Sunday, August 21, 2016

பேரழகியுடன் என் பயணம்!!

அன்று வெள்ளிக்கிழமை, முழு பெளர்ணமி இரவு! நண்பர் ஒருவருடன் இரவு உணவு உண்டுவிட்டு நாங்கள் காரில் வந்து கொண்டு இருந்தோம்.  இரவு எது பகல் எது என்று வேறுபடுத்த முடியாத அளவிற்கு எப்பொழுதும் வெட்ட  வெளிச்சமாக, வண்ண விளக்குகளால் ஒளியூட்டப்பட்டிருக்கும்  ஊர் சிங்கப்பூர்.  அன்றும் அப்படித்தான்! இரவு ஒன்பது மணி இருக்கும்!  ஊரே ஜகஜோதியாக காட்சியளித்தது. முன் இருக்கையில் உட்கார்ந்திருந்த நண்பர் திடீரென்று ,” வாவ், அங்கே பாருங்கள், நிலா எவ்வளவு அழகாக காட்சி அளிக்கிறது”, என்றார்.  காரை ஓட்டிக் கொண்டிருந்த என் கணவர் நிலாவை பார்க்க முயன்று கண்களை அலைய விட்டார்.” நீங்கள் ரோட்டை பார்த்து ஓட்டுங்கள்”, என்று அவருக்கு போதனை செய்துவிட்டு, பின் இருக்கையில் அமர்ந்திருந்த நான் அந்த பேரழகியை தேட முற்பட்டேன். என்னுடன் அமர்ந்திருந்த என் மகளுக்கும் எனக்கும் உடனே பார்க்க இயலவில்லை.


தலையை இங்கும் அங்குமாக திருப்பி எப்படியோ அவள் மீது கண் பதித்தோம். பார்த்த மாத்திரத்தில் அதன் அழகில் திளைத்தோம். அழகென்றால் அப்படி ஒரு அழகு.  மஞ்சள் நிறத்தழகியாய் எங்களைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள். சிரிக்கும் பொழுது நமக்கெல்லாம் வாய் கோணல் மாணலாக விரியுமே, ஆனால் அவள் மட்டும் வாய் கோணாமல் சிரித்தாள்!  யாரோ ஒரு கலைஞன் வானம் சென்று காம்ப்பஸை வைத்து அவளை பிசிறு இல்லா வட்டமாக வரைந்து வைத்து விட்டு வந்தது போல் இருந்தாள்!  எங்களுடன் வந்து கொண்டிருந்த அவளை திடீரென்று காணவில்லை.  எவ்வளவு தேடியும் காண இயலவில்லை. அருகில் இருந்த வானளாவிய கட்டிடங்களுக்குப் பின்னால் மறைந்துவிட்டாள். கட்டிட இடுக்குகளில் கொஞ்சம் கொஞ்சம் தென்பட்டுவிட்டு ஒளிந்து கொண்டாள்.  எங்களைப்பார்த்து அவளுக்கு ஏன் அத்துனை வெட்கமோ தெரியவில்லை!  வெட்ட வெளியாக ஒரு இடம் வருமா, அவளை மீண்டும் காண நேருமா என்ற தவிப்புடன் பயணம் தொடர்ந்தது! அவள் எங்களுடன் கண்ணாமூச்சு ஆடிக்கொண்டே எங்களை விட்டு பிரிய மனமின்றி பயணித்தாள்! என் நினைவுகளும் பின் நோக்கி பயணித்தது......


போன மாதம் ஊருக்கு போனபொழுது இதே மாதிரி ஒரு இரவில்  என் தங்கை குடும்பத்துடன் காரில் ஹை வேயில் பயணித்துக் கொண்டிருந்தேன். கட்டிடங்கள் இல்லா வெட்ட வெளிச் சாலை.  வானத்தில் நிலவொளியைத் தவிர வேறு எந்த  ஒளியும் இல்லா அழகிய இரவு.  என் தங்கையின் ஐந்து வயது மகன் மகா குறுப்புக்காரன்.  அவனை ஒர் இடத்தில் அமரச் செய்வது அவ்வளவு எளிதல்ல!! “கீதாம்மா நீங்கள் எனக்கு கதை சொன்னால் நான் உங்கள் பக்கத்தில் உட்காருவேன்,”என்றான். அந்த டீல் எனக்கு பிடித்திருந்தது. வலையில் மீன் மாட்டி விட்டது என்று நினைத்துக் கொண்டு, என்னருகில் அவனை அமரச்செய்து அவனுக்கு கதை சொல்ல ஆரம்பித்தேன். ஒரு கதை, இரண்டு கதை, மூன்று கதை... பின் என் சரக்கு தீர்ந்து போனது. அப்பொழுதுதான் தெரிந்தது வலையில் மாட்டியது அவனல்ல , நான் என்று!! கதை சரக்கு தீர்ந்தமாத்திரத்தில் நான், வானத்தில் அழகாக எங்களுடன் உடன் வந்து கொண்டிருந்த நிலாவைப் பற்றி அவனிடம் பேச ஆரம்பித்தேன்!!  பாட்டி நிலாவில் வடை சுட்ட கதையில் ஆரம்பித்து, ஆம்ஸ்ட்ராங் , கிராவிடேஷனல் போர்ஸ் வரை  சென்றேன்.. எவ்வளவு தான் டெக்னாலஜி வளர்ந்தாலும் நிலாவில் பாட்டி வடை சுட்ட கதை இன்றும் என்னை ஈர்க்கத்தான் செய்கிறது. அந்த நிலா மங்கையைப் போல் வாய் வலிக்காமல் சிரித்துக்கொண்டே என்னால் பேச முடியவில்லை. பேசி பேசி வாய் வலித்தது.  .


 நான் கதை சொன்ன விதம் அவனையும் ஈர்த்தது என்று நம்புகிறேன். ஒருவாராக ஒரு இடத்தில் அமர்ந்துவிட்டான். அவன் சமத்தாக இருந்தால் அன்று அவன் உறங்கியப் பின் அவனருகில் அந்த நிலா வந்து அமரும் , அவனுடன் விளையாடும் , அவனின் நண்பனாக இருக்கும் என்று கதை கட்டினேன்.  ஐந்து வயது தானே! எதையும் நம்பும் வயது . நான் சொன்னதை அப்படியே நம்பி விட்டான். ஆனால் எங்கோ அவனுக்கு லாஜிக் உதைத்தது போல. உடனே,”கீதாம்மா, மூன் என்  ஃப்ரண்டுனா ஏன் காருக்குள்ள வரமாட்டேங்குது அந்த மூன்? “ என்று குழந்தைக்கே உரிய குழந்தைதனத்துடன் என்னைக் கேட்டான். நானும், “ நீ ஒரு பதினைந்து நிமிடங்கள் பேசாமல் இருந்தால் அது காருக்குள் வரும்” , என்றேன். என் மேல் வைத்திருந்த நம்பிக்கையில் அவன் அமைதியாக நிலாவை பார்த்துக் கொண்டே வந்தான்!! அப்படியே உறங்கிப்போனான்.... கட்டாயம் அவன் தூக்கத்தில் அந்த நிலா வந்து அவனுடன் பந்து விளையாடி இருக்கும்.........  காரின் சன்னல் வழியாக அந்த நிலாவைப் பார்த்துக்கொண்டே வந்த நானும் கண் அயர்ந்தேன்!!!நிலாவும் மேகக் கூட்டங்களுக்குள் அவ்வப்பொழுது ஓய்வெடுக்க சென்றாள்.  என் கனவில் இன்னும் பின் நோக்கிச் சென்றேன்!!



நான் பிறந்தது வெள்ளிக்கிழமை, முழு பெளர்ணமி அன்று என்று என் அம்மா அடிக்கடி கூறுவாள். பெண்ணாக பிறந்து விட்டேனாம். அதற்கு தங்க முலாம் பூச அவள் எடுத்துக் கொள்ளும் ஆயுதம், “ வெள்ளிக்கிழமை, பொளர்ணமி அன்று நீ பிறந்ததால் நீ தான் இந்த வீட்டு லட்சுமி “ என்பாள். அவள் என்ன தான் முலாம் பூசினாலும் என் பாட்டி தாத்தாவிற்கு தன் மகனுக்கு முதலாவதாக ஒரு முருகன் பிறக்கவில்லையே என்ற ஏக்கம் கடைசி வரை இருக்கத்தான் செய்தது!!! பெளர்ணமி அன்று பிறந்ததால் என்னவோ என்னையும் அறியாமல் அந்த நிலவின் மேல் எனக்கு அலாதி பிரியம்! படிக்கும் பொழுது எத்தனையோ இரவுகள் வீட்டிற்கு வெளியே ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்து கொண்டு நட்சத்திரங்கள் தெளித்த அந்த கருவானத்தில் ஒளிரும் அந்த வட்ட நிலவை கண்கொட்டாமல் பார்த்து லயித்ததுண்டு. தென்னை மர கீற்றுக்கிடையில் அவளை பார்த்து ரசித்ததும் உண்டு. அப்பொழுது பெரும்பாலும் வீட்டிற்குள் இருக்கும் ரேடியோவில் கண்ணதாசன், இளையராசாவின் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும்! ஆஹா எத்துனை அழகான இரவுகள் அவை!! அப்பாடல்கள் என் கனவில் ஒலித்துக்கொண்டே இருக்க, காரிலோ “அக்கா பெத்த ஜட்கா வண்டி பாடல் எஃப் எம்மில் ஒலிக்க என் தூக்கம் களைந்தது..........கனவும் களைந்தது!!


முடிந்த காலத்தில் வாழாதீர்கள், நிகழ் காலத்தில் வாழுங்கள் , அப்பொழுது தான் வாழ்க்கை சுவையாக இருக்கும் என்று  பலர் கூறக்கேட்டுள்ளேன். நினைவுகள் இல்லா வாழ்க்கை வெறும் வெற்றுத்தாள். நினைவுகளை கொண்டு வண்ணம் தீட்டினால் தான் அது சித்திரமாக தென்படும். எனக்கு வெற்றுதாளை விட சித்திரம் தீட்டப்பட்ட தாள்கள் தான் பிடித்து இருக்கிறது!


நிலாவின் முழு அழகை ரசிக்க எனக்கு பிடித்த இடம் கடற்கறை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர், ஓயாமல் பாடிக்கொண்டிருக்கும் அலையின் ஓசை , மை போன்ற வானம், அதில் அந்த அழகிய முழு நிலவு உலா வரும் அழகை வர்ணிக்கும் அளவிற்கு எனக்கு திறமை இல்லை. மெதுவாக சிறு குழந்தை போல்  அந்த தண்ணீரை அவள் தொடுவதும் , நேரம் செல்லச் செல்ல யாரும் பார்க்காத நேரத்தில் முழுவதுமாக மூழ்குவதும் , அதைப் பார்க்கையில் கரையில் அமர்ந்து பார்க்கும் என் மனது இனம் தெரியாமல் அடித்துக்கொள்ளும்!! ” தண்ணீரிலிருந்து மீண்டும் எழுந்து  வருவாளா? இல்லை அப்படியே மூழ்கி விடுவாளா என்ற பதபதைப்பு!! அவள் தண்ணீரில் மூழ்குவதால் அவளின் வெண்ணிறம் கரைந்து கடல் நுரையாய் பொங்குகிறதோ?? மணலில் அமர்ந்த படி ஒரு ஞ்யானியாய் தவமிருக்கும் அந்த நேரம் எனக்கு மட்டுமே சொந்தம்!!


அமைதியான குளக்கரையில் நான் அமர்ந்து இருக்கும் வேளை , சலனமற்ற குளத்து நீரில் அவள் முகம் பார்த்து அவளே ரசிப்பது கண்டு நான் ஆச்சரியப்பட்டு பார்த்திருக்கிறேன். எங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் சில நாள் அவள் குளிக்க வருவதும் உண்டு. !!தண்ணீர் தொட்டியில் விரல் கொண்டு விளையாடி அவளை நான் தொட முயன்றதும் உண்டு!என் இரவு நேர நடை பயிற்சிக்கு எனக்கு பல நேரம் அந்த நிலவே துணை! அவளிடம் என் எண்ணங்களை பகிர்ந்து கொண்டே நடப்பேன். நேரம் போவதே எனக்கு தெரியாது. இப்பொழுது அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கும் எனக்கு, வீட்டில் ஒரு பால்கனி இல்லையே, இருந்திருந்தால் இரவு நேரங்களில் அமைதியாக உட்கார்ந்து அவளை தனிமையில் ரசிக்கலாமே என்ற ஏக்கம் அவ்வப்பொழுது தலை தூக்கத்தான் செய்கிறது.


நண்பரை அவரின் வீட்டில் இறக்கி விட்டு விட்டு எங்கள் வீடு நோக்கி பயணித்தோம்! அவளும் எங்களுடன் உடன் வந்தாள். என் மகளிடமும், மகனிடமும்,“இன்று நிலா எவ்வளவு பெரிதாக இருக்கிறது பாருங்கள் ’”என்றேன். உடனே என் மகன்,” Mama Whats the big deal. It is one of those days when the moon is very close to the earth. Thats all." என்று அவனது அறிவியல் அறிவை பகிர்ந்து கொண்டான். அவனால் அதன் அழகியலை பார்த்து ரசிக்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு.  நான் என் கைத்தொலை பேசியை எடுத்து அந்த நிலவு பேரழகியை படம் பிடிக்க முற்பட்டேன்.. வண்டி வேகமாக போன படியால் என்னால் உடனே படம் பிடிக்க முடியவில்லை. அவளும் கட்டிடங்களுக்கிடையே மறைந்து மறைந்து போனாள். இதை பார்த்த என் மகள்,”mama, You cant do justice to its beauty by taking a picture with your phone, you have to just enjoy it with your eyes ," என்றாள்.


ஆமாம்! உண்மை தான் அவளின் அழகை, வணப்பை,சிரிப்பை, ஒளியை என் கைத்தொலைபேசிக்குள் அடக்குவது முட்டாள் தனம். மனதுக்குள் பூட்டி வைக்க வேண்டிய அழகை ஒரு சிறு கருவிக்குள் முடக்க முடியுமா???? நேரம் செல்ல செல்ல அவள் பின் நோக்கி போகத் தொடங்கினாள். அவளின் உருவம் சிறியதாகிக் கொண்டே போனது. வளர்தலும், பின் தேய்தலும், பின் மீண்டும் வளர்தலும் ஆன சுழற்சி அவளுக்கு மட்டும் சொந்தமல்ல, மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் அச்சுழற்சி சொந்தம் தான்!! அவள் மீண்டும் வருவாள் ! அப்பேரழகியின் உருவத்தை என் கண்களுக்குள் விலங்கிட்டு நான் உறங்கச் செல்கிறேன்... பயணம் தொடரும்!!!!



3 comments:

Durga Karthik. said...

Sooper.engeyo poreenga.

Durga Karthik. said...

Sooper.engeyo poreenga.

Geetha Ravichandran said...

நன்றி துர்கா!