Friday, December 29, 2017

மூணு முத்துக் கொலுசு!






மூணு முத்துக் கொலுசு!
வெள்ளிக் கொடி
அதில்,
அங்கங்கே மூனு முத்து!
ஜலக் ஜலக் சத்தம்
இதற்கு பெயர் மூணு முத்துக் கொலுசு!
இதை சொன்னவள்
நீதானடி தோழி!
உன் மூணு முத்துக் கொலுசுக்கு
மறுபிறவி வேண்டுமென
என்மேல் நீ வைத்த
நம்பிக்கைக்கு
உயிர் கொடுக்க
வரைந்தேனடி இம்மடலை!


நீ குழந்தையாய்
அடிமேல் அடிவைத்து
நடக்க பயந்த பொழுது
உன் தாய் போட்டுவிட்டா
மூணு முத்துக் கொலுசு!
அடி எடுத்து வைக்கும் போது
சத்தம் கேட்டு பயமில்லாமல்
அழகாய் அடுத்த  அடி
எடுத்து வைத்தாய்!
அதை பார்த்து ரசிச்சா
ராசாத்தி உன் தாயி!


மூன்று நான்கு வயதிருக்கும்!
விளையாடுகிறேன் என்று
எங்கு போய் ஒளிந்து கொண்டு
கண்ணனென குறும்பு செய்வாய்
என ஆறிந்து கொள்ள
உன் காலில் பூட்டிவிட்டாள்
மூணு முத்துக் கொலுசு!
ஒளிந்து மறைந்து நீ செய்த
குறும்பனைத்தும் காட்டிக் கொடுத்ததாம்
உன் மூணு முத்துக் கொலுசு!

பதின்ம வயது நீ அடைந்த போது
அழகாய் பட்டு பாவாடை சட்டைப் போட்டுவிட்டு
உன் பாதம் அணிவித்து
அழகு பார்த்தாள்
மூணு முத்துக் கொலுசு!
சலக் சலக் என நீ
ஒய்யாரமாய் நடந்த நடையை
ஊர் மக்கள் யாவருமே பார்த்து ரசிக்க
உன் தாய் மட்டும்,”மோகிணி என
டங் டங் என நடக்காதே.
பெண்ணென மெதுவாய்
பூமித்தாய்க்கு வலிக்காமல்
சத்தம் வராமல்
மெதுவாய் கால் பதித்து
அழகாய் நடந்திடடி,”
என பல் இடுக்கில் வார்த்தைகளை
விழுங்கினாளடி தோழி!
”சத்தம் வராமல் நடக்க எனக்கெதுக்கு
மூணு முத்துக் கொலுசு?”
என செல்லமாய் கடிந்து
கொண்டாயடி நீயும்!

நைலக்ஸ் தாவணி அணிந்து
அது நழுவாமல் மேல் இருக்க
இருக்கமாய் அணைத்து பிடித்த புத்தகத்தோடு
தெருவில் நீ நடக்கையிலே
உன் மூணு முத்துக் கொலுசின்
பாட்டொலிக் கேட்டு
வாசலில் வழுக்கி
விழுந்தாரடி வாலிப கிறுக்கர்கள்!

மூன்று முடுச்சு கழுத்திலே ஏறியப்பின்
புதுப்பெண் வருகிறாள்
என்பதற்கு ,அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து போட்டுவிட்ட
புது மெட்டியுடன்
மூணு முத்துக் கொலுசும்
சேர்ந்துத்தான் இசைத்ததடி தோழி!

உன்னவன் அருகினிலே
யாருக்கும் தெரியாமல்
ஆசையாய் நீ கொஞ்சும் போது
உன் மஞ்சள் பூசிய பாதத்தில்
பாம்பாய் நெளியும்
மூணு முத்துக் கொலுசு
மெதுவாய் முனகுமடி!
ஆசையாய் அணிவித்த
மூணு முத்துக் கொலுசையும்
அவிழ்த்துவை என்பான்.
மறுப்பேதும் பேசாமல்
மூணு முத்துக் கொலுசை
நீயும் தான் சத்தமில்லாமல்
சினுங்காமல் , சாதுர்யமாய்
அவிழ்த்திடுவாய்!

பிள்ளைகள் வளர்ந்தவுடன்
கொலுசு சத்தம் எனக்கெதுக்கு
என்று மூணு முத்துக் கொலுசை
முனுமுனுத்தே கழற்றி வைத்தாய்!
கழற்றிவைத்த மூணு முத்துக் கொலுசும்
பலகாலம் பெட்டகத்தில்
ஊமையாய் உறங்குதடி!

உன்னவன் ஆசைப்பட
அறுபதாம் கல்யாணத்தில்
உன் பாதம் பார்க்குமாம்
மூணு முத்துக் கொலுசு!
வெட்கத்துடன் நீ தலை குணிய,
தோல் சுருங்கிய பாதம்தான்
ஆனாலும் அழகாய்
பாடுமாம் சுப்ரபாதம்
உன் மூணு முத்துக் கொலுசு!

உன் பேத்தி வரும்வரையில்
மெளன விரதம் இருந்துடுமாம்
மூணு முத்துக் கொலுசு!
அவள் வந்தவுடன்
மீண்டும் ஆர்ப்பரிக்குமாம்
உன் மூணு முத்துக் கொலுசு!



Tuesday, December 26, 2017

டிசம்பர் பூக்கள்

Image result for december poo pictures




டிசம்பர் பூக்கள்
டிசம்பர் மாதத்தில்
பூப்பதால் டிசம்பர் பூ
என பெயர் பெற்றாயோ?
வெள்ளை, வெளிர் சிகப்பு, கத்தரிப்பூ நிறம்
ஊதா என பல வண்ணம் கொண்டாயோ?
வண்ணம் பல இருந்தாலும்
டிசம்பர் பூ என்றவுடன்
நினைவில் வந்து போவது
உன் கத்தரிப் பூ வண்ணமே!
கனம் உனக்கு இல்லைதான்
ஆனால் உன்னை சூடிய பின்
எங்கள் தலைகனம் வேறுநிலை!
யானை காதென
காதின் இருபுறமும்
அழகாய் துவள்வாய்!
உன்னை ஊதி ஊதி வெடித்தாலும்
கோபம் கொள்ள மறுப்பாய்!
வண்ண வண்ண நாதஸ்வரமாய்
அழகாய் பூத்துக் குலுங்குவாய்!
அழுத்தி பிடித்தால்
சுகமில்லை என்பதனை
கொஞ்சம் வாடியே நீ உணர்த்துவாய்!
அழகாய் தொடுத்த மாலையாய்
நீ பூக்கூடையை அழகு செய்வாய்!
மனமில்லா காரணத்தால்
தெய்வத்திருவடியை நீ இழந்தாய்!
ஆனாலும் வாஞ்சையுடன்
உனை அரவணைக்க
கிரீடமாய் உனை சூட
ஆயிரம் அழகிய
மங்கையரின் தலை காத்திருக்கும்!

Saturday, December 23, 2017

இதயத் துடிப்பு!









இதயத் துடிப்பு!
ஊருக்கு போய்விட்டு வந்து பார்க்கிறேன், என் வீட்டு சுவர் கடிகாரத்தின் இதயம் இப்பொழுதோ அப்பொழுதோ என்று துடித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளின் ஆயுளையும் தன் துடிப்பின் மூலம் குறைக்கும் அதன் இதய முள் எப்பொழுது நிற்கப்போகிறதோ என்று என் இதயத்துக்குள் ஒரு பதைபதைப்பு. அதன் துடிப்பு நின்று விட்டால் நாட்களின் ஆயுள் ஒன்றும் கூடப்போவதில்லை. அதன் இதயம் நாற்பத்தி நான்கிற்கும் நாற்பத்தி ஐந்திற்கும் நடுவில் துடித்துக்கொண்டிருக்கிறது. எமனின் பாசக்கயிற்றின் சுருக்கு இன்னும் அதன் இதயத்தை நெருக்கவில்லை போலும்!உடலின் மற்ற பாகங்கள் யாவும் ஓரிடத்தில் நின்றுவிட இதயம் மட்டும் வாழ ஆசைப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் ஆசை என் கண்களுக்கு மட்டுமே தென்படுகிறது. வீட்டில் உள்ள யாவர் கண்களிலும் அது தென்படவில்லை. அது ஏனோ என்று எனக்கு தெரியவில்லை. யாராவது ஒருவர் அதற்கு புத்துயிர் கொடுப்பார் என்று நானும் இரண்டு நாட்கள் காத்து இருந்தேன். சத்தமில்லா அதன் துடிப்பின் வலி எனக்கு மட்டுமே புரிந்த மொழிஆனது. எட்டா உயரத்தில் இருந்தாலும் என் கால் உதவி பத்தாது என்று நாற்காலியின் உதவியோடு கடிகாரத்தை உடல் நலமில்லா குழந்தையென மெதுவாக தூக்கி உடலை திருப்பி ஆள்காட்டி விரல் நீட்டமே இருந்த பாட்டரியை அதன் முதுகில் திணித்து மீண்டும் இதயம் துடிக்கச்செய்தேன். மறுகணமே எல்லா பாகங்களும் உயிர் பெற்றன. மெதுவாய் கவனத்தோடு மீண்டும் அதன் இடம் சேர்த்தேன். அஃறினையோ, உயர்தினையோ ஒன்றிற்கு உயிர் கொடுக்கும் பொழுது இருக்கும் சந்தோஷம் அளவிடமுடியா ஆனந்தம்.

மார்கழி!

No automatic alt text available.

மார்கழி!
அதிகாலை பனி பொழியும் வானம்!
எங்கோ தூரத்தில் ஒலிக்கும்
சரணம் ஐய்யப்பா பாடல்!
வாசல் தோறும் வண்ணப் பூக்கோலம்!
வெயில் வர வர ,பனி உருகி
கோலத்தின் வண்ணத்தில்
நீர் மொட்டாய் அமர்ந்திருக்கும்!
கோலம் நடுவில்,சானி உருவில்
அமர்ந்திருக்கும் பிள்ளையார்!
அவர் உடலை விட பெரிய
பூசணிப்பூ அவர் தலையில்!
மறுநாள் தண்ணீர் தெளித்து,
கூட்டி பெருக்கினாலும்
வாசல் மண்ணில் ஒட்டிக்கொள்ளும்
கோலத்தின் வண்ணம்!
இருந்தும் வாசலுக்கு
விடாமல் தினம் ஒரு வண்ணம்
பூசும் அழகிய பெண்கள்!
தெருவில் போகும் பொழுது
யார் வீட்டு வாசலில்
அழகாய் கோலம் பூத்திருக்கிறது
என்று பார்த்துக்கொண்டு போகும்
ஆயிரம் ஜோடி கண்கள்!
கூடவே பேப்பர் போடும் பையனின்
சைக்கிள் டயர் கோலம்மீது
கோடுபோடாமல் போகவேண்டும்
என்ற மனதின் பிராத்தனை!
இத்தனையும் வாசலுக்கு
வெளியே!
வீட்டின் உள்ளே,
சத்தமாய் ஒலிக்கும் அபிராமி அந்தாதி,
குளிருக்கு இதம் தரும்
ஆவி பறக்கும் காப்பியின் மனம்
வீடு முழுதும்!
திறந்து வைத்திருக்கும் சன்னல் வழியே
மெதுவாய் தலையை நீட்டும்
சூரியனின் செங்கதிர்கள்
கூடத்தின் தரையில் போடுமாம்
ஒளி வரிக்கோலம்!
சாமி அறையில் இருந்து
வரும் ஊதுபத்தியின் புகை,
கூடவே ஒலிக்கும் மணியின் ஓசை!
இரவு முழுதும் தென்றலோடு
ஆட்டம் போட்ட தென்னை கீற்று
விடிந்ததும் தன் வேர்வை துளிகளை
கொல்லை மண்ணில்
சொட்டு சொட்டாய் சிந்துமாம்!
இவை யாவும் ஒரு காலத்தில்
நிதர்சனமாய் அரங்கேறியது!
இன்றோ,
கொல்லையில் இருப்பது வெறும் மழைநீர் தொட்டி!
தொலைக்காட்சி பெட்டியில்
ஓயாமல் ஒலிக்கும் ராசிபலன்!
கொசுவிற்கு பயந்து
மூடியே இருக்கும் சன்னல்கள்!
குளிருக்கு பயந்து
ஸ்வெட்டர், குல்லா போட்ட பெண்கள்,
அவர்கள் மேல் அடிக்கும் ஓடோமஸின் மனம்!
இருட்டில் வரும் அதிகாலை
செயின் திருடனிடமிருந்து
தப்பிக்க விடிந்ததும்
கோலமிடும் கோலம்!
ஆனாலும் மார்கழி என்றால்
மனதெங்கும் பூக்கும் வண்ணக்கோலம்!

Sunday, December 3, 2017

என் குருவிக்கும் 
தண்ணீர் வேண்டுமாம்.
கூவி அழைத்து 
தண்ணீர் கேட்க
அதற்கு தெரியவில்லை!
என் மீது நம்பிக்கை
வைத்து காத்து இருந்தது!
செடிக்கு தண்ணீர்
விடும் பொழுது
தன் தவிச்ச வாய்க்கும்
ஒரு வாய் தண்ணீர்
கிடைக்கும் என்று
பொருமையாய்
பறந்து செல்லாமல்
காத்து இருந்தது!
ஒரு வாய் தண்ணீர்
என்ன, உனக்கு,
தண்ணீரால் அபிஷேகம்
செய்கிறேன் நான் இன்று!
தண்ணீர் உடம்பில்
உணர்ந்த மறுநொடியே
என்னைப் பார்த்து
சிரித்தது!
சிலிர்த்துக் கொண்டு
சிறகடித்து
பறக்க வில்லை!
மீண்டும் ஒரு குளியலுக்காக
காத்து இருந்தது!
நான் ஊற்றும் தண்ணீர்
செடியை மட்டுமில்லை
உன்னையும்
உயிர் பெறச் செய்யுமா?
நான் வெளியில்
செல்லும் போதெல்லாம்
முகம் மலர்ந்தபடி
என்னை நீ வழி அனுப்புகிறாய்.
உன்னிடம் விடைப் பெற்றப்
பின்னே நான் வெளி செல்கிறேன்.
நான் வீடு திரும்பும் போதெல்லாம்
முன் நின்று
அதே புன்னகையுடன்
என்னை வரவேற்கிறாய்!
உனக்கும் எனக்கும்
ஓர் இனம்புரியா
பிணைப்பு.
இது நான் உனக்கு
கொடுக்கும்
அந்த ஒரு சில
துளி தண்ணீரால்
ஏற்பட்ட
உறவா?

கார்த்திகை தீப திருநாளாம்!


கார்த்திகை தீப திருநாளாம் இன்று! வருடா வருடம் வரும் பண்டிகை என்றாலும் இதற்கு ஒரு தனி சிறப்பு உண்டு, அழகுண்டு, மகிமை உண்டு, ஒளி உண்டு! நினைவில் பல வண்ண நினைவலைகள்! இரண்டு நாள் முன்பே அம்மா அகல் விளக்குகளை கழுவி காய வைப்பாள். அகல் விளக்கு என்றாலே அது சிகப்பு நிற செம்மண்ணினால் வடிவமைக்கப் பட்டதாகவே இருக்கும். இன்று கிடைப்பது போன்று வண்ண வண்ண விளக்குகள் அப்பொழுது கிடையாது. அவற்றிற்கு வண்ணம் பூச வேண்டும் என்று கூட தெரியாது. அலங்கரிப்பதென்றால் அதற்கு மஞ்சள் , குங்குமம் வைப்பது தான். அந்த பொறுப்பை என்னிடம் தருவாள் அம்மா. கொஞ்சம் சினுங்கி கொண்டே செய்வேன்! வீடு வாசல் சுத்தம் செய்யப்படும்.
முதல் நாள் பரணி தீபம் என்று சில அகல் விளக்குகள் ஏற்றுவாள். மறக்காமல் அடுப்பிற்கு ஒன்று, கிணற்றிற்கு ஒன்று ஏற்றுவாள்! இன்றும் என்னிடம் ”மறக்காமல் அடுப்பிற்கு ஏற்றிவிடு ”,என்று ஞாபகப்படுத்துகிறாள். இன்றுவரை அவள் வீட்டு தண்ணீர் இல்லா முன்னூற்று ஐம்பது அடி போர் போடப்பட்ட கிணற்றிற்கு விளக்கொன்று ஏற்றி வைக்கிறாள். தண்ணீர் தரும் கிணற்றை பூஜித்து தங்கச் சுரங்கமென நினைக்கிறாள். மணல் அள்ளி ஆறுகளையும், குளங்களையும் மலடாக்கிக் கொண்டிருக்கும் நம் அறிவீனம் ஒரு நொடி மூளையை தட்டிப் பார்க்கிறது. கார்த்திகை பொரி கிளறுவாள். கார்த்திகையின் போது மட்டுமே அப்பொரி கிடைக்கும். வெல்லம் போட்டு அப்பம் செய்வாள்! அந்த அப்பம் தொப்பி போல் வடிவத்தில் இருக்க வேண்டும் என்று அவ்வளவு பிரயத்தனம் செய்வாள். அது தொப்பி மாதிரி அழகாக ஒரே மாதிரியாக வந்து விட்டாள் அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. அதனை உண்டு மகிழ்வதை விட பார்த்து மகிழ்வாள். எங்களிடம் காண்பித்து எங்களையும் மகிழச் செய்வாள். அந்த அப்பத்திற்கு கந்தர் அப்பம் என்று பெயராம். கந்தனுக்கே இவள் குல்லா போட பார்க்கிறாளோ என்று தோன்றும். தொலைக்காட்சியில் திருவண்ணாமலை தீபம் ஏற்றுவதை லைவ்வாக காண்பிப்பார்கள் . அதற்குப் பின் தான் வீட்டில் விளக்கேற்றுவாள். வீட்டில் தொலைகாட்சி பெட்டி இல்லாத போது சாயங்காலம் ஆறு மணிக்கு விளக்கேற்றுவோம். தொலைக்காட்சி பெட்டி வந்தப்பின் திருவண்ணாமலை தீபத்தை நேரில் பார்ப்பதைப் போன்ற உணர்வு !
வீடு முழுதும் தீபம் ஏற்றுவோம். பெண் பிள்ளைகள் அழகால உடை உடுத்தி விளக்கு ஏற்றும் போது ஒரு தனி அழகு தான். மதில் சுவர் எங்கும் விளக்குகள் ஏற்றிவிட்டு அது காற்றில் அனையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டின் ஓவ்வொரு அறை வாசலிலும் அகல்கள் அலங்கரிக்கும். பார்த்து பத்திரமாக நடக்க அம்மா சொல்லிக்கொண்டே இருப்பாள். அங்கங்கே எண்ணை கசிந்து வேறு இருக்கும். வழுக்கி விட்டுவிடுமோ என்ற பயம் அவளுக்கு. இப்பொழுதெல்லாம் டீ லைட் கேண்டில் தான் என் வீடு அகலில். அகலை கழுவ வேண்டும், எண்ணைய் ஊற்ற வேண்டும், பொட்டு வைக்க வேண்டும் என்ற கோட்பாடுகள் இல்லை. கால மாறுதல்களில் ஒதுவும் ஒன்று.
வீடு முழுவதும் விளக்கு ஏற்றி விட்டு, அதனை வீட்டிற்கு வெளியே நின்று பார்க்கும் பொழுது மனதிற்குள் பட்டாம்பூச்சி படபடக்கும். நம் வீட்டை மட்டும் அல்லாது தெரு முழுவதும் , ஒவ்வொரு வீட்டிலும் எரியும் விளக்குகள் கண்கொள்ளா காட்சி. பொதுவாக கார்த்திகை அன்று மழை தூரல் இருக்கும் , சிலு சிலு என்று காற்றும் வீசும். அந்த தூரலில் நின்று கொண்டு விளக்கு ஏற்றி மகிழ்வது ஒரு சுகம் தான். மழை தூறுமோ, விளக்கு அனைந்து விடுமோ என்ற கவலை எனக்கு இப்பொழுது இல்லை. நான் இருக்கும் எட்டாவது மாடி அடுக்கு வீட்டின் வாசலுக்கு மழை சாரல் கூட அண்டாது. நானே விளக்கேற்றி, நானே ரசித்துக் கொள்வேன். என் அம்மா அப்பத்தின் அழகை எங்களுக்கு காட்டி மகிழ்ந்தது மாதிரி இப்பொழுது நான் என் குடும்பத்திடம் நான் வரையும் கோலம், ஏற்றும் தீபம் என்று ஒவ்வொன்றாக காண்பித்து மகிழ்கிறேன். நல்ல வேளையாக வாட்ஸ் ஆப் வந்தது. கடல் கடந்து இருக்கும் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் படம் எடுத்து அனுப்பி மகிழ்கிறேன். இதில் ஒரு அற்ப சந்தோஷம்.
என்ன தான் நான் அப்பம், பொரி செய்தாலும் அம்மாவின் அப்பத்திற்கும் பொரிக்கும் ஈடாகாது. அந்த பொரியில் நிறைய தேங்காயை கீறி நெய்யில் வறுத்து போட்டிருப்பாள். நினைத்தாலே தானாகவே எட்சில் ஊறும். சில நேரம் அம்மா எனக்காக கார்த்திகை பொரியை எடுத்து வைப்பாள். விடுமுறைக்கு கார்த்திகையை ஒட்டி ஊருக்குச் சென்றாள் அந்த குடுப்பினை உண்டு.தீபாவளிக்கு வாங்கிய வெடி, கம்பி மத்தாப்பு சிலவற்றை கார்த்திகை தீபத்தன்று வெடிக்க பத்திரப்படுத்தி வைப்பதுண்டு. கார்த்திகைக்கு மறுநாளும் சில அகல்களை ஏற்றுவோம். அதற்குப் பின் அந்த அகல்களை மீண்டும் கழுவி, இரண்டு மூன்று நாட்கள் காயவைத்து ஒரு சிகப்பு ப்ளாஸ்டிக் டப்பாகுள் வைத்து அடுக்கி மூடி லாப்டில் வைத்து விடுவாள். அந்த சிகப்பு டப்பா அடுத்த வருட கார்த்திகை வரும் பொழுது தான் வெளிச்சம் பார்க்கும். எனக்கு அந்த வேலை இல்லை. டீ லைட் கேண்டில் எரிந்து முடிந்த பின் எடுத்து குப்பையில் வீசி விடுகிறேன். அம்மா இன்று வரை ரீ சைக்கிள் செய்கிறாள். அதன் பொருள் தெரியாமலேயே. நானோ சுற்றுப் புறச்சூழல் பற்றி வாய் கிழிய பேசினாலும் பூமியில் மேலும் குப்பையை சேர்க்கிறேன். சோம்பேறித்தனம் என்று சொல்வதை விட வேறு இதற்கு பெயர் என்ன?
வயதானாலும் அம்மா அப்பமும், பொரியும் செய்து தன் இஷ்ட தெய்வத்திற்கு வைத்து கும்பிடுகிறாள். விளக்குகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதே தவிர அவற்றை ஏற்ற அவள் சோம்பேறித்தனம் அடைவதில்லை!. என்னால் முடிந்தவரை நானும் அம்மாவைப் போல் செய்கிறேன். என் அம்மா அகல் விளக்கு ஏற்றினாள், நான் டீ லைட் கேண்டில் ஏற்றுகுறேன்.என் மகள் சர விளக்கு, ஸ்ட்ரிங் லைட் ஏற்றி கொண்டாடுவாள். மொத்தத்தில் கார்த்திகை அன்று ஒளி பிறந்தாள் சரி!

Sunday, November 26, 2017

இஞ்சி , இஞ்சி, இஞ்சீஈஈஈஈ மரப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆ...........

இஞ்சி என்றாலே இஞ்சி இடுப்பழகி பாட்டு  ஞாபகத்திற்கு வராதவர்கள் இருக்க முடியாது. தினமும் இஞ்சியை உணவில் சேர்த்தால் இரத்தம் தூய்மை அடையும், தினம் இஞ்சி சாறு பருகினால் வாயுத்தொல்லை நீங்கும், கொழுப்பு கரையும் அது இது என்று எண்ணற்ற பயன்கள் இஞ்சிக்கு உண்டு . இதன் சாற்றை  எப்படி பருகினால் , எதனுடன் பருகினால், எப்பொழுது பருகினால் நன்மை என்ற பல வழிமுறைகளும்  உண்டு. நமக்கும் அதோ இதோ என்று பாதி கிணற்றை கடக்கும் வயது வந்தாகி விட்டது. கூடவே வயதிற்கான அத்தொல்லை, இத்தொல்லை என்று எல்லாம் எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிட்டது.   நாமும் இஞ்சி சாறு பருகி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்று அதனை பல வழிகளில் உணவில் சேர்த்துக் கொள்வது வழக்கமாகிப் போனது.

காய்கறி வாங்கும் பொழுது இஞ்சி வாங்க மறப்பதே இல்லை. நான் சிறுமியாக இருந்த பொழுது காய்கறி வாங்கச்சென்றால் தவறாமல் ஐம்பது காசுக்கு இஞ்சி, கொத்தமல்லி இலை வாங்கச் சொல்வாள் என் அம்மா. அந்த இஞ்சியும், கொத்தமல்லி தழையும் மண்ணில் தோய்ந்து இருக்கும். ஆனால் இன்று சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் இஞ்சி சர்ப்ஃபில்  ஊறவைத்து கழுவியது போல் வழ வழ என்று சுத்தமாக கிடைக்கிறது. அது மண்ணின் அடியில் விளைந்ததற்கான அறிகுறியே இருப்பதில்லை.  சுத்தமான காய்கறிகளை வாங்கி பழக்கப்பட்டு போனதால் இப்பொழுதெல்லாம் மண் இருக்கும் காய்கறிகளைக் கண்டால் கொஞ்சம் அருவருப்பாக இருக்கிறது. இப்படி சுத்த சிகாமணியாகி போனது தான் வீட்டில் நடக்கும் பல பிரச்சணைகளுக்கு காரணம்.

காய்கறிகளை  எடுத்துக்கொண்டு பில் போடுவதற்காக க்யூவில் நின்று கொண்டு இருந்தேன். அப்பொழுது அங்கே ப்ளாஸ்டிக் பேப்பர் சுற்றிய இஞ்சிமரப்பா மிட்டாயை பார்த்துவிட்டார் கணவர். உடனே இஞ்சிமரப்பா ஒரு நாலைந்து, எள்ளு மிட்டாய் நாலைந்து எடுத்து பில் போட்டார்.எள்ளு மிட்டாய் வாங்குவதில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. அது எப்படி இருக்குமோ என்ற தயக்கம். இஞ்சி மரப்பா பார்க்க அழகாக பொன் நிறத்தில் இருந்தது. எள்ளு மிட்டாயோ கருநிறத்தில் பார்க்க அவ்வளவு கவர்ச்சியாக இருக்கவில்லை. என்னதான் நிறபேதம் பார்ப்பதில்லை என்று நினைத்தாலும் மிட்டாய் வாங்கும் பொழுது கூட நம் ஆழ் மனதில் இருக்கும் அந்த பேதமை உணர்வு தலை எடுத்துவிடுவதைக் கண்டு எனக்கு வெட்கமாக இருந்தது. வெள்ளை சீனியின் விலை ஏற்றத்திற்கும், வெல்லத்திற்கான விலை இறக்கத்திற்கும் இந்த நிற வேற்றுமை ஒரு காரணமாக இருக்குமோ??

 இஞ்சி மரப்பாவை  பார்த்தவுடன் பல எண்ணங்கள் மனதில் தோன்றி மறைந்தன. அப்பொழுதெல்லாம் பேருந்து நிலையத்தில் தவறாமல் இஞ்சிமரப்பா விற்கப்படும். நாம் பேருந்தில் அமர்ந்திருக்கும் பொழுது பேருந்துக்குள்ளோ அல்லது வெளியிலோ அழுக்கு உடை அணிந்த ஒரு  சிறுவனோ அல்லது பெரியவரோ ஒரு தட்டில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இஞ்சிமரப்பாவை, இஞ்சி , இஞ்சி, இஞ்சீஈஈஈ மரப்பாஆஆஆஆ என்று கத்திக் கொண்டே விற்பார்கள். கூடவே அதனை உண்பதனால் ஏற்படும் பலன்களையும் கூறி விற்பார்கள். ”அஜீரனமா, புளித்த ஏப்பமா, இத வாங்கி சாப்பிடுங்க நொடியில சரியாயிடும்”, என்று தங்களின் மார்க்கெட்டிங் டெக்னிக்கை கையாள்வார்கள். அவர்கள் அந்த இஞ்சிமரப்பாவை விற்பதில் ஒரு கலைநயம் இருக்கும்.

இஞ்சி மரப்பா விற்பவரே பெரும்பாலும் கமார்கெட் மிட்டாயும் விற்பார். பொதுவாக சிறுவர்கள் கமார்கெட்டும், பெரியவர்கள் இஞ்சி மரப்பாவும் வாங்கிக் கொள்வார்கள். இஞ்சி மரப்பா விற்கப்படாத பேருந்து நிலையமே இருந்ததாக எனக்கு நினைவில்லை. பெட்டிக்கடைகளில் கூட இஞ்சி மரப்பா விற்கப்படும். அது கண்ணாடி பாட்டிலில் , தேன்கூட்டின் உள் அறைகளைப்போல் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஐந்து பைசா அல்லது பத்து பைசா என்பது தான் அதன் விலை. இப்பொழுது அழகாக ப்ளாஸ்டிக் பேப்பரில் சுற்றி விற்பது போல விற்கப்படவில்லை. ஆனாலும் அதனை விற்பவரின் கை சுத்தமாக இருக்கிறதா, இல்லை அவர் மூடி விற்கிறாரா என்றெல்லாம் பார்ப்பது கிடையாது. அதில் பேருந்தின் புகை படிந்து இருக்கிறதா, புழுதி படிந்து இருக்கிறதா என்று அலைசி அராயப்படவில்லை. இஞ்சி மரப்பாவின் ருசி மட்டுமே  கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் காரம் கருதி நான் அதனை சீண்டிப்பார்த்ததே இல்லை. எங்கள் பாட்டி எப்பொழுது வந்தாலும் வாங்கி வருவார்கள். அவர்கள் வைத்திருப்பதில் ஒரு சிறு துண்டு வாங்கி நக்கி பார்ப்பதுண்டு எப்பொழுதாவது. அதன் ருசி எனக்கு பரிட்ச்சயமான ஒன்று தான்.

ஒரு முழு இஞ்சி மரப்பாவை அப்படியே வாயில் போட்டு சப்பி சாப்பிட ஒரு தைரியம் வேண்டும். அவ்வளவு காரம் இருக்கும் அதன் சுவையில். மதிய சாப்பாட்டிற்குப் பின் ஏதாவது ஒரு இனிப்பை சாப்பிடுவது பழக்கமாகிவிட்டது. சாக்லெட் சாப்பிட்ட வயது கடந்து இப்பொழுது கடலை மிட்டாயை சாப்பிட ஆரம்பித்தாகிவிட்டது. இப்பொழுது புதிதாக இஞ்சி மரப்பா ஒரு சிறு துண்டை எடுத்து வாயில் போட்டு சுவைக்கிறேன். வயதாக வயதாக நாக்கின் சுவைக்கேற்ப சாப்பிடுவது போய் வயிற்றின் தேவை மற்றும் பலம் அறிந்து சாப்பிடுவது என்றாகிவிட்டது. வயிற்றுக்கு ஒவ்வாத உணவுகளை நா இயல்பாகவே சுவைக்க மறுக்கிறது. மூளையும்”இதனை சுவைத்துப்பார்” என்ற எவ்வித சமிக்கையும் நாவிற்கு  அனுப்புவது இல்லை. இது காலத்தின்  கட்டாயம் போலும். சில நேரம் டீ போடும் போது இஞ்சிமரப்பாவை சிறிது பொடி செய்து அதனுடன் சேர்த்து பருகினால் சுவை கூடுதலாக தெரிகிறது.

இஞ்சியை தோல் சீவிதான் பயன் படுத்த வேண்டுமாம். இல்லையெனில் அது விஷமாகிவிடுமாம். ஆனால் இஞ்சியின் தோலை சீவுவதற்கு ஒரு தனி திறமை வேண்டும். அதன் ஏற்ற இறக்க நெளிவு சுழிவுளுக்குள் கத்தியை லாவகமாக வைத்து தோலை சீவவேண்டும். அப்படி சீவும் பொழுது தோலை மட்டுமே சீவவேண்டும். இஞ்சியின் சதைப்பகுதியைச் சேர்த்து சீவாமல் இருக்க வேண்டும். இஞ்சிக்கு நிறைய நெளிவு சுழிவுகள் இருப்பதால் தான் அதனை உணவில் நாம் நிறைய சேர்த்துக்கொண்டால் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து நாமும் நெளிவு சுழிவுகளுடன் அழகிய தோற்றம் பெறமுடியும் போல.

இப்பொழுதெல்லாம் எதை வேண்டுமானாலும் தண்ணீரில் காய்ச்சி அதற்கு டீ என்று பேர் வைத்து பருகலாம். இந்தோனேசியாவில் ஒரு முறை இஞ்சி டீ என்று ஒரு மசாஜ் பார்லரில் புத்துணர்ச்சி பெற கொடுத்தார்கள். அது அவ்வளவு சுவையாக இருந்தது. வீட்டிற்கு வந்து நானும் அதனை செய்து பார்க்க முயற்சித்தேன். அங்கு கொடுத்த டீயின் அதே சுவை வரவில்லையென்றாலும் கிட்டத்தட்ட அதன் சுவை கிடைத்தது. இப்படியாகத்தான் இஞ்சி டீக்கு அடிமையாகி போனேன்.


வீட்டில் இருந்த இஞ்சிமரப்பாவை ஒரு சிறு துண்டு நறுக்கி என் மகனுக்கு சுவைக்க கொடுத்து பார்த்தேன். வாயில் வைத்த மறுகணமே ”தூ” என்று துப்பிவிட்டான். நல்ல வேளை நான் அவன் முகத்திற்கு நேராக நிற்கவில்லை.  ஒரு இருபது ஆண்டுகள் கழித்து அவனும் இஞ்சி டீ குடிப்பான். அப்பொழுது அவனுக்கும் அது எங்கேயோ பழக்கப்பட்ட சுவையாக தோன்றும் என நம்புகிறேன். இஞ்சி மரப்பாவை அக்காலகட்டத்தில் யாரும் செய்து விற்பார்களா என்பது கேள்விக்குறியே. மடிந்து கொண்டிருக்கும் பல உணவுகள் கொண்ட பட்டியலில்  இஞ்சி மரப்பாவும் அடங்கிவிடும். அதுவரையில் பிழைத்துக் கிடந்தால் நான் இஞ்சி மரப்பாவுடன் கூடிய நினைவுகளை அசைப்போட்டுக்கொண்டு  அது கிடைக்கும் காலம் வரை சுவைத்துக்கொண்டே இருப்பேன். பல நேரங்களில் உணவு கொடுக்கும் சுவையை விட அதனோடு தொடர்புடைய மனிதர்கள், நடந்த சம்பவங்கள், அதனை உண்ட இடங்கள், கொடுக்கும் நினைவுகளின் சுவையே ருசியானதாகிறது. என்னைப் பொறுத்தமட்டில் இஞ்சி மரப்பாவின் சுவையும் அத்தகைய ஒன்றே!

Wednesday, November 22, 2017

கருங் காடு.....




இவை என்ன
வெட்கம் உதிர்த்த
மரங்களா?
வானில் வேயப்பட்ட
கருஞ்சிலந்தி
வலையா?
விண்மீன்களை
பிடிக்க
விரிக்கப்பட்ட
மீன் வலையா?
அப்பால் உதிக்கும்
செங்கதிர்கள்
எமை அண்டாமல்
காக்கும்
உயர்ந்து வளர்ந்த
குச்சி வேலியா?
தேவர்கள்
சொர்க்கத்தில்
வர்ணம் பூசியப்பின்
தூக்கி எறிந்த
தூரிகைகளா?
சொத்து சுகம்
இழந்த பின்னும்
ஒருவொருக்கொருவர்
துணையாய் என்றும்
வாழ்வோம் என்னும்
கூட்டு குடும்பமா?
எத்துனை முறை
மடிந்தாலும்
மீண்டும்
உயிர்தெழுவோம் என்ற
நம்பிக்கையின்
வெளிப்பாடா?
தாய்மண் பிடிப்பு
இருக்கும் வரை
தலை நிமிர்ந்து
நிற்போம் என்ற
ஆணவச்செறுக்கா?
இல்லை , இயற்கையின்
துகில் உரிப்பு
ஒத்திகையா?
உயிர்தலும்
உதிர்தலுமே
வாழ்க்கையின் நியதி!
இதுவே இக்காட்டின்
மெளன சாட்சி!

Tuesday, November 21, 2017

காலை வேளை!

காலை வேளை!
வான் திரையில் இருந்து 
சிறு சிறு தூரல்கள்!
மடை திறந்த அணைபோல்
கொட்டித்தீர்க்க காத்திருக்கும்
திரண்டு நிற்கும் கருமேகம்!
விடிந்து விட்டதா இல்லையா
என்ற குழப்பத்தில்
விட்டு விட்டு
கவிபாடும் குருவிகளின்
குரலோசை!
சன்னல் திரைச்சீலையை
ஆடவிட்டு அழகு பார்க்கும்
சிலு சிலு காற்று!
தூரலில் நனைந்த
கருநிற உடை அணிந்த
சாலையில்,மெதுவாய்
ஊரும் சிறு, பெரு வாகனங்கள்!
அவை எழுப்பும் ஒலி!
இல்லவாசிகள் யாவரும்
கூட்டை விட்டு போனப்பின்
வீட்டில் நிலவும் அமைதி!
இஞ்சியும் ஏலமும்
மனம் கமகமக்கும்
டீ என் கையில் உள்ள
அழகிய சிகப்பு நிற கோப்பையில்!
மெல்லிய ஒலியில்
மனதைக் கவரும்
இளையராஜாவின் என்பதுகளில்
வந்த பாடல்கள்!
டீயை நா ருசிக்க,
இசையை காது ருசிக்க,
மழை சாரலை தேகம் ருசிக்க,
தரையில் நீர் கோலமிடும்
தூரலை கண்கள் ருசிக்க,
சன்னல் அருகே
தனிமையில் இனிமை
தேடும் நான்........

Wednesday, November 8, 2017

சாக்லெட் ருசி

சாயங்காலம் ஆறு மணி இருக்கும். நானும் என் தோழியும் நடைப்பயிற்சி முடிந்து வீடு நோக்கி  எங்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு மிக அருகில் வந்துகொண்டிருந்தோம். அப்பொழுது எதிரில் ஒரு சீனத் தாய் தன் இரண்டு குழந்தைகளை கூட்டிக்கொண்டு எதிரில் நடந்து வந்து கொண்டிருந்தார். அதில் ஒன்று ஆண், ஒன்று பெண் குழந்தை. ஆண் குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும். தனியாக விட்டால் ஓடிவிடும் என்பதனால்  அக்குழந்தையை தன் ஒரு கையில்  பிடித்துக்கொண்டும், மறு கையில் சில பைகளை பிடித்துக் கொண்டும் வந்து கொண்டிருந்தார். 

அவருக்கு பின்னால் சில அடிகள் தூரத்தில் அப்பெண் குழந்தை நடந்து வந்துகொண்டிருந்தது. அதற்கு ஒரு மூன்று வயது இருக்கும். இரண்டு  குழந்தைகளுக்குமான இடைவெளி மிக குறைவாகவே எனக்குப்பட்டது. அப்பெண் குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வருவது போல் இருந்தது. பள்ளிச் சீருடையில் இருந்தது. அழகாக இரண்டு சிண்டு போட்டு இருந்தது. நெற்றியில் சில முடிகீற்றுக்கள் விழுந்து கண்களை அவ்வப்பொழுது மறைத்தது.  முதுகில் புத்தகப்பை மாட்டப்பட்டிருந்தது.நம் ஊர் போன்று சுமையானது கிடையாது அப்பை. அக்குழந்தை தூக்கக்கூடிய சுமையே. எங்களை கடந்து சென்ற போது  அக்குழந்தையை நான் மிக அருகில் பார்த்தேன். அதன் கையில் சாக்லெட் இருந்தது. அதை அது சாப்பிட்டுக்கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தது. வாய் முழுதும் சாக்லெட் அப்பி இருந்தது. நாக்கும் , பற்களும் காப்பிக் கொட்டை நிறத்தில் இருந்தத்டு. வாயின் இரு ஓரங்களிலும் சாக்லெட் பூசப்பட்டு இருந்தது. இரு கைகளாலும் சாக்லெட்டை கீழே விழாதவாறு பிடித்துக்கொண்டு ரசித்து ,நக்கிக் கொண்டே வந்தது. அவ்வப்பொழுது அதன் புத்தகப் பையின் வார், அக்குழந்தையின் தோள் நழுவி கீழே வரும். அதனை தன் சாக்லெட் பிடித்த கைகளைக் கொண்டு மேல் எடுத்து விடமுடியாததால் தன் தோள்பட்டையை மேல் தூக்கி பை கீழே விழாதவாறு கவனமாக நடந்து கொண்டிருந்தது. நெற்றியில் விழுந்த முடிகீற்றையும் தன் முழங்கை கொண்டே பின் தள்ளியது.

முன் நடந்து கொண்டிருந்த அம்மா, பின் நடப்பவைப் பற்றி கொஞ்சம் கூட ஏதும் அறிந்தமாதிரி தெரியவில்லை. அவர் மகனை பிடித்துக்கொண்டு , எப்படியும் மகள் தன் பின்னே நடந்து வந்து கொண்டிருப்பாள் என்ற நம்பிக்கையில் போய் கொண்டிருந்தார். அக்குழந்தைக்கோ சாலையில் போகும் யாரும் தன்னை பார்ப்பார்களே என்ற கூச்சமோ, நாச்சமோ இருக்கவில்லை. சாலையில் ஏதாவது கிடக்கிறதா, தன் எதிரில் யாரும் வருகிறார்களா, தன் பின்னே சைக்கிள் மணி ஓசை ஒலிக்கிறதா என்ற எந்த கவனமும் இருக்கவில்லை. அது தான்  குழந்தை மனம் போலும்.  கருமமே கண்ணாயிரமாக அழகாக சாக்லெட்டை சாப்பிட்டபடி லாடம் போட்ட குதிரை போன்று தன் அம்மாவின் பின்னால் நடந்து கொண்டிருந்தது.. அக்காட்சி பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது.

இதை பார்த்து மகிழ்ந்த சில நொடிகளில் நான் என் தோழியிடம் ,”இதுவே நம் பிள்ளைகள் என்றால் இப்படி சந்தோஷமாக பார்த்து ரசிப்போமா? உடனே,” எப்படி பூசி வச்சு இருக்க பாரு, சாக்லெட் சாப்பிடாதனா கேக்கறியா, வீட்டுக்குப் போனப்புறம் சாப்டா என்ன? இப்போ உன் கையை , வாயை எப்படி கழுவி விடுவேன்? ரோட்ல போறவங்க எல்லாம் உன்னை வேடிக்கை பாக்கறாங்க பார்? “ என்றெல்லாம் ஒரு பிரசங்கமே நடத்தி இருக்க மாட்டோமா?,” என்றேன். அவரும் ,”அமாம் , அமாம் நீங்க சொல்றது சரிதான்,”என்று என் சொற்களை ஆமோதித்தார்.

சில தினங்களுக்கு முன் தான் ஹாலோவீன் திருவிழா முடிந்திருந்தது. நல்ல வேளை என் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டார்கள். இல்லையென்றால் ட்ரிக் ஆர் ட்ரீட் என்ற பேரில் ஒரு பை நிறைய சாக்லெட் வீடு வந்து சேரும். அதில் வேறு பங்கு பிரியல் , ட்ரேடிங் நடக்கும். ஒரு வாரத்திற்கு சாயங்காலம் சிற்றுண்டி அந்த சாக்லெட் தான். சண்டை வேறு நடக்கும். எனக்கு பிடித்த சாக்லெட்டை யார் எடுத்தது என்று ரகளையே நடக்கும். வீடு முழுதும் சாக்லெட் காகிதம் எந்நேரமும் கண்ணில் படும். இப்பொழுது அக்காட்சிகள் எல்லாம் நம் வீட்டில் இல்லை என்று சந்தோஷப்படுவதா அல்லது பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள் என்று நினைப்பதா ?


 ஒன்று மட்டும் இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. எப்பொழுதாவது பத்தாவது படிக்கும் என்  மகனின் முதலை வாய் போன்று திறந்தே இருக்கும் புத்தகப் பையின் உள்ளே கைவிட்டு பார்க்க நேர்ந்தால் அதில் சாக்லெட் காகிதம், பிஸ்கெட் காகிதம் என்று இருக்கத்தான் செய்கிறது. அம்மாவிற்கு தெரியாமல் ஒளித்து வைக்கும் இடம் அதுதான். ஆனால் அது சரியாக என் கண்களில் தான் அகப்படும். சில நேரம் துவைத்து வரும் பள்ளி சீருடையின் பாக்கெட்டில் இருக்கும். ஊரார் பிள்ளை வாய் முழுதும் பூசிக்கொண்டு சாக்லெட் சாப்பிடுவதை ரசிக்கும் நான் என் வீட்டில் மட்டும் வேறு விதமாக நடந்து கொள்வது எதனால்? சாக்லெட் சாப்பிட்டால் பூச்சிப்பல் வரும், சாப்பிட்டப்பின் வாய் கொப்பளித்தாயா? சாக்லெட் சாப்பிட்டால் முகத்தில் பரு வரும் என்று ஒவ்வொரு வயதிற்கும் சாக்லெட் ஏன் சாப்பிடக்கூடாது என்று ஒரு  காரணத்தை கண்டு பிடித்து வைத்திருக்கிறேன்.

ஒரு முறை என் தந்தை எங்களை கடலூரில் இருக்கும் இ.ஐ.டி பாரி சாக்லெட் நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே அவரின் நண்பர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். நிறுவனத்தை சுற்றிப் பார்த்த பொழுது அவர்கள் என்னிடமும் என் தங்கையிடமும்,” ஃபாக்டரிக்குள் நீங்கள் எவ்வளவு சாக்லெட் வேண்டுமானாலும் சாப்பிடலாம் ஆனால் வெளியில் எடுத்துச்செல்லக் கூடாது,” என்றார்கள். ஆசை யாரை விட்டது. காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் நுழைந்தது போல் முடிந்தமட்டும் வாய் நிறைய சாக்லெட்டை வைத்து அடைத்துக் கொண்டோம். ஆனாலும் ஆசை விடவில்லை. சில எக்லெர்ஸ் சாக்லெட்டை (பேப்பர் கிடையாது) எடுத்து சட்டைக்குள் போட்டுக் கொண்டேன். ஃபாக்டரி முழுதும் சுற்றிப்பார்த்துவிட்டு வீட்டிற்கு போகும் நேரம் வந்ததும் சட்டைக்குள் இருந்த சாக்லெட் பிசு பிசுக்க ஆரம்பித்தது. அதுவரை ஃபாக்டெரி முழுதும் அதிகமான ஏசி ஆதலால் சாக்லெட் உருக வில்லை. வெளியில் வந்தது தான் . எல்லாம் உருக ஆரம்பித்து சட்டையில் அங்கும் இங்குமாக ஒட்டிக் கொண்டு என்னை காட்டிக் கொடுக்க சாட்சியாய் நின்றது. இதை பார்த்த எங்கள் டிரைவர்,” பாப்பா, இப்போ பாரு உன்ன உள்ள புடுச்சு வச்சுக்க போறாங்க,”என்று வேறு பயமுறுத்தினார். எங்கே அங்கு இன்னும் சிறுது நேரம் நின்றால் , விடை பெற்றுக்கொள்ள காத்துக்கொண்டிருக்கும் என் தந்தையின் நண்பரிடம் மாட்டிக்கொண்டு விடுவோமோ என்று பயம். திருடனுக்கு  தேள் கொட்டியது போல்,”அம்மா வா சீக்கிரமா காருக்கு போகலாம், எனக்கும் கால் வலிக்குது,” என்று ஏதோ சாக்கு போக்கு கூறி காரில் சென்று அமர்ந்து கொண்டேன்.  வீட்டிற்கு சென்ற உடன் உடையை மாற்ற கழற்றினால் உடல் முழுதும் ஒரே பிசு பிசுப்பு.  சாக்லெட் உருகி உடல் முழுதும் பூசி இருந்தது. மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல், மெதுவாக குளியல் அறை சென்று குளித்து விட்டு உடை மாற்றிக் கொண்டேன். சாக்லெட் எல்லாம் வீனாகி போனதே என்ற சோகம் வேறு. மறுநாள் அம்மா துணி துவைக்க துணியை எடுத்த பொழுதுதான் அதில் உலா வந்த  எரும்புகள் மூலம் என் குட்டு உடைந்தது.

நான் சிறுமியாக இருந்த பொழுது என் தாய் கடைக்கு போய்விட்டு வரும் பொழுதெல்லாம் தங்க நிற காகிதம் சுற்றிய வட்டமான அந்த தங்க காசு போன்ற சாக்லெட் வாங்கி வருவார். அதனை பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக கடித்து, ருசித்து, நாக்கிற்கும் மேல்வாய்க்கும் நடுவில் வைத்து சிறிது நேரம் அநுபவித்து சாப்பிடும் பொழுது ஏதோ காணக்கிடைக்காதது கிடைத்தது போன்ற மகிழ்ச்சி ஏற்படும். அதுமட்டுமல்ல அதை நிஜ தங்க காசை மென்று சாப்பிடுவது போன்று நிதானமாக ரசித்து விழுங்கியதுண்டு. எனக்கு இரண்டரை வயது ஆகும் வரை சாக்லெட் என்றால் என்ன என்றே தெரியாதாம். அதன் பிறகு வீட்டிற்கு வந்த யாரோ வாங்கி வந்து ருசி காட்டி விட்டார்களாம். அதன் பின் நான் ருசி கண்ட பூனை ஆகிவிட்டேனாம்.

இப்பொழுதெல்லாம் அந்த ருசியின் பால் இருந்த மோகம் என்னவாயிற்று என்று தெரியவில்லை. எப்பொழுதாவது தான் சாக்லெட் சாப்பிடும் ஆசை வருகிறது. அதுவும் உடம்பிற்கு நல்லது நல்லது என்று எல்லோரும் கூவக்கேட்ட டார்க் சாக்லெட்டை ஏதோ வேண்டா வெறுப்பாக சாப்பிடுவேன். பல ஆண்டுகளாக ரசித்து ருசித்த பல உணவுகளின் மேல் இருந்த ஆர்வம் குறைய குறையத்தான் ஆஹா நமக்கு வயதாகிறது என்ற நிதர்சனத்தை உணரமுடிகிறது.   சிறு வயதில் பிடித்த பல உணவுகள் இப்பொழுது பிடிப்பதில்லை. இப்பொழுதெல்லாம் வயிற்றிற்கு எது உகந்ததோ அது தான் நாக்கிற்கு ருசி சேர்க்கிறது. இதனை உணரும் பொழுது குழந்தைகள் அவர்களுக்கு பிடித்த சில உணவுகளை குழந்தையாக இருக்கும் பொழுது உண்டு மகிழட்டும் . எப்படியும் ஒரு வயதிற்கு அப்புறம் இதை சாப்பிடக்கூடாது, அதை சாப்பிடக்கூடாது என்று ஆகிவிடும் என்று தோன்றுகிறது. ஒன்று நிச்சயம், அமிர்தமே ஆனாலும் அளவிற்கு மீறினால் நஞ்சாகிவிடும்.

Saturday, October 28, 2017

Mom and Rishi

Mom was all excited about her betterhalf's birthday . She expected the same excitement in her son too. The reason being if it was his birthday Rishi would start the announcement three months ahead and list his wishlist items. Sometimes the next year birthday of his would be announced rather reminded on the the current year's birthday itself. Gen x ! Think ahead!!
Mom: Rishi , do you remember that tomorrow is Papa's birthday?
Rishi: Mamaaaa,(with a long stretch on aaaaa) how can I forget his birthday mama?
Mom was very happy that he remembered his dad's birthday without her reminding. She could have stopped with this happiness but the woman inquisitiveness in her made her throw the next question.
Mom: Rishi , how come you remembered Papa's birthday without me reminding?
Rishi: I remembered it mama, because it is my friend Aman's birthday today and obviously Papa's birthday would be the next day.
Mom : So as long as you remember Aman's birthday you would remember Papa's birthday.........
Rishi with a sly smile on his face : Maybeeee..... But anyways you will remind me right?
Mom didn't want to post anymore questions and get intimidated and get proved that she is the emotional idiot queen of the house.
Day of the birthday: Morning 7.45am. Rishi was getting ready for school.
Mom: Rishi, did you wish papa happy birthday?
Rishi: Oh no I forgot . Let me do it!
He went inside the room to wake up the birthday baby and wished his dad. Dad in his sleep reciprocated with the thank you not knowing that the prompt was there in the kitchen .
Mom had already sent a message to her daughter to remind about the birthday.The reply was "LOL! I do remember" . Mom didn't know whether to feel happy about her daughter's memory or not. She did'nt want to ask the daughter also the same question ,"How come you remember?" . ..... Once a day only she can voluntarily get her nose cut........
.

Thursday, October 26, 2017

மனிதம் மடியாது......

அதிகாலை நான்கு மணி இருக்கும். வானம் ஒரே கும்மிருட்டு. முந்தின நாள் இரவு மழை பெய்து இருந்ததால் வானம் கருநிறமாகவே இருந்தது. சூரியன் எழ மனமில்லாமல் சற்றே இளைப்பாறிக்கொண்டிருந்தான். அந்த கிராமத்தில் ஒரே நிசப்தம். ஊரே உறங்கிக்கொண்டிருந்தது. தன் கடமையை ஆற்ற பால்காரர் மட்டும் ஒரு கடா கடா மிதிவண்டியில் மணியை அடித்தபடி போய்கொண்டிருந்தார். அவரின் மணிஓசையை கேட்டு பால் கறக்க மாடுகளை பால் பண்ணைக்கு ஓட்டிச்செல்ல பல வீட்டு பெண்மணிகள் எழுந்தார்கள். கால தாமதம் ஆகிவிட்டால் பின் கறந்த பால் வீனாகிவிடும். அவர் கிடைத்த பாலை வாங்கிக் கொண்டு நேரத்திற்கு கிளம்பிவிடுவார்.  ஓட்டல் ஏதும் அக் கிராமத்தில் இல்லாததால் பாலை எங்கும் விற்கக்கூட முடியாது. வீட்டில் உள்ளவர்கள் குடித்தது போக பாக்கியை உறை ஊற்றித்தான்  வைக்கவேண்டும். முடிந்தமட்டும் வீட்டுப் பெண்மணிகள் பால்காரரின் சைக்கிள் மணிச்சத்தம் கேட்ட உடன் எழுந்துவிடுவார்கள். அக்கம்பக்கத்தில் யாராவது எழ தாமதமானால் மாட்டை ஓட்டிக்கொண்டு போகும் போதே, “அக்கா பால் காரர் வந்துட்டாரு”, என்று குரல் கொடுப்பார்கள்.

அன்றும் அப்படி பால் காரர் சைக்கிள் மணிச்சத்தம் கேட்டவுடன் திறக்காத விழிகளை தேய்த்துக்கொண்டு வள்ளி எழுந்தாள். படுத்திருந்த பாய், தலையனையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு கொல்லப்புர கதவை திறந்துகொண்டு சத்தமில்லாமல் பின் பக்கம் சென்றாள். காலை எடுத்து வெளியில் வைத்தவுடனேயே காலில் சேறும் சகதியும் ஒற்றிக்கொண்டது. சிகப்பு மண் என்பதால் மழைநீரில் கொழ கொழ என்று இருந்தது. இருட்டு வேறு. பத்திரமாக காலை ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து கிணற்று அடிக்குச் சென்றாள். அங்கு வாளியில் இறைத்து வைத்திருந்த தண்ணீர் கொண்டு முகம், கை, கால் கழுவி, புடவை முந்தாணியால் முகத்தை துடைத்துக்கொண்டு, ஒரு வாளியில் தண்ணீர் முகர்ந்து கொண்டு வாசல் தெளிக்க சென்றாள்.

அவளின் வீட்டு வாசல் விஸ்தாரமான வாசல். வீடு சிறியதாக இருக்குமே தவிர வாசல் மிகப்பெரியது. சிறிய, ஓடு வேயப்பட்ட வீடு தான். அதிலேயே தன் நான்கு குழந்தைகளையும் வளர்த்து பெரியவர்களாக்கி விட்டாள்.  பெண்ணை திருமணம் செய்து கொடுத்து பேரக்குழந்தையும் பார்த்துவிட்டாள். வீட்டுத்திண்ணையில் அரிசி மூட்டை, நெல்மூட்டை, உரமூட்டை என்று மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். பூச்சிபட்டு வந்து மறைந்து இருந்தால் கூட யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வீட்டிற்குள் சாமானும் செட்டுமாக இருந்தாலும் வீட்டு வாசல் மட்டும் அழகாக சாணம் தெளிக்கப்பட்டு எப்பொழுதும் சுத்தமாக கூட்டப்பட்டு, கோலம் போடப்பட்டிருக்கும். சிறுவர்கள் கிரிகெட் விளையாட ஏதுவாக சுத்தமாக இருக்கும். எவ்வளவு மழை பெய்தாலும் வீட்டு வாசலில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது.

வாளி நிறைய தண்ணீரை வீட்டை ஒட்டிய சந்து வழியாக எடுத்துக்கொண்டு வாசலுக்கு சென்றாள். அதை ஒரு ஓரமாக வைத்துவிட்டு சுவரில் சாத்தப்பட்ட வாசல் கூட்ட என்பதற்காகவே இருக்கும்  கட்டைவிளக்குமாரை எடுத்துக் கொண்டு அதனை வலக் கையால் பிடித்துக்கொண்டு இடக்கை உள்ளங்கையில் ஒன்றிரண்டு அடி அடித்து ஒழுங்கு செய்து வாசலை கூட்ட ஆயத்தமானாள். கையில் துடைப்பத்துடன் குனிந்தவள் தான். “ஆஆஆ, “என்று அலறினாள். “கையில் வைத்து இருந்த துடைப்பத்தை தூக்கி எரிந்துவிட்டு,” பாம்பு கொத்திடுச்சு யாராவது வாங்க” என்று அலறியபடி கீழே சாய்ந்தாள். அவளை காலில் கொத்திய அந்த நல்ல பாம்பு வந்த சுவடு தெரியாமல் பக்கத்தில் இருந்த புதருக்கு  நளினமாக நெளிந்து சென்றது.


இவளின் அலறல் சத்தம் கேட்டு, மாட்டுக் கொட்டகையில் மாட்டை அவிழ்த்துக் கொண்டிருந்த  பக்கத்து வீட்டு அமுதா மாட்டை விட்டு விட்டு ஓடோடி வந்தாள். அவர்கள் வீட்டிற்கும் இவர்களுக்கும் பேச்சு வார்த்தை இல்லை. பங்காளி தான் ஆனால் ஏதோ மனஸ்தாபம். ஒரு காலத்தில் ஒன்றாக கூடி கொண்டாடியவர்கள் தான். பிள்ளைகள் பெரியவர்கள் ஆனவுடன்,உன் மகனுக்கு மட்டும் வேலை கிடைத்துவிட்டது, என் மகன் வேலை இல்லாமல் இருக்கிறான் என்பதை போன்ற ஒருவித பொறாமை  உணர்வு வள்ளியின் மனதில் . அமுதா குடும்பத்துடன் பேசுவதை நிறுத்திக் கொண்டாள். சத்தம் கேட்டு   ஓடி வந்து பார்த்த அமுதா உடனே தன் புடவை முந்தானியை கிழித்து பாம்பு கடித்த இடத்திற்கு மேல் கட்டிவிட்டு, ஓடிச்சென்று தன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தன் கணவனையும், மகனையும் எழுப்பிக் கொண்டு வந்தாள். அது வரையில் முதல் நாள் குடித்த சாராயத்தின் போதையில் உறங்கிக்கொண்டிருந்த வள்ளியின் கணவர் மெதுவாக எழுந்து வந்து செய்வதறியாது திகைத்து நின்றார்.

அக்கிராமத்தில் மருத்துவ வசதி எதுவும் கிடையாது. பக்கத்து கிராமத்திற்குத்தான் செல்லவேண்டும். உடனே ஒரு வண்டிக்கு ஏற்பாடு செய்து காரில் வள்ளியை தூக்கி போட்டுக்கொண்டு மன்னார்குடிக்கு சென்றார்கள். அங்கு முதல் உதவி செய்த அங்கிருந்த மருத்துவர்கள்,”உடனே தஞ்சாவூருக்கு பெரியாஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்க, இவ்வளவு தான் எங்கலால இங்க செய்ய முடியும் ,” என்று கைவிரித்துவிட்டார்கள். உடனே அங்கிருந்து தஞ்சாவூர் பெரியாஸ்பத்திரிக்கு வள்ளியை கொண்டு சென்றார்கள். அங்கு இரண்டு நாட்கள் வைத்து வைத்தியம் பார்த்தார்கள். அரசாங்க மருத்துவமணை ஆகையால் தேவையான மருந்து மாத்திரைகள் இருப்பு இருக்கவில்லை. நல்ல வேலையாக அவர்களின் உறவினர் ஒருவர் அங்கு மருத்துவராக வேலைப்பார்த்தார். அவர் வள்ளியை பார்த்துவிட்டு,” நீங்க இனி தாமதிக்காம பிரைவட் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்க. இங்க இவங்களுக்கு கொடுக்கற மருந்து வீரியமில்லாத மருந்து. இந்த பாம்பு கடிக்கு இன்னும் ஸ்டார்ங்கா மருந்து தேவைப்படும். கால் வேற அழுகற மாதிரி இருக்கு.” என்று அறிவுரை வழங்கினார். அதை கேட்ட வள்ளியின் மகன்களும், கணவரும், அவளை ஒரு தனியார் மருத்துவமணையில் கொண்டு சேர்த்தார்கள். அங்கு தான் அவளின் திருமணமான மகள் அக்கெளண்டண்டாக வேலைப் பார்க்கிறாள். இதுவரை கூடவே இருந்து அமுதாவின் கணவர் ராசா எல்லா உதவிகளையும் செய்தார். வள்ளி கண்முழித்து பார்க்கும் வரை கூடவே இருந்தார்.

நான்கு நாட்களுக்குப் பிறகு கண் விழித்து பார்த்த வள்ளியின் விழி ஓரத்தில் கண்ணீர் வழிந்தது. தான் இன்று உயிரோடு இருப்பது அமுதாவின் குடும்பத்தினால் தான் என்பதை  உணர்ந்த அவள் ஏதும் பேசாமல் படுத்திருந்தாள் . மறுநாள் அவள் நலம் விசாரிக்க வந்த அமுதாவை பார்த்தவுடன் மீண்டும் அவள் கண்களில் தண்ணீர் ததும்பியது. அவளால் பேச முடியவில்லை. ஆனால் அவளின் கண்ணீர் ஆயிரம் வார்த்தைகளை , நன்றிகளை, மன்னிப்புக்களை உணர்த்தியது. அவளின் அருகில் சென்ற அமுதா அவளின் கைகளை இருக்க பிடித்துக் கொண்டு ,” அழாதக்கா, நீ பொழச்சுட்ட, கடவுள் புண்ணியத்துல உனக்கு ஒன்னும் ஆகல. கவலப்படாத சீக்கிரமா சரியாகி வீட்டுக்கு வந்துடுவ,” என்று ஆறுதல் கூறினாள். அவளின் மனதில் எந்த காழ்ப்புணர்ச்சியும் எஞ்சி இருக்கவில்லை. சமைத்து எடுத்து வந்திருந்த சாப்பாட்டை கொடுத்துவிட்டு சிறிது நேரம் இருந்துவிட்டு,”சரிக்கா, சாயங்காலம் பால்காரர் வந்துடுவார், நான் கிளம்பறேன். உங்க வீட்டு மாட்டையும் பால் கறக்க நான் கூட்டிட்டு போறேன். நீ நல்லா தூங்கு ,”என்று கூறிவிட்டு,வள்ளியின் கணவரிடமும், மகளிடமும்,”அம்மாவ பத்திரமா பாத்துக்குங்க. ஏதாவது வேனும்னா சொல்லி அனுப்புங்க,”என்று கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றாள். அறையை விட்டுச் சென்ற அவளை அக்குடும்பமே நன்றியுடன் பார்த்தது. வள்ளிக்கு மறு ஜென்மம் கொடுத்த அமுதாவும் அவளின் குடும்பமும் கடவுளாக தெரிந்தார்கள்.பகையும் , வெறுப்பும் இருந்த இடம் தெரியாமல் போனது.

வீட்டுக்குச் சென்ற அமுதாவிடம் அவள் வீட்டு வாசலில் காய்ந்து கொண்டிருந்த கடலையை காக்கா கோழி கொத்தாமல் இருக்க அமர்ந்தபடியே ஒரு குச்சியை கொண்டு விரட்டிக்கொண்டிருந்த அவளின் எழுபத்தி ஐந்து மாமியார் கிழவி,” என்ன அமுதா, வள்ளிக்கு இப்போ தேவலையா, நல்லா இருக்காளா?” என்று நலன் விசாரித்தாள். ”என்னா வீராப்பா இருந்தா, இப்ப யாரு அவ உசிர காப்பாத்தினது. தான் ஆடாட்னாலும் தசை ஆடும்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க. இதுக்குத்தான் எல்லாரும் ஒத்து ஒணந்து, விட்டு கொடுத்து வாழணும்னு சொல்றது. அந்த காலத்துல நாங்க ஒத்த ஓர்ப்படியா எல்லாரும் ஒத்துமையா இருப்போம். இப்போ எங்க ? நீங்கல்லாம் ஒருத்தரோட ஒருத்தர் பேசவே காசு கேக்கறீங்க. என்னமோ போங்க எல்லாரும் புள்ள குட்டியோட ஒத்துமையா நல்லா இருந்தா சரி. யாரு எதை அள்ளிக்கிட்டு போகப்போறோம்>” என்று தனியாக புலம்பியபடி காக்கா விரட்டுதலை தொடர்ந்தாள்.
வீட்டிற்குள் சாமி விளக்கு ஏற்றிய அமுதா , வள்ளி சீக்கிரமே குணமடைய அந்த மதுரைவீரனிடம் வேண்டிக்கொண்டாள்.

Monday, October 23, 2017

வார்த்தைக் கண்ணாடி

தீபாவளி அன்று காலை! வீட்டில் சாமி கும்பிட்டு கங்கா ஸ்நானம் எல்லாம் முடித்துவிட்டு சுட்டு வைத்திருந்த வடை, சுழியனையும் ஒரு கைப்பார்த்துவிட்டு உண்ட களைப்பில் சோபாவில் சாய்ந்திருந்த நேரம் , சரி ஊருக்கு பேசி தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லிவிடலாமே என்று முடிவு செய்தேன். ஒன்று ,இரண்டு சொந்தங்களுடன் வாழ்த்துக்களை பரிமாறி முடித்துவிட்டு சிம் கார்ட் டாப் அப் செய்வது போல் வயிற்றில் சிறிது இடம் காலியