடி உருவத்தை பார்த்த ஆண்கள்’ இதுக்குத்தான் இந்த பில்டப்பா?, இது நாலாங் கிலாஸ்சிற்கு பிறகு வளரவே இல்லையா?” என்று பூச்சியை பார்ப்பது போல் பார்த்துவிட்டு ஊதிவிட்டார்கள். பாலா என்னிடம் வந்து , நான் என்னவோ ஐசிஸ் தீவிரவாதி போல் , ஆயுதம்  ஏதும் வைத்திருக்கவில்லை என்று உறுதி செய்து கொண்டு சென்றார். நான் சாட்டிங் போது பேசுவதைப் பார்த்து அவருக்கு என் மேல் அப்படி ஒரு சந்தேகம். நானும் அப்படி ஒரு பில்ட் அப் கொடுத்து இருந்தேன்.


  எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே ஒவ்வொருவராக உள்ளே வந்தார்கள். ஈ.கவிதா வந்தவுடன் தான் கச்சேரி களை கட்டியது. கவிதாவின் வெங்கல குரலும், சிரிப்பொலியும் , வெள்ளேந்தியான பேச்சும் அந்த  ஹாலை சிரிப்பலையில் மூழ்கச் செய்தத்டு. ஜூஸ் குடித்து  விட்டு எல்லோரும் பள்ளிக்கு செல்லலாம் என்று முடிவு செய்தோம். பின் எல்லோரும் சேர்ந்து எங்கள் பள்ளிக்குச் சென்றோம்.பள்ளி நேரம் முடிந்திருந்தது. மாணவர்கள் எல்லோரும் வீட்டுக்குச் சென்று விட்டார்கள்.  பழைய நினைவுகள் வானவில்லாய் தோன்ற ஆரம்பித்தது. Chappel லில் சாமி கும்பிட்டது, மூயூசிக் கிலாஸில் செய்த குறும்புகள், scale சண்டை என்றெல்லாம் இனிய  நினைவுகளை பகிர்ந்து கொண்டோம். எல்லோருக்கும் ஒரே சிரிப்பு. ஆங்காங்கே  நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். அங்கிருந்த ஆசிரியர்களுக்கு எங்களை தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் தங்களின் பள்ளியின் முன்னால் மாணவ மாணவிகள் என்று எங்களுடன் அன்புடன் பேசினார்கள்.


ஆண் வாணரங்கள் அங்கிருந்த ஜிம்மை விடவில்லை. பழைய நினைப்புடன் அதில் ஏற பலர் முயன்றனர்.சிலர் பத்திரமாக அருகிலேயே நின்று கொண்டனர். இந்த வயதில் எக்கு தப்பாக எதிலாவது ஏறி எலும்பை  முறித்துக் கொண்டால் வீட்டில் சேர்க்க மாட்டார்கள் என்ற  பயம் போலும். நான் மீனா, கவிதா,  மூவரும் ஜிம்மிற்கு முன் நின்று புகைப்படம் எடுக்க நின்ற பொழுது ஆண்களின் அத்துனை போன் கேமராக்களும் ஜொலித்தது, நாங்களும் ஜொலித்தோம். மூனு பொம்பளை பிள்ளைகளை எடுக்க பதினைந்து கேமராக்கள், ஆனால் பதினைந்து ஆண் பிள்ளைகளை எடுக்க இரண்டே இரண்டு கேமராக்கள் என்ற ஆதங்கம் வேறு அவர்களுக்கு. யாரும் யாரையும் குறிப்பாக குறை கூற முடியவில்லை. ஏனென்றால் எல்லோர் கையிலும் இருந்த கேமராக்கள் எங்களைப் பார்த்து ஜொள்ளி(லித்)த்தது.



பள்ளியை நாங்கள் சுற்றி வந்ததை பார்த்த ஹாஸ்டல் சிறுவர்கள் என்னடா இந்த ஆண்டீஸ் ,அங்கில்ஸ் பன்றாங்க என்று பேசிக்கொண்டார்கள். இன்னும் இருபது முப்பது ஆண்டுகள் கழித்து அவர்களும் இதைத்தான் செய்வார்கள் என்று அவர்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. ஷேக் கிற்கு மட்டும் தான் ஸ்கூல் பையன் என்ற நினைப்பு மாறவே இல்லை. தன் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்து பார்க்கலாம் என்று முயற்சி செய்தார். ஆனால் அவரின் தொந்தி அவர் காலை வாரிவிட்டது. பள்ளி சிறுமிகள் தன்னை அங்க்கில் ஆக கூட கருதவில்லை என்று கொஞ்சம் வருத்தம் அவருக்கு. ஆனாலும் முயற்சி திருவினையாக்கும் என்ற நம்பிக்கையில் அவர் மனம் தளரவில்லை.


 நடந்து கொண்டே பள்ளியை சுற்றி வந்த பொழுது , நுனலும்  தன் வாயால் கெடும் என்பதைப்போல் ஈ .கவிதா,”கணபதியும் நானும் சொந்தக்காரர்கள். அவர் என் மாமா பையன்”என்று முடிக்கக் கூடவில்லை. எல்லோரும் அந்த கடைசி சில சொற்களை பிடித்துக் கொண்டு இருவரையும் கலாய்த்து தள்ளி விட்டார்கள். கவிதா தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்திருப்பதை கூறியும் யாரும் விடவில்லை. ஷேக் மட்டும் மனம் தளராமல் அங்கேயும் தன் விண்ணப்பத்தை சமர்பிக்க தயாரானார்.


மீனாவின் அப்பாவை பார்த்து நான், “மீனா உன் அப்பா காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி இருக்கார்” என்று நாலாம் வகுப்பு படித்த பொழுது கூறினேனாம். அதை நினைவில் வைத்திருந்து அதை என்னுடன் பகிர்ந்து மீனா சிரித்தார். ஆண்கள் யாவரும் எங்கெல்லாம் நின்று அடிவாங்கினார்கள், எதற்கெல்லாம் அடி வாங்கினார்கள் என்று நினைவு கூர்ந்தனர். ஐந்தாம் வகுப்பு படித்த பொழுது பியூலா மிஸ் தன் திருமணச் செய்தியை மாணவர்களுடன் பகிர்ந்த பொழுது எப்படி மாணவர்கள் எல்லோரும் அழுதார்கள் என்று ஷேக் கூறிய (நடித்து காட்டிய )  ,பொழுது அது கவிதையாக இருந்தது. பள்ளியை நன்றாக சுற்றி பார்த்து விட்டு ஹோட்டலை நோக்கி நடக்கத் ஆரம்பித்தோம். மழைத் தூரல் எங்கள் உடலை அங்கங்கே நனைத்தது. . நினைவுகள் எங்கள் கண்களை ஆணந்த கண்ணீரால்  நிரப்பியது. வேகமாக நடந்து வந்து மீண்டும் ஹோட்டல் ஹாலில் சங்கமித்தோம்.



ஹால் முழுவதும் ஒரே பேச்சு சத்தம். மீண்டும் எல்லோரும் ஒன்றாம் வகுப்பு மாணவர்களாக மாறினோம். ஆசிரியர்களால் எங்களை கட்டுப்படுத்த முடியவில்லை, அதற்கு அவர்களின் மனமும் இடம் கொடுக்கவில்லை. அவர்களும் எங்களுடன் ஒன்றாக கலந்து கச்சேரியை அமர்களப்படுத்தினார்கள். சுகியின் அம்மா,”Our Father prayer " பாடலுடன் அதிகார பூர்வமாக நிகழ்வை துவக்கி வைத்தார். எல்லோரும் அமைதியாக இருந்தது அந்த இரண்டு நிமிடங்கள் தான். அதன் பின் ஒருவர் ஒருவராக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு தன் குடும்பத்தைப்  பற்றியும் பகிர்ந்து கொண்டோம். சுரேஷிற்கு மகள் ஓவியா படிக்கும் வகுப்பை பற்றி சிறு குழப்பம் . நண்பர்களை ஒரு சேர பார்த்த மகிழ்வில் வந்த ஞாபக மறதி அது. சந்தடி சாக்கில் brown girl in the ring பாடல்  பாடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. முந்திரி கொட்டையாக நான் “எனக்கு பாடல் ஓர் அளவிற்கு ஞாபகம் இருக்கிறது “,என்று சொல்லி விட்டேன். உடனே எல்லோரும் “ பாடு ஜீ ஜீ”, என்று ஏற்றி விட்டார்கள்.இந்த மேடையை விட்டால் நம் குரல் வலம் தெரிந்த யாரும் இந்த ஜென்மத்தில் நமக்கு   இந்த மாதிரி ஒரு வாய்ப்பை தர மாட்டார்கள் என்பதை உணர்ந்த நான் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள முடிவு செய்தேன். கர  கரத்த என் குரலோசையில் அந்த பாடலை தெரிந்த மட்டும் பாட(படிக்க) என்னுடன் சேர்ந்து எல்லோரும் பின் பாட்டு பாடினார்கள்.


 தன்னை இளமையாகக்  காட்டிக்கொள்ள மீட்டிங் ஆரம்பித்ததிலிருந்து வயிற்றை இழுத்து தம் பிடித்த ஷேக், மறந்து அவ்வப்பொழுது மூச்சு விட்ட பொழுது உண்மையான தொப்பையும் வயதும் எட்டிப் பார்த்தது! ஷேக்கின் முறை வந்த பொழுது, அவர்  தான் கட்டிய காதல் கோட்டைகளையும் அது சீட்டுக்கட்டைப் போல் சரிந்து விழுந்து நொறுங்கிய கதைகளையும் சொன்னதைக் கேட்டு எங்களில் பலர் கண்களை அகல விரித்து வாய் பிளந்து கேட்டோம். சினிமாவிற்காக கதை சொல்வதை போல் அழகாக, உணர்வு பூர்வமாக ஏத்த இரக்கத்துடன் விவரித்தார். இது நிஜமா அல்லது உடான்ஸ்ஸா என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கத்தான் செய்தது. பல திரைப் படங்களில் இருந்து சுடப்பட்ட கதைகளைப் போன்று இருந்தாலும், நிஜமோ பொய்யோ எங்களுக்கு அது கேட்பதற்கு சுவாரசியமாக  இருந்தது. ஆனாலும் தன் சோக கீதத்தை ஆணந்த கீதமாக பாட ஷேக்கால் மட்டுமே முடியும். சந்தில சிந்து பாடுவதைப் போல் இன்றும்  தன் இனியவளை தேடும் தேடல் தொடர்கிறது என்ற பிட்டையும் போட்டார். ஷேக் பேசிய பொழுது வயிறு குலுங்க சிரித்தோம். அவர் கடந்து வந்த பாதைகள் முட்களால் நிரம்பியிருந்த பொழுதும் அதில் தான் கண்ட ரோஜாக்களை அழகாக வர்ணித்தார். விளையாட்டாக மட்டுமே பேசாமல் இந்த நட்பு இனியும் பல ஆண்டு காலம் தொடர வேண்டும் என்றும் ,  ஒருவருக்கொருவர் துணையாக் இருந்து ஒன்றாக வளர வேண்டும் என்ற அழுத்தமான விதையை விதைத்தார். அதை யாவரும் தலையாட்டுதல் மூலம் ஆமோத்தோம்.


வாட்ஸ்சாப்பில் மூச்சுக்கு முன்னூறு மெசேஜ் அனுப்பும் அலெக்ஸ் நேரில் மிகவும் அமைதியாக இருந்தார். பாலா சகஜமாக ஷேக்கை கலாய்த்தது அழகாக இருந்தது. முதல் முறை என்பதால் பலர் ஒரு சில வார்த்தைகளுடன் நிறுத்திக் கொண்டனர். மெஹ்பூப் கான் மட்டும் அவரின் மனைவியையும் மகனையும் அழைத்து வந்திருந்தார். ஜட்ஜ் அய்யா அல்லவா எனவே அவருக்கு ரீ யுனியனுக்கும் சாட்சி தேவை. அவரின் மனைவியும் மகனும் அமைதியாக அமர்ந்து நடந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அசைவம் என்று ருசியான சாப்பாடு வேறு. சாப்பாட்டிற்கு முன் எல்லோரும் குழுவாக பல புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம். செல்பி புள்ள மீனா கிடைத்த வாய்ப்பை கைவிடாமல் ஒன்றிரண்டு செல்பியை க்ளிக்கினார். பியூலா மிஸ் எல்லோருக்கும் தனித்தனியாக அழகாக பெயர் எழுதி அன்பளிப்பு ஒன்று கொடுத்தார்கள். எனக்கு,”You are unique "என்ற ஃப்ரிஜ் மாக்னெட். . ஆசிரியர்களிடம் வாங்கிய ஆசீர்வாதமும், அன்பளிப்பும் எங்களுக்கு அன்று கிடைத்த அதிர்ஷ்ட குலுக்கல். டாக்டர் ரவீந்திரனும் எல்லோருக்கும் சேக்ரட் ஹார்ட் ரீ யூனியன் என்று தஞ்சாவூர் தட்டில் அச்சடிக்கப்பட்ட  அழகான நினைவு பரிசை கொடுத்தார். உணவிற்கு பின் எல்லோரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது சுகியின் அம்மா பல அழகான, சுருக்கமான வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகளை எனக்கு கூறினார். தன் மகளாக அவர் என்னை நினைத்து என்னிடம் அப்படி பேசியது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.


பிரியும் நேரம் வந்தது. இந்த ரியூனியனை அழகாக ஏற்பாடு செய்திருந்த அத்துனை நண்பர்களுக்கும் ஒரு பெரிய ஓ போட வேண்டும். சந்தோஷமான அந்த நினைவுகளுடன் நான் சுரேஷுடன்  அவரின் காரில் வீட்டில் வந்து இறங்கிக் கொண்டேன். .வந்திருந்த அத்துனை பெண்களும் தத்தம் வீடுகளுக்கு பத்திரமாக செல்வதை ஆண்கள் உறுதி செய்து கொண்டார்கள். அதற்கான ஏற்பாட்டையும் செய்தார்கள். வீடு அடைந்ததும் என் அம்மா எப்படி இருந்தது என்று மட்டுமே கேட்டார். அந்த நொடி கதை சொல்ல ஆரம்பித்த  என் வாய், மடை திறந்த வெள்ளமாய் ஒரு நான்கு  நாட்களுக்கு ஒரே ரீ யூனியன் கதையை மட்டுமே எல்லோருக்கும் சொன்னது. வீட்டில் இருந்தவர்கள் காதில் பஞ்சை வைத்துக் கொள்ளாதது தான் பாக்கி. நான் ஊர் கூரையில் நின்று கூவாதது  தான் பாக்கி!!

சிறு வயதில், பள்ளித் தோழர்களிடம்  நாம் கொண்டுள்ள உரிமையும், அவர்கள் பால் வைக்கும் எதிர்ப்பார்ப்பற்ற அன்பும் எத்துனை வருடங்கள் ஆனாலும் மாறாது என்பதை இந்த ரீயூனியன் புரிய வைத்தது. யார் பெரியவர், யார் சிறியவர்,  வென்றவர் யார், தோற்றவர் யார், பணக்காரர் யார், வசதி குறைந்தவர் யார், என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் இருக்கும் இந்த கள்ளம் கபடம் இல்லா நட்பு என்றென்றும் வாழ்க! மாறி வரும் வாழ்க்கை முறையில் அன்பின் வெளிப்பாடு எவ்வளவு அவசியம், அது நம்மை எப்படி பல வழிகளில் ஆசுவாசப்படுத்துகிறது என்பதையும் நான் உணர்ந்த தருணங்கள் அவை. வாழ்க்கையின் உச்சானிக்கு சென்றாலும், அடித்தளத்திற்கு சென்றாலும் நிதர்சனமானது அன்பு ஒன்றே! மீண்டும் இப்படி ஒரு ரீ யூனியனுக்காக மனம் ஏங்கிய படி காத்துக் கிடக்கிறது! வாழ்க நட்பு!வளர்க அன்பு!!

Thursday, September 22, 2016

The Trodden Path

The Trodden Path
Cemetery where
thousands of
grass lives are buried!!


Proves the
power of
human foot prints!!

Makes one realize,
"When traveled alone
the destination is nearby!!"

Though not
the end is known
hope never fails!!

Wednesday, September 21, 2016

இரு முகன்!!

கேள்வி: முகம் பற்றி உங்களுக்கு தெரிந்த கருத்துக்களை ஒரு கட்டுரையாக எழுதுக. (10 மதிப்பெண்கள்)

பதில்:
ஒரு முகம் உள்ள  விக்ரம் நடித்த படம் இரு முகன்!

படத்தின் பலம் விக்ரம், விக்ரம், விக்ரம்!

காட்சிக்கு காட்சி அவரே காட்சி கொடுக்கிறார்!

பாடல்களில் வரும் நயந்தாரா அழகாக இருக்கிறார்!

நயனின் உடல் பராமரிப்பே அவர் இன்று வரை கோடிக் கணக்கில் கல்லா  கட்டுவதற்கான காரணம்!

விக்ரமின் புஜ பலத்தை நம்பியே கதை நகர்கிறது!

தம்பி  ராமையா எதார்த்தமாக நடித்து இருக்கிறார்!

நித்யா மேனன் கண்டிப்பாக உடம்பை குறைத்தாக வேண்டும்!

RAW ஏஜெண்டாக இருப்பவர்கள் சிரிக்க கூடாதா ?

வில்லி விக்ரமிடம் வேலை பார்ப்பதால் நயந்தாரா கறுப்பு உடை மட்டும் தான் அணிய வேண்டுமா! கறுப்பு வில்லத்தனத்தின் வெளிப்பாடா?

Close up shotகளில் விக்ரமின் வயது முதிர்ச்சி முகத்தில் தெரிகிறது!

உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள செய்த முயற்சியில் அவரின் கண்களில் இருக்கும் அந்த ஒளி இல்லாமல் போனது.

எப்பொழுதும் ஒரு அசதியான தோற்றம்!

Speed மருந்தை வேறு வழியில் கடத்தி இருக்கலாம்!

Inhalerல் வைத்து கடத்துவது போல் காண்பித்து இருப்பதால், அதை பார்க்கும் குழந்தைகள், தாங்களும் பவர் ஏற்றிக் கொள்ள விரும்பி வீட்டில் யாரேனும் ஆஸ்மா நோயிற்காக இன்ஹேலர் உபயோகித்தால் அதை எடுத்து பயன்படுத்தக்கூடும்!

இசை பிரமாதமாக இல்லை!

அது என்ன இப்பொழுது எல்லாம் மலேசியாவிலேயே படம் எடுக்க போகிறார்கள்?

மலேசியா மட்டும் தான் குற்றங்களின் இருப்பிடமாக இருக்கிறதா என்ன?

ஆறு முதல் பத்து வயது உள்ள குழந்தைகளை நம்ப வைக்கக்கூடிய கதை தான் படத்தின் முழு கதையும்!

பிகு: ஆசிரியர் அவர்களே,முகம் பற்றி எனக்கு தெரிந்த சில பல கருத்துக்களை எழுதி உள்ளேன். ஆங்காங்கே சிலஆங்கில சொற்கள் உபயோக படுத்தியதற்கு மன்னித்து விடுங்கள்.பத்துக்கு எட்டு மதிப்பெண்கள் போடாவிட்டாலும் பரவாயில்லை ஒரு ஐந்து மதிப்பெண்களாவது  கொடுத்து என்னை தயவு செய்து பாஸ் செய்ய வைத்து விடுங்கள். அதற்காக இத்துடன்  ரூபாய் 100 இணைத்துள்ளேன். உங்களின் இந்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன். நன்றி!!

இப்படிக்கு
உங்கள்  பணிவுள்ள மாணவன்






ஒத்தையடி பாதை



பல் ஆயிரம்
புற்கள்
உயிருடன்
புதைக்கப்பட்ட
சமாதி!


மனித
கால் தடங்களின்
வலிமை
உணர்தும் பாதை!!

ஒத்தையாக
பயணித்தால்
இலக்கு
மிக அருகில்
என்பதனை
புரியவைக்கும்
வழி!!


எங்கே
இட்டுச் செல்லும்
என்று
தெரியாவிடினும்
நம்பிக்கை தரும்
தடம்!!

துறவு கொடு!!

உறவுக்கும் துறவு கொடு,
என் உணர்விற்கும் துறவு கொடு 
என் அன்னை பராசக்தியே!!
இதை நான் என் ஆறாம் அறிவு 
கொண்டே கேட்கின்றேன்,
என் சுய நினைவு கொண்டே வேண்டுகின்றேன்!!
யாசிப்பது எனது உரிமை,
யோசியாமல் அருள்வது உன் கடமை!!

Sunday, August 28, 2016

தர்மதுரை --பட விமர்சனம்

சாதரணமாகவே எனக்கு விஜய் சேதுபதி படம் என்றால் மிகவும் பிடிக்கும். இதில் என்  மகளும் என்னுடன் சேர்ந்து கொண்டாள். தர்மதுரை படம் ரிலீஸ் ஆன நாள் முதல் பார்க்க வேண்டும் என்ற ஆசை. கணவருக்கும் விஜய் சேதுபதி, தன்னைப்போல் கருப்பழகனாக இருப்பதால் ஒரு பிரியம். படம் பற்றிய விமர்சனங்களைப் படித்து விட்டு , படம் பார்க்க போகலாம் என்றார். என் தோழி சுஜா படம் பார்த்து விட்டு விமர்சனம் சொன்னால் தான் நான் பொதுவாக திரையரங்கு சென்று படம் பார்ப்பது வழக்கம். ஆனால் இந்த படத்தை அவள் இன்னும் பார்க்கவில்லை. இனையத்தில் சிலர் நன்றாக இருக்கிறது என்றனர், சிலர் ஓகே என்று எழுதியிருந்தனர். மகள் வேறு ஊருக்கு போயாக வேண்டும். அதற்கு முன் படம் பார்க்க வேண்டும். எனவே ஒரு முடிவு செய்து படம் பார்க்க சென்றோம். மகளின் தோழியும் எங்களுடன் வந்தாள்.

படம் மதியம் பன்னிரண்டு மணி ஷோ! போவதற்கு முன்பே brunch  என்ற பேரில் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். திரையரங்கு சென்று டிக்கெட் வாங்க போன போது தான் தெரிந்தது படத்துக்கு கூட்டமே இல்லை என்று. வேலை நாள் வேறு , எனவே தான் கூட்டம் இல்லை என்று எங்களுக்கு நாங்களே சமாதானம் செய்து கொண்டோம். டிக்கெட் வாங்கும் பொழுதே கூடவே கொசுறாக நாச்சோஸ் சிப்ஸ்சும் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றோம். என்ன brunch சாப்பிட்டால் என்ன, தியேட்டரில் படம் பார்க்கையில் ஏதாவது கொறிக்காமல் இருக்க முடியுமா என்ன? எழுநூத்தி ஐம்பது பேர் தாராளமாக உட்காரக் கூடிய திரையரங்கு. உள்ளே நுழைந்ததும் எங்களுக்கு ஒரே அதிர்ச்சி! எங்கள் நால்வரைத் தவிர யாருமே இல்லை. நாங்கள் உட்கார்ந்தும் படம்  பார்க்கலாம், நடந்தும் பார்க்கலாம், படுத்தும் பார்க்கலாம், ஓடியும் பார்க்கலாம்! ஒரு பத்து நிமிடங்களுக்கு பிறகு இரண்டு பேர் வந்தார்கள். ”யாரும் தான் இல்லையே , நாம் அந்த கோல்ட் கிளாஸ் சீட்டில் உட்கார்ந்தால் ஏதாவது சொல்வார்களா?” என்று என் கணவரிடம் ஒன்றும் தெரியாதவள் போல் கேட்டுப் பார்த்தேன். உடனே அவர்,” ஆமாம் தியேட்டர் காரன் லூசு பாரு, நீ சாதா டிக்கெட் வாங்கிட்டு கோல்ட் கிளாசில் படம் பார்க்க அனுமதிக்க”, என்று நக்கலாக வார்த்தையால் கொட்டு கொட்டினார். கல்லை எரிந்து பார்ப்போமே , காய் விழுந்தால் காய், கல் விழுந்தால் தலையை காப்பாத்திக் கொள்வோம் என்று முதலிலேயே நான் தாயாராக இருந்தேன். வாயை கொடுத்து வாங்கிக் கொண்டது போதும் என்று பதில் ஏதும் பேசாமல் சமர்த்தாக இருந்து கொண்டேன்.

மகளும் , தோழியும் பேசி சிரித்துக்கொண்டே இருந்தார்கள். அப்பொழுது பார்த்து தோழி சுஜாவிடமிருந்து அழைப்பு வந்தது. “ போனை ச்விட்ச் ஆம் செஞ்சுட்டு உட்காரு “ என்று அன்பு கட்டளை கணவரிடமிருந்து வர, உடனே, நைசாக அவளுக்கு,” படம் பார்க்கிறேன்” என்று ஒரு மெசேஞ் அனுப்பி விட்டு போனை ஆஃப் செய்து வைத்துக் கொண்டேன். படம் ஆரம்பிக்கும் முன்பே நாசோஸ் முக்கால் வாசி காலி செய்து விட்டார்கள் மகளும், தோழியும்! . எங்கள் ஆறு பேறுக்காக ஒரு காட்சியா என்று சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருந்தது. ஆம் இந்த வெத்து பந்தாவிற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை தான். ஏதோ வீட்டில் ஹோம் தியேட்டரில் படம் பார்ப்பது போன்ற உணர்வு!

படமும் ஆரம்பித்தது. கண்களை விரித்து விஜய் சேதுபதியின் வருகைக்காக  திரையை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆரம்பம் முதல் எனக்கு படம் பிடிக்க தொடங்கியது. அதுவும் படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் வரும் அந்த சாவு வீட்டு பாடலில் விஜய் சேதுபதியின் நடிப்பு டாப் கிளாஸ். எதார்த்தமான உணர்வுகளின் வெளிப்பாடுகள். அவர் ஆடும் நடனமும், மற்றவர்களின் நடிப்பும் மிகவும் இயல்பாக இருந்தது. என்னதான் வெளியூர் சென்று படித்து விட்டு தன்னை ஒரு நாகரிகமான ஆளாக காட்டிக் கொள்ள முயன்றாலும், சந்தர்ப்ப சூழ்நிலையில் அந்த அடிப்படை கிராமத்து ஆளுமை எட்டி பார்ப்பதை தவிர்க்க முடியாது என்பதை அழகாக சித்தரித்திரிக்கிறார். என் தந்தையும் சரி, என் கணவரும் சரி அடிப்படையில் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான். அவர்கள் இருவரின் நடத்தையிலும் அவ்வப்பொழுது அந்த கிராமத்தான் எட்டிப் பார்க்கும் பொழுது நான்,” கிராமத்து காட்டான்”  என்று விளையாட்டாக சொல்வது உண்டு.

கதை அழகாகவே நகர்ந்தது. எல்லா கதாபாத்திரங்களும் அவர் அவர் பகுதியை நிறைவாகவே செய்து இருந்தார்கள். கல்லூரி நாட்களை காட்டும் பொழுது தான் கொஞ்சம் மெதுவாக நகர்வது போல் இருந்தது. கல்லூரியில் ஆசிரியராக வரும் ராஜேஷ் கதாபாத்திரம் பல இடங்களில் என் தந்தையை நினைவூட்டியது. எனக்கு மட்டும் தான் அப்படித்தோன்றியது என்று நான் நினைத்தேன், ஆனால் என் கணவரும்,” ராஜேஷை பார்க்கும் பொழுது மாமாவை பார்ப்பது போல் உள்ளது இல்ல”என்றார். படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை தோழிகள் இருவரும் கல கல என்று ஏதோ சொல்லி சிரித்துக்கொண்டே தான் இருந்தார்கள். அந்த வயது அப்படி. எதைப் பார்த்தாலும், கேட்டாலும் சிரிக்கத்தூண்டும். நாமும் கடந்து வந்த பாதை தானே??

பாடல்கள் காதுக்கு இனிமை சேர்ப்பவையாக இருந்தது. கதையைப் பொருத்தவரை எந்த வித செயற்கைத்தனமும் இல்லை. நமக்கு தெரிந்த ஒருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பார்ப்பது போன்று தான் இருந்தது. நம் சமுதாயத்தில் மாப்பிள்ளைகள் இன்று வரை எப்படி விலை பேசப்படுகிறார்கள் என்பதை தோல் உரித்து இயக்குநர் காட்டி இருக்கிறார். என்று அழியுமோ இந்த வரதட்சணை கொடுமைகள்! ஆயிரம் பெரியார் வந்தாலும் பத்தாது!! அதுவும் காசு கொடுத்து டாக்டர் பட்டம் வாங்கி விட்டால் கேட்கவே வேண்டாம். அவரின் விலைப் பட்டியல் பல கோடி. டாக்டர் என்பவர் உயிர் காக்கும் மனித கடவுள் என்ற நிலை மாறி காசு அச்சடிக்கும் தொழிலாக போனது நம் துரதிஷ்டமே!

எனக்கும் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற தீராத ஆசை இருந்தது. ஆனால் நான் வாங்கிய மதிப்பெண்கள் போதவில்லை. அப்பொழுது ஒரு சீட்டின் விலை ஒன்றரை லட்சம். நான் மிகவும் ஆசைப்பட்டதால் என் தந்தை, என் தாத்தாவிடம் “என்ன அப்பா கீதாவை காசு கொடுத்து டாக்டருக்கு படிக்க வைக்கலாமா?” என்று கேட்டார். அதற்கு என் தாத்தாவோ,”இவ்வளவு காசு கொடுத்து அவளை டாக்டருக்கு படிக்க வைக்கறதுக்கு பதில் நீ அவளை அந்த காசு செலவழிச்சு கல்யாணம் செஞ்சு கொடுத்திடலாம்”, என்ற போதனையை வழங்கினார். ஆனாலும் என் தந்தை என்னிடம், ”காசு கொடுத்து சேர்த்து விடட்டுமா ?“என்று கேட்டார். அப்பொழுது எல்லாம் ஒரு லட்சம் என்றால் மிகவும் நிறைய பணம் என்று நிணைத்துக்கொண்டு,என் தோழி ஒருத்தியிடம்,”ஒரு லட்சம்னா இந்த ரூம் சீலிங் வரை இருக்குமா?” என்று கேட்டேன். பின் என் தந்தையிடம் காசு கொடுத்து நான் படிக்கவில்லை என்று கூறிவிட்டேன். நான் அப்படி ஒரு முடிவு எடுத்ததற்காக பல நாட்கள் வருந்தியதுண்டு. இன்றுவரை கூட என் தந்தை அதற்காக வருந்தியிருக்கிறார். ஒரு வேளை  ஆண் பிள்ளையாக  இருந்திருந்தால் யார் பேச்சையும் கேட்காமல் பணம் கொடுத்து சேர்த்திருப்பாரோ என்னவோ? ஆண் மகன் டாக்டர் என்றால் தான் அதற்கு தனி விலை, பெண் பிள்ளை தானாகவே படித்து டாக்டர் பட்டம் வாங்கினால் கூட நம் கல்யாண சந்தையில் யாரும் காசு கொடுக்க முன்வருவதில்லை. ஆண் டாக்டருக்கும் , பெண் டாக்டருக்கும் அப்படி என்ன வித்தியாசமோ தெரியவில்லை.


இப்படத்தில் டாக்டர்கள் எப்படி சேவை மனப்பான்மையுடனும் ,மனிதாபிமானத்துடன் இருக்க வேண்டும் என்று இயக்குநர் கோடிட்டு காட்டி இருக்கிறார். அப்படிப்பட்ட மருத்துவர்களை மக்கள் எப்படி தெய்வத்திற்கு ஈடாக மதிக்கிறார்கள் என்பதும் புரியவருகிறது. என்ன தான் நாம் நாகரிக வாழ்க்கை வாழ்ந்தாலும் திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்தல் நம் கலாச்சாரத்திற்கு முரணானது என்பதை முதிர்ந்த ராஜேஷ் கதாபாத்திரத்தின் மூலம் அழகாக புரியவைக்கிறார். விவாகரத்திற்குப் பின் ஒரு பெண்ணிற்கு மறுமணம், திருநங்கைகளின் மறுவாழ்வு, என்று சில சமூக மாற்றங்களும் படத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.


படத்தில் முக்கியமான கதாபாத்திரமான விஜய் சேதுபதி , தன் சகோதரியின் மகளிடம் பாசத்தை பொழியும் அன்பு மாமாவாகவும்  , தன் தாயிடம் ஒரு பாசமிகு மகனாகவும்,  தன்னுடன் படிக்கும் பெண்  நண்பர்களிடம் கண்ணியமான நண்பனாகவும்,  காதலியிடம்  அன்பும்,  அரவணைப்பும் கூடிய காதலனாகவும், சமூதாயதின் மீது அக்கறையுள்ள மருத்துவராகவும், ஆசிரியரிடம் மரியாதை உள்ள மாணவனாகவும் , நடிப்பில் பல  நிறங்களில் மின்னுகிறார். I have to admit that he is a great romantic hero as well , though not the usual stereo typed romantic hero!!


எங்கள் நால்வருக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது. படம் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து தோழிகள் இருவரும் ஒரே சேதுபதியின் புராணம் தான் பாடிக்கொண்டு வந்தார்கள். விக்கிபீடியாவில் விஜய் சேதுபதியின் முழு ஜாதகத்தையும் அலசி ஆராய்ந்தார்கள். அவரின் வயது , படிப்பு, திருமணம் ஆனவரா, எத்துனை குழந்தைகள் என்று எல்லாம் ஆராயப்பட்டது. அவர்களின் சம்பாஷனைகளை சிறிது நேரம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த நான் ,”சரி சரி உங்கள் இருவருக்கும் விஜய் சேதுபதி மாதிரி ஒரு மாப்பிள்ளையை நான் தேடி கண்டு பிடிக்கிறேன் ,” என்றேன். அதற்கு அவர்கள் இருவரும் ரகசியமாக ஏதோ கூறிக்கொண்டு சிரித்துக் கொண்டு வந்தார்கள். எதற்கு சிரிக்கிறீர்கள் என்று நான் கேட்டதற்கு,”NOTHING" என்று ஒரே குரலில் கூறினார்கள். அந்த நத்திங் என்னவாக இருக்கும் என்று என் மண்டைக்குள் குடைந்து கொண்டே வீடு வரை பயணம் தொடர்ந்தது...........


Sunday, August 21, 2016

பேரழகியுடன் என் பயணம்!!

அன்று வெள்ளிக்கிழமை, முழு பெளர்ணமி இரவு! நண்பர் ஒருவருடன் இரவு உணவு உண்டுவிட்டு நாங்கள் காரில் வந்து கொண்டு இருந்தோம்.  இரவு எது பகல் எது என்று வேறுபடுத்த முடியாத அளவிற்கு எப்பொழுதும் வெட்ட  வெளிச்சமாக, வண்ண விளக்குகளால் ஒளியூட்டப்பட்டிருக்கும்  ஊர் சிங்கப்பூர்.  அன்றும் அப்படித்தான்! இரவு ஒன்பது மணி இருக்கும்!  ஊரே ஜகஜோதியாக காட்சியளித்தது. முன் இருக்கையில் உட்கார்ந்திருந்த நண்பர் திடீரென்று ,” வாவ், அங்கே பாருங்கள், நிலா எவ்வளவு அழகாக காட்சி அளிக்கிறது”, என்றார்.  காரை ஓட்டிக் கொண்டிருந்த என் கணவர் நிலாவை பார்க்க முயன்று கண்களை அலைய விட்டார்.” நீங்கள் ரோட்டை பார்த்து ஓட்டுங்கள்”, என்று அவருக்கு போதனை செய்துவிட்டு, பின் இருக்கையில் அமர்ந்திருந்த நான் அந்த பேரழகியை தேட முற்பட்டேன். என்னுடன் அமர்ந்திருந்த என் மகளுக்கும் எனக்கும் உடனே பார்க்க இயலவில்லை.


தலையை இங்கும் அங்குமாக திருப்பி எப்படியோ அவள் மீது கண் பதித்தோம். பார்த்த மாத்திரத்தில் அதன் அழகில் திளைத்தோம். அழகென்றால் அப்படி ஒரு அழகு.  மஞ்சள் நிறத்தழகியாய் எங்களைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள். சிரிக்கும் பொழுது நமக்கெல்லாம் வாய் கோணல் மாணலாக விரியுமே, ஆனால் அவள் மட்டும் வாய் கோணாமல் சிரித்தாள்!  யாரோ ஒரு கலைஞன் வானம் சென்று காம்ப்பஸை வைத்து அவளை பிசிறு இல்லா வட்டமாக வரைந்து வைத்து விட்டு வந்தது போல் இருந்தாள்!  எங்களுடன் வந்து கொண்டிருந்த அவளை திடீரென்று காணவில்லை.  எவ்வளவு தேடியும் காண இயலவில்லை. அருகில் இருந்த வானளாவிய கட்டிடங்களுக்குப் பின்னால் மறைந்துவிட்டாள். கட்டிட இடுக்குகளில் கொஞ்சம் கொஞ்சம் தென்பட்டுவிட்டு ஒளிந்து கொண்டாள்.  எங்களைப்பார்த்து அவளுக்கு ஏன் அத்துனை வெட்கமோ தெரியவில்லை!  வெட்ட வெளியாக ஒரு இடம் வருமா, அவளை மீண்டும் காண நேருமா என்ற தவிப்புடன் பயணம் தொடர்ந்தது! அவள் எங்களுடன் கண்ணாமூச்சு ஆடிக்கொண்டே எங்களை விட்டு பிரிய மனமின்றி பயணித்தாள்! என் நினைவுகளும் பின் நோக்கி பயணித்தது......


போன மாதம் ஊருக்கு போனபொழுது இதே மாதிரி ஒரு இரவில்  என் தங்கை குடும்பத்துடன் காரில் ஹை வேயில் பயணித்துக் கொண்டிருந்தேன். கட்டிடங்கள் இல்லா வெட்ட வெளிச் சாலை.  வானத்தில் நிலவொளியைத் தவிர வேறு எந்த  ஒளியும் இல்லா அழகிய இரவு.  என் தங்கையின் ஐந்து வயது மகன் மகா குறுப்புக்காரன்.  அவனை ஒர் இடத்தில் அமரச் செய்வது அவ்வளவு எளிதல்ல!! “கீதாம்மா நீங்கள் எனக்கு கதை சொன்னால் நான் உங்கள் பக்கத்தில் உட்காருவேன்,”என்றான். அந்த டீல் எனக்கு பிடித்திருந்தது. வலையில் மீன் மாட்டி விட்டது என்று நினைத்துக் கொண்டு, என்னருகில் அவனை அமரச்செய்து அவனுக்கு கதை சொல்ல ஆரம்பித்தேன். ஒரு கதை, இரண்டு கதை, மூன்று கதை... பின் என் சரக்கு தீர்ந்து போனது. அப்பொழுதுதான் தெரிந்தது வலையில் மாட்டியது அவனல்ல , நான் என்று!! கதை சரக்கு தீர்ந்தமாத்திரத்தில் நான், வானத்தில் அழகாக எங்களுடன் உடன் வந்து கொண்டிருந்த நிலாவைப் பற்றி அவனிடம் பேச ஆரம்பித்தேன்!!  பாட்டி நிலாவில் வடை சுட்ட கதையில் ஆரம்பித்து, ஆம்ஸ்ட்ராங் , கிராவிடேஷனல் போர்ஸ் வரை  சென்றேன்.. எவ்வளவு தான் டெக்னாலஜி வளர்ந்தாலும் நிலாவில் பாட்டி வடை சுட்ட கதை இன்றும் என்னை ஈர்க்கத்தான் செய்கிறது. அந்த நிலா மங்கையைப் போல் வாய் வலிக்காமல் சிரித்துக்கொண்டே என்னால் பேச முடியவில்லை. பேசி பேசி வாய் வலித்தது.  .


 நான் கதை சொன்ன விதம் அவனையும் ஈர்த்தது என்று நம்புகிறேன். ஒருவாராக ஒரு இடத்தில் அமர்ந்துவிட்டான். அவன் சமத்தாக இருந்தால் அன்று அவன் உறங்கியப் பின் அவனருகில் அந்த நிலா வந்து அமரும் , அவனுடன் விளையாடும் , அவனின் நண்பனாக இருக்கும் என்று கதை கட்டினேன்.  ஐந்து வயது தானே! எதையும் நம்பும் வயது . நான் சொன்னதை அப்படியே நம்பி விட்டான். ஆனால் எங்கோ அவனுக்கு லாஜிக் உதைத்தது போல. உடனே,”கீதாம்மா, மூன் என்  ஃப்ரண்டுனா ஏன் காருக்குள்ள வரமாட்டேங்குது அந்த மூன்? “ என்று குழந்தைக்கே உரிய குழந்தைதனத்துடன் என்னைக் கேட்டான். நானும், “ நீ ஒரு பதினைந்து நிமிடங்கள் பேசாமல் இருந்தால் அது காருக்குள் வரும்” , என்றேன். என் மேல் வைத்திருந்த நம்பிக்கையில் அவன் அமைதியாக நிலாவை பார்த்துக் கொண்டே வந்தான்!! அப்படியே உறங்கிப்போனான்.... கட்டாயம் அவன் தூக்கத்தில் அந்த நிலா வந்து அவனுடன் பந்து விளையாடி இருக்கும்.........  காரின் சன்னல் வழியாக அந்த நிலாவைப் பார்த்துக்கொண்டே வந்த நானும் கண் அயர்ந்தேன்!!!நிலாவும் மேகக் கூட்டங்களுக்குள் அவ்வப்பொழுது ஓய்வெடுக்க சென்றாள்.  என் கனவில் இன்னும் பின் நோக்கிச் சென்றேன்!!



நான் பிறந்தது வெள்ளிக்கிழமை, முழு பெளர்ணமி அன்று என்று என் அம்மா அடிக்கடி கூறுவாள். பெண்ணாக பிறந்து விட்டேனாம். அதற்கு தங்க முலாம் பூச அவள் எடுத்துக் கொள்ளும் ஆயுதம், “ வெள்ளிக்கிழமை, பொளர்ணமி அன்று நீ பிறந்ததால் நீ தான் இந்த வீட்டு லட்சுமி “ என்பாள். அவள் என்ன தான் முலாம் பூசினாலும் என் பாட்டி தாத்தாவிற்கு தன் மகனுக்கு முதலாவதாக ஒரு முருகன் பிறக்கவில்லையே என்ற ஏக்கம் கடைசி வரை இருக்கத்தான் செய்தது!!! பெளர்ணமி அன்று பிறந்ததால் என்னவோ என்னையும் அறியாமல் அந்த நிலவின் மேல் எனக்கு அலாதி பிரியம்! படிக்கும் பொழுது எத்தனையோ இரவுகள் வீட்டிற்கு வெளியே ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்து கொண்டு நட்சத்திரங்கள் தெளித்த அந்த கருவானத்தில் ஒளிரும் அந்த வட்ட நிலவை கண்கொட்டாமல் பார்த்து லயித்ததுண்டு. தென்னை மர கீற்றுக்கிடையில் அவளை பார்த்து ரசித்ததும் உண்டு. அப்பொழுது பெரும்பாலும் வீட்டிற்குள் இருக்கும் ரேடியோவில் கண்ணதாசன், இளையராசாவின் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும்! ஆஹா எத்துனை அழகான இரவுகள் அவை!! அப்பாடல்கள் என் கனவில் ஒலித்துக்கொண்டே இருக்க, காரிலோ “அக்கா பெத்த ஜட்கா வண்டி பாடல் எஃப் எம்மில் ஒலிக்க என் தூக்கம் களைந்தது..........கனவும் களைந்தது!!


முடிந்த காலத்தில் வாழாதீர்கள், நிகழ் காலத்தில் வாழுங்கள் , அப்பொழுது தான் வாழ்க்கை சுவையாக இருக்கும் என்று  பலர் கூறக்கேட்டுள்ளேன். நினைவுகள் இல்லா வாழ்க்கை வெறும் வெற்றுத்தாள். நினைவுகளை கொண்டு வண்ணம் தீட்டினால் தான் அது சித்திரமாக தென்படும். எனக்கு வெற்றுதாளை விட சித்திரம் தீட்டப்பட்ட தாள்கள் தான் பிடித்து இருக்கிறது!


நிலாவின் முழு அழகை ரசிக்க எனக்கு பிடித்த இடம் கடற்கறை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர், ஓயாமல் பாடிக்கொண்டிருக்கும் அலையின் ஓசை , மை போன்ற வானம், அதில் அந்த அழகிய முழு நிலவு உலா வரும் அழகை வர்ணிக்கும் அளவிற்கு எனக்கு திறமை இல்லை. மெதுவாக சிறு குழந்தை போல்  அந்த தண்ணீரை அவள் தொடுவதும் , நேரம் செல்லச் செல்ல யாரும் பார்க்காத நேரத்தில் முழுவதுமாக மூழ்குவதும் , அதைப் பார்க்கையில் கரையில் அமர்ந்து பார்க்கும் என் மனது இனம் தெரியாமல் அடித்துக்கொள்ளும்!! ” தண்ணீரிலிருந்து மீண்டும் எழுந்து  வருவாளா? இல்லை அப்படியே மூழ்கி விடுவாளா என்ற பதபதைப்பு!! அவள் தண்ணீரில் மூழ்குவதால் அவளின் வெண்ணிறம் கரைந்து கடல் நுரையாய் பொங்குகிறதோ?? மணலில் அமர்ந்த படி ஒரு ஞ்யானியாய் தவமிருக்கும் அந்த நேரம் எனக்கு மட்டுமே சொந்தம்!!


அமைதியான குளக்கரையில் நான் அமர்ந்து இருக்கும் வேளை , சலனமற்ற குளத்து நீரில் அவள் முகம் பார்த்து அவளே ரசிப்பது கண்டு நான் ஆச்சரியப்பட்டு பார்த்திருக்கிறேன். எங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் சில நாள் அவள் குளிக்க வருவதும் உண்டு. !!தண்ணீர் தொட்டியில் விரல் கொண்டு விளையாடி அவளை நான் தொட முயன்றதும் உண்டு!என் இரவு நேர நடை பயிற்சிக்கு எனக்கு பல நேரம் அந்த நிலவே துணை! அவளிடம் என் எண்ணங்களை பகிர்ந்து கொண்டே நடப்பேன். நேரம் போவதே எனக்கு தெரியாது. இப்பொழுது அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கும் எனக்கு, வீட்டில் ஒரு பால்கனி இல்லையே, இருந்திருந்தால் இரவு நேரங்களில் அமைதியாக உட்கார்ந்து அவளை தனிமையில் ரசிக்கலாமே என்ற ஏக்கம் அவ்வப்பொழுது தலை தூக்கத்தான் செய்கிறது.


நண்பரை அவரின் வீட்டில் இறக்கி விட்டு விட்டு எங்கள் வீடு நோக்கி பயணித்தோம்! அவளும் எங்களுடன் உடன் வந்தாள். என் மகளிடமும், மகனிடமும்,“இன்று நிலா எவ்வளவு பெரிதாக இருக்கிறது பாருங்கள் ’”என்றேன். உடனே என் மகன்,” Mama Whats the big deal. It is one of those days when the moon is very close to the earth. Thats all." என்று அவனது அறிவியல் அறிவை பகிர்ந்து கொண்டான். அவனால் அதன் அழகியலை பார்த்து ரசிக்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு.  நான் என் கைத்தொலை பேசியை எடுத்து அந்த நிலவு பேரழகியை படம் பிடிக்க முற்பட்டேன்.. வண்டி வேகமாக போன படியால் என்னால் உடனே படம் பிடிக்க முடியவில்லை. அவளும் கட்டிடங்களுக்கிடையே மறைந்து மறைந்து போனாள். இதை பார்த்த என் மகள்,”mama, You cant do justice to its beauty by taking a picture with your phone, you have to just enjoy it with your eyes ," என்றாள்.


ஆமாம்! உண்மை தான் அவளின் அழகை, வணப்பை,சிரிப்பை, ஒளியை என் கைத்தொலைபேசிக்குள் அடக்குவது முட்டாள் தனம். மனதுக்குள் பூட்டி வைக்க வேண்டிய அழகை ஒரு சிறு கருவிக்குள் முடக்க முடியுமா???? நேரம் செல்ல செல்ல அவள் பின் நோக்கி போகத் தொடங்கினாள். அவளின் உருவம் சிறியதாகிக் கொண்டே போனது. வளர்தலும், பின் தேய்தலும், பின் மீண்டும் வளர்தலும் ஆன சுழற்சி அவளுக்கு மட்டும் சொந்தமல்ல, மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் அச்சுழற்சி சொந்தம் தான்!! அவள் மீண்டும் வருவாள் ! அப்பேரழகியின் உருவத்தை என் கண்களுக்குள் விலங்கிட்டு நான் உறங்கச் செல்கிறேன்... பயணம் தொடரும்!!!!



Monday, August 15, 2016

எது சுதந்திரம்!!

எதார்த்தமான சொல் வேண்டும், 
செயல் வேண்டும்,
நல்லெண்ணம் வேண்டும்.
பகையில்லா உறவு வேண்டும்
பயமில்லா வாழ்க்கை வேண்டும்
சுத்தமான சுற்றுப்புறம் வேண்டும்
தூய்மையான காற்று வேண்டும்
கலப்படமில்லா உணவு வேண்டும்
அறிவும், நல்லொழுக்கமும் தரும் கல்வி வேண்டும்
ஆரோக்கியமான வாழ்வு வேண்டும்
பேசிப் பழகும் சுற்றத்தார் வேண்டும்
ஏற்றத்தாழ்வு இல்லா சமூகம் வேண்டும்
பிற உயிரை தனதென மதிக்கும் எண்ணம் வேண்டும்
குழந்தைகளை தெய்வமென நினைக்கும் குணம் வேண்டும்
எல்லாவற்றிற்கும் மேலாக,
சாய்ந்து அழ தோள் ஒன்று வேண்டும்....
என்னை எனக்காக நேசிக்கும் சொந்தம் வேண்டும்
நான் நானாக வாழும் நாள் வேண்டும்
இத்தகைய சுதந்திர தினம் சீக்கிரம் கொண்டாட வேண்டும்

Sunday, August 14, 2016

மரண வலி-- கவிஞர் நா. முத்துக்குமாருக்காக என் அஞ்சலி......

எமனுக்கு சிறிது கூடவா
இரக்கம் இல்லை என்று
நிணைக்க வைத்த நாள் இன்று!

உறவாக இல்லை என்றாலும்
உயிர் பிரிந்த செய்தி
உள்ளத்தை அறுத்த நாள் இன்று!

உன் உயிரனு தாங்கிய குழந்தைகள் இரண்டு
அனாதைகள் ஆயின இன்று!!
நீ உயிர் தந்த பல நூறு பாடல்கள்
மீண்டும் உயிர் பெற்றன இன்று!!

கால தேவன் மட்டும்
இன்று உன்னை தன் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு செல்லாமல் இருந்திருந்தால்
தமிழ் தாய் மடியில்
கொஞ்சி விளையாட
பல்லாயிரக் கவிதை குழந்தைகளை
நீ ஈன்றெடுத்திருப்பாய்!!

பூவுலகில் உன் கவிதைக் குழந்தைகள்
தாவி விளையாட இடம் இல்லை என்றா
அந்த சொர்கலோகம் சென்று விட்டாய்
பிரசவிக்க??

எங்கள் வீடுகளில் எல்லாம்
ஆனந்த யாழை மீட்டி விட்டு,
உன் வீட்டு யாழை மட்டும்
ஊமையாக்கி போனதேனோ??

செய்தி பல பொய்யாகி போன போது,
உன் மரண செய்தி மட்டும்
பொய்யாகி போகாதது ஏனோ??

குழந்தையாய் உன்னை விட்டு
உயிர் நீத்த உன் தாய் தேடி
நீ சென்று விட்டாயா??
நீ இழந்த தாய் மடியில்
அங்கேனும் அமைதியாய் நீ உறங்கிடுவாய்!!

அமைதியாய் நீ அங்கே உறங்கச் செல்ல
இங்கே உன் வீட்டு மழலைகள்
யார் மடியில் உறங்கிடுவர்?
தூக்கம் தான் தொலைத்தனரே
துக்கத்தில் மூழ்கினரே!!

Saturday, July 30, 2016

கபாலி = மகிழ்ச்சி

கபாலி  = மகிழ்ச்சி

இன்று ஆடி வெள்ளி ! நானும் என் மகளும் கபாலி ஜோதியில் ஐக்கியமாக புறப்பட்டோம். மதியம் 3.30 மணிக்கு படம். வீட்டிலிருந்து தியேட்டர் ஒரு பதினைந்து நிமிடங்கள் தான். கடந்த ஒரு வாரமாக உலகெங்கும் கபாலி ஜுரம் அடித்துக் கொண்டு இருந்ததால் நாங்கள் சிறிது ஜாக்கிரதையாகவே இருந்து வந்தோம். கபாலி புயல் கரையை கடந்து விட்டதால் நாங்கள் துணிந்து புறப்பட்டோம். தியேட்டரில் பதினைந்து பேருக்கு மேல் இருக்கவில்லை. என்னவோ ஷ்பெஷல் ஷோ பார்க்கச் சென்றதைப் போன்ற ஒரு உணர்வு. என் தோழியிடம் விமர்சனம் கேட்ட பின் தான் நான்  படம் பார்க்க முடிவு செய்தேன். படமும் ஆரம்பித்தது.

ஏற்கனவே கபாலியை அக்கு வேறு ஆணி வேறாக பிய்த்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் என் பங்கிற்கு நானும் அதை பிரித்து மேய விரும்பவில்லை. படம் எப்படி என்று என்னைக் கேட்டால் கபாலி ஸ்டைலில் “மகிழ்ச்சி” என்பேன். பொழுது போக்கான படம். எனக்கு மட்டும் அல்ல , என் மகளுக்கும் பிடித்திருந்தது. இப்படத்தில் வரும் கபாலியை பார்த்தால் நீலாம்பரி நிச்சயம் மீண்டும் மீண்டு வருவாள்.

படத்தை பற்றி கூறும் பொழுது என் தோழி கூறினாள், ”கீதா , நடிப்புனா கமல்கிட்ட எதிர் பார்க்கலாம், ரஜினிகிட்ட ஸ்டைலைத்தான் எதிர்பார்க்க முடியும். இந்த வயதிலும் அது ரஜினியிடம் குறையவில்லை. இசை இல்லாமல் இப்படத்தை நினைத்துப் பாரேன் எப்படி இருக்கும் என்று? முயூசிக் தான் காபாலி வரும் பொழுதெல்லாம் தெறிக்க காரணம் “, என்றாள். நானும் இசையில்லாமல் கபாலி வரும் இடங்களை நினைத்துப் பார்த்தேன். மிஸ்டர் பீன் பார்த்த எஃபெக்ட் கண் முன் தெர்ந்தது!!


சிலரிடம் கேட்ட பொழுது “ஒரு முறை படம் பார்க்கலாம்” என்று கூறினார்கள். என்னைப் பொருத்தவரை படம் பார்ப்பதே பொழுதுபோக்கிற்காக ஒரு முறை தான். நான் என்ன படம் பார்த்துவிட்டு பி.ஹெச்.டி யா பண்ணப்போகிறேன்? ஒரு வேளை,”ஒரு முறை பார்க்கலாம் என்றால், படத்தின் இடையிலேயே எழுந்து வெளியே வந்து விடாமல் பார்ப்பதா? பொதுவாக வீட்டில் படம் பார்த்தால் தான் பிடிக்கவில்லை என்றால் பாதியில் நிறுத்து விடுவோம் .  தியேட்டரில் காசு கொடுத்து பொழுது போக்கிற்காக படம் பார்க்க செல்லும் பொழுது ,பெரும்பாலும் மொக்கை படத்தைக் கூட முழுவதுமாக பார்த்துவிட்டு குறை கூருவோமே ஒழிய பாதியில் வரமாட்டோம். நான் கணக்கில் அடங்கா முறை ஒரு படம் பார்த்தேன் என்றால் அது ரோஜாவாகத்தான் இருக்கும். இன்றும் டிவியில் ரோஜா படம் போட்டால் , அரவிந்சாமியை தீவிரவாதிகள் பிடித்துச்செல்லும் காட்சி வரை வாயை பிளந்து கொண்டு பார்ப்பேன். பின் எழுந்து போய் விடுவேன் அல்லது டிவியை அனைத்து விடுவேன். அப்படம் தவிர வேறு எந்த படத்தையும் மீண்டும் மீண்டும் பார்த்தது கிடையாது. அப்படி இருக்க, ஒரு படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்று சொல்வதை விட்டு, நல்லா இருந்தது அல்லது சுமாராக இருந்தது அல்லது படு மோசம் என்று தெளிவாக கூறிவிடலாம்.


இப்படத்தை பார்த்துவிட்டு வெளியில் வரும் பொழுது மலேசிய தமிழ் மக்களின் வாழ்வைப் பற்றி ஒரு சிறு புரிதல் ஏற்படுகிறது. கபாலி வந்தாலும் வந்தது   இப்பொழுது வலைதளம் முழுதும் மலேசிய தமிழர்களின் வரலாறு அலசி ஆராயப்படுகிறது. இதுவரை நம்  ரேடாரில் வராத அவர்களின் வாழ்க்கை பாதையை எல்லோரும் தெரிந்து கொள்ள முயல்கிறோம்.  இலங்கை தமிழர்களைப் பற்றி மட்டுமே பேசி வந்த நாம் கபாலிக்குப் பின் மலேசிய தமிழர்களின்பாலும் நம் பார்வையை திருப்பி உள்ளது மகிழ்ச்சியான விஷயம் தான். ஆனால் நம் அரசியல் தலைவர்கள் இதனை அரசியல் ஆக்காமல் , தாங்கள் மீன் பிடிக்க  குட்டையை குழப்பாமல் இருக்க வேண்டும்.


யாரோ ஒருவர் கேஸ் போட்டு இருக்காராம். சீனியர் சிட்டிசனான ரஜினியை துன்புறுத்தி நடிக்க வைக்கும் தயாளிப்பாளர்கள், இயக்குனர்களிடமிருந்து அவரைக் காப்பாற்றி முதியோர் இல்லத்தில் அவரை பத்திரமாக சேர்த்து விடுங்கள் என்று. இதை என் மகளிடம் நான் கூறியபொழுது அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். ஆனால் படம் பார்த்துவிட்டு,”அம்மா, இந்த வயதிலும் ஹவ் ஆக்டிவ் ஹி இஸ்!! என்றாள். சிறு வயதில் தீவிர ரஜினி ரசிகையான எனக்கு ரஜினியின் இந்த கபாலி பிறவி மகிழ்வைத்தான் தந்தது. இனி தமிழ் நாட்டில் கிமு, கிபி போய் கமு , கபி என்று வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. மொத்தத்தில் கபாலி = மகிழ்ச்சி..........

Wednesday, May 25, 2016

மிதியடி

மிதியடி

என்னை அழுக்காக்கிவிட்டு
உள்ளே செல்லும் நீ
சுத்தமானவன்,
உன் அழுக்கை
சுமக்கும் நானோ
வீட்டின் வெளியே
தீண்டத்தகாதவனாக!!!!

எங்கு சென்று வந்தாலும்
உன்னை வீட்டிற்குள் முதலில்
வரவேற்பென்பது நானாக இருப்பினும்,
 ஒரு நாளும் யாரும்
 என்னை வீட்டிற்குள்
அழைப்பதில்லை!!

சுமை தாங்க நான் 
முடியாதவனாக ஆகும் நேரம்
என் சுமை இரக்க யாரும் நினைப்பதில்லை!!
வேறொரு சுமைதாங்கி 
என் இடம் வந்து சேர்கிறான்,
நானோ சவக்குழியில்!!!

Monday, May 23, 2016

வடிவழகி!!

வடிவழகி!!

முதலில் நீல வண்ண ஆடை,
அதை ரசித்து நான் முடிக்கவில்லை அதற்குள்,
நீலமும் மஞ்சளும் கலந்த பட்டாடை!
கண்கள் அக்காட்சியை பார்த்து கிரகிக்கு முன்,
தக தக என ஜொலிக்கும் தங்க நிற ஆடை,
மனம் இதில் மயங்கி கிடக்கும் வேளை
தீடீரென்று வந்தாள்
செம்மஞ்சளும் சாம்பலும் கலந்த புதிய வடிவில்,
இவ்வழகை கண்டு களிக்கும் நொடிக்குள்
மாறிவிட்டாள் மின்மினி பூச்சுக்கள்
பதித்த கருநிற ஆடைக்கு!
எத்துனை வடிவில் உலா வருகிறாள்
இந்த வடிவழகி?
வான மங்கைக்கு
மட்டும் அலுக்கவே அலுக்காதா
இத்தனை ஆடைகளை
ஒரே நாளில் மாற்ற?

Sunday, May 8, 2016

அம்மா!!

அம்மா!!
என் வாழ்க்கையின் வழிகாட்டி நட்சத்திரம் நீ,
என் கனவுகளின் விடிவெள்ளி நீ!!
நான் உருபெரும் முன்பே,
எனக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தவள் நீ!!
என்னை சுமந்து போது
என் பசிக்காக நீ உண்டாய்!!
நான் பிறந்த பின்போ
என் பசி தீர்க்கும் வரை  பசி மறந்தாய்!!

எனக்காக நீ கழித்த
உறங்கா அந்த இரவுகளுக்கு
ஈடு தான் உண்டோ??
இன்று நான் மலர் படுக்கையில்
உறங்கினாலும், அன்று
உன் கருவறையில்
தூங்கிய அமைதியான
தூக்கம்தான் மீண்டும் வருமோ??

என் கைத்தொலைபேசியில்
ஆயிரமாயிரம் பாட்டுக்கள் உண்டு,
ஆனால் நான் கண் உறங்குவதோ
உன் இனிய தாலாட்டுக்குத்தான்!!

உன்னுள் வாழ்ந்த
கலைஞனையும், எழுத்தாளனையும்
நீ பிரசவிக்க வாய்ப்பே கொடுக்கப்படவில்லை!
உன்னுள் இருக்கும் மனிதம் இன்று வரை உணரப்படவில்லை!
இருந்த போதும் யாரிடமும் உன் அன்பு மாறவே இல்லை!


எத்துனை பேர் வந்தாலும்
சமைக்க நீ அலுத்ததில்லை!
அத்துனை சமையலிலும் உன் அன்பை
 கலக்க நீ மறந்ததில்லை!
உனக்கென்று எதையும் வைத்துக்கொள்ள
 என்றும் நீ அறிந்ததில்லை!
பிறர் அன்பு மட்டும் எதிர் பார்த்த உனக்கு
பல நேரம் அது கிடைக்கவில்லை!


வாழ்க்கையில் நீ பயந்த பலவற்றை
துணிந்து செய்யும் சிங்கக்குட்டிகளாய்
எங்களை வளர்த்தாய்!!
என்னையும் ஒரு புலிதாயாய்
நீ அறியாமலேயே வார்த்தெடுத்தாய்!!
இரண்டு இளவரசிகளை பெற்றப் பின்
ஓர் இளவரசனுக்காக என்றும் நீ ஏங்கியதில்லை!!
ஏச்சுக்கள் பல கேட்டும்
என்றும் நீ தளரவில்லை!!

நான் தாயான போதிலிருந்து
என் நினைவுகளிலும், செயல்களிலும்
நீ தொட முடியா உயரத்தை அடைந்துவிட்டாய்!!
உருவமும், உள்ளமும் குளைந்த போதும்
உன் உறுதி என்றும் தேக்குத்தான்!!

எனக்கு கிடைத்த மிகச்சிறந்த தாயைப்போல்
என் மக்களும் பெற்றாரென
என்றாவது ஓர் நாள் நினைப்பார்களா?

உன்னில் உள்ள நானும்,
என்னில் உள்ள நீயும்,
என்றும் நமக்கு அழியாவரம்!!
இவ்வுலகில் நாம் வாழும் வரை,
இப்பிரபஞ்சம் உள்ளவரை,
பின் என்றும், என்றும்
நீயே என் அன்பு தேவதை அம்மா!!







Mom

MOM,
The guiding star in my life,
The evening star of my dreams!!
You named me even before I took shape!!
When you bore me inside
You ate for my hunger!!
After I was born ,
You starved because of the hungry ME!!


Will there be a compensation for
those countless sleepless nights you spent on me?
Though  I sleep on a bed of roses
Will I ever get back the peaceful sleep
When I slept in your water bed??
Thousands songs in my mobile
Nothing soothes my heart other than your sweet lullaby!!


Never were you given the chance
To deliver the artist in you nor the writer in you!!
Though not recognized for the human in you
never did you cease from loving anyone!!
For all those things you feared in life
You brought us up like fearless cubs!!
Mother of two princess but
have not till date heard your wish for a prince!!


You stand high in my thoughts and actions,
After I  took your role as a mom!!
Will my children ever think
They are gifted as I am
to be blessed with the best mom?


The me in you
and the you in me
will always be our everlasting blessing!
You will be my guardian angel not till we live in this earth
But for ever and ever and ever till this Universe exists!!!!





Wednesday, May 4, 2016

Target Dad

Target Dad
Friday evening! Dad had a long day in office. It was a labour day long week end so he decided to relax and watch a movie. He thought a glass of wine would be the best way to relax. He was in the kitchen getting ready for the show. Rishi came into the kitchen and witnessed the whole process of his dad religiously filling up his glass with care and patience.
Rishi: Papa why do you want to drink this?
Dad: Why Rishi ? What is your problem If I drink wine? I want to relax .and watch a movie.
Rishi: If you want to relax why dont you drink something good for your health Papa?
Dad: Wine is good for health Rishi.
Rishi: I dont think so Papa.
Dad: Why do you say so ? It is just grape juice.
Rishi: Ya Papa if grape juice is fresh it is good for health. But this is just ROTTEN GRAPE JUICE. How can this be good for your health.\
Dad: No Rishi this is well fermented and preserved.
Rishi: So do you mean to say even if it is rotten for years but well preserved you can drink it and it is good for your health?
Dad got offended. He wanted to give it back to Rishi with a firm voice.
Dad: It is much better than all the soft drinks you drink Rishi.
Rishi: Papa, at least pepsi and coke has date of expiry. This has only date of manufacture and no expiry date. You sound SO SO WEIRD PAPA...
Saying so he left the kitchen .He didnt wait for any further explanation. Happy that he had put across his point and hoped that hereafter there wont be any more lectures on how bad soft drinks are. Now he has his counter attack...Dad was already auto tuned to relaxing mode. So he didnt bother to continue the conversation.
Mom, who was witnessing the whole episode was very happy that the weekend was Target Dad week end .......Yes it does feel nice when you are at times out of focus ..... Enjoy Dad!!!
Lesson learnt: Target changes!!

Friday, April 29, 2016

அவதாரம்!!

மஞ்சள் ஆடை
உடுத்தி மங்களமாய்
ஜொலிக்கிறாய்,
கோபம் என்றால்
தீயை உமிழ்கிறாய்,
குளிர் காலத்தில்
செந்தனலாய்
அணைக்கிறாய்,
மழைக் காலத்தில்
ஒரு நாள்
உனை பார்க்காவிட்டாலும்
ஏங்கி தவிக்க வைக்கிறாய்,
உன் பார்வை
படும் இடம் யாவும்
உயிர் பயிரிட்டு
போகிறாய்,
சில நேரங்களில்
பருவமடைந்த
பெண்ணைப் போல்
மேக திரைக்குப்பின்
மறைகிறாய்,
உனக்கு இல்லை
வளர்பிறையோ, தேய்பிறையோ!
உன் அழகில்
கண் கூசி
மயங்கித்தானே
நாங்கள் இன்று வரை
வாழ்கிறோம்,

எப்படியும் மடியும்
மனிதன் மேல்
மரித்தல் இல்லா
உனக்கு ஏன்
இப்பொழுது
இவ்வளவு
கடுங்கோபம்?
எப்படியும்
எமை மாய்த்து விட
வாழும் இடம் யாவும்
பாலைவனமாய்
மாற்றி விட்டாய்,
காய் கனிகள்
யாவையுமே
பூ முதல் கருகச் செய்தாய்,

பூமித்தாயை அறியாமல்
அவமதித்தோம்,
உன் கோபம் நாங்கள்
உணர்ந்தோம்,
தவணையில்
எங்கள் தவற்றை
திருத்திக் கொள்ள
சந்தர்ப்பம் ஒன்று
வேண்டினோம்,
பட்டுத்திறுந்தா
எங்களை
சுட்டுத் திருத்த
நீ எடுத்த
இந்த அவதாரம்
என்று முடியுமோ?






Thursday, April 28, 2016

For Ever....

Sweet or bitter
words that fall
off from one's mouth,
The food
one's mouth enjoys 
and the lovable soul
who served it
stay in memory
for ever and ever....


நன்றோ தீதோ
பிறர் வாய் வழி
விழும் வார்த்தை,.
வாய் சுவைக்கும்
உணவு
அதை அன்போடு
இட்டவர்
யாவும் நிலைக்கும்
நிணைவில்
உயிர் உள்ளவரை...

Saturday, April 23, 2016

AGAINN!!

AGAINNN!!
Saturday evenings are the most boring evenings if you have to stay at home. Mom was very bored and asked Rishi to accompany her to the temple AGAIN.
Mom: Rishi , come let us both go to the temple .
Rishi: Mom this is too much. Already you took me twice to the temple last week. Now again you want me to come. Please ma. Leave me in the house. You can go and come.
Mom: I dont want to leave you alone in the house Rishi. You will end up sitting like a couch potato in front of the tv. Instead you come with me. It will be a change for you.
Rishi: NO ma. you can lock the house and go. I will be in the basket ball court . After you come you call me.
Mom: No Rishi you just come with me.
Rishi: Ma it is the same bus, same route, round and round and round to the same temple.
Mom: Ya add one more thing. same bus, same route, same temple accompanying the same Mom.
Rishi: Ma you are so weird. Ok I have no other choice I will come. But on one condition. This time I will use my stop watch. Ten minutes only for you to spend inside the temple. If you dont come after ten minutes, then I will leave you alone and go home . OK? Deal ??
Mom: I have a better deal Rishi. You come to the temple and on the way back I will get you a Subway sandwich. How is this deal?
Rishi: Ma this sounds a better deal. Sometimes even you think logically.
They both finished praying and after that Rishi asked: What is the special occasion ma. I see the temple decorated?
Mom: Ya yesterday was Thirukalyanam function.
Rishi: What is that?
Mom: That means Rama and Seetha's wedding took place yesterday.
There was a pause . Rishi opened his eyes wide with an open mouth. There was a big question mark inbetween his eyebrows. He was not convinced with the answer.
Rishi: What , I thought they were already married and were living in heavenly abode.
Mom: Yes they are already married but every year we do it to celebrate it like how we celebrate our wedding anniversary.
Rishi: But you told me they got married yesterday.
Mom, though visits the temple often is not very knowledgeable about these particulars. Most of her visits are with a big wish list. Still she had to give an answer to her Guru son.
Mom: Yes when they got married in heaven we people couldnt see it. thats why they get married on Earth every year so that we can be part of the ceremony.
Now Rishi had another doubt.
Rishi: Ma, then why dont human beings get married every year again and again.
Mom : Most of the human beings regret for having gotten married once , then why would they want to get married every year.
Rishi: Ya true, it is such a waste of money and time to get married.
Anyways I am not going to get married.
Thank God the bus came and saved mom from further question and answer sessions. Rishi was very happy because he got his subway sandwich . Yes it was a DONE DEAL!!!

Friday, April 22, 2016

மறுவாழ்வு!!

குலை தள்ளியப் பின்
வெட்டித் தள்ளப்படும் வாழை,
முத்தியப் பின்
வெட்டிச் சாய்க்கப்படும் தேக்கு,
இவற்றிற்குண்டு மறுவாழ்வு,
ஆனால்,
ரத்தம் சுண்டியப்பின்
 மனிதனுக்கில்லை வாழ்வு!!

Tuesday, April 19, 2016

Guru Son

Guru Son!!
April 14th! Mom decided to take Rishi to the temple because it was Tamil New Year.
Mom: Rishi lets go to the temple .
Rishi: What is the occassion ma?
Mom: Today is Tamil New Year , auspicious day. You have started your 9th grade. You come to the temple and pray to God to guide you through these two years so that you can do well in your board exams
.
Rishi reluctantly accepted mom's suggestion. Both mom and son boarded a bus to go to the temple. As soon as they got into the bus Rishi was wired with his earphones.
Mom: Rishi , 24/7 you are with your earphones. Dont you feel like looking at the trees, houses outside ?
Rishi: I have seen this so many times ma. Nothing new.
Mom: Rishi you have to learn to enjoy the small things in nature.
Rishi: Who said I dont enjoy ? Its only that my way of enjoyment is different from that of yours.
Mom: If that is the case then atleast you should know how to share your emotions with others.
Rishi: Ma, I dont want to be an emotional fool like you with relations ma. I will become a business man and I can't be an emotional person while taking decisions.
This was lesson number one for mom. "Mom is an emotional fool"
The bus was going up the hill. It was a nice scenic road. Mom was enjoying looking outside. Travelling by an ac bus itself is a luxury and that too just with few people in the bus you feel even more awesome. Mom took that particular route just to enjoy the scenic view.
Rishi: How long will it take to reach the temple ma?
Mom: It will take another ten minutes .
Rishi: If we had taken the usual route dont you think we could have reached by now?
Mom: Yes Rishi. This takes just extra ten minutes thats all. I dont think it makes any difference. But look at the view. It is so beautiful.Look you can see the sea from here.
Rishi :Ma it is the same sea we see every week while crossing ECP. . I have so many things to do at home. Now since you have taken ten extra minutes of my time I want you to do like what I say.
Mom: What is it ?
Rishi:When we reach the temple you dont spend too much time like usual. Make sure YOU PRAY WITH PACE AND PRECISION. And also dont forget to be PRECISE in your prayers.
Mom: I pray for everyone Rishi . I cant be precise.
Rishi: Then just dont pray for everyone. Pray for yourself and come quickly.
Mom was like :"What?" What do you mean by precise in my prayers?
Rishi: Ya ma, just cut short your prayers and make it fast so that we can reach home fast.
Lesson number 2. Prayers should be precise.
Both of them got down from the bus in the bus interchange. while walking towards the temple out of the blue Rishi had a doubt .
Rishi: Ma what does generation gap mean? how many years of difference mean a generation?
Mom: Rishi we can say every ten years difference will mean a generation gap. There is a difference in the thinking, ideas, approach, everything.
Rishi: So you mean to say you are three generations behind me. No wonder now I understand why you say certain weird things now and then.
Even though mom is walking on the road she closes her eyes for a minute and takes a deep breath.
Lesson number 3.She is almost in stone age according to her son.
When they reached the temple they both did their prayers. Rishi finished his in a jiffy. Of course Mom listened to her Guruson. Unlike her usual temple visits she finished off her prayers in few minutes. They were about to leave the temple when Rishi came up again,
Rishi: Ma , you know what ? God answered my prayers immediately today.
Mom was surprised.
Mom: Rishi , how can God answer your prayers in few minutes. Your board exams are only two years from now?
Rishi: Maaaa, it is not about that. I have been wanting to reach a level in my game . I have been trying since so many months. Today I prayed to God that I should reach it soon like even before I left the temple. . Before you finished your prayers he answered my prayers . I already reached that level, I wished in the game.
Mom had absolutely no words to speak. She had brought him to the temple hoping he would pray for his studies. And throughout the time they were together all that was in his mind was how to reach the level he wished in the game.
Lesson number 4 was that she can never ever influence her Guru son.
They both walked towards the bus stop. There was a bus approaching the bus stop. Mom couldnt walk fast. They had to miss the bus. As an icing on the cake, Rishi said, "Mom I wish you were born ten years later. In that case you would have walked fast and we would not have missed the bus>"
Finally they got into another bus and headed towards home. Mom maintained silence throughout their way back home since she had lost her capability for the day to learn more lessons from her Guru Son. He was happy with his earphones glued to his ears. Next time mom will think not twice but ten times before she calls her son to accompany her to the temple....... Om Guru Saranam......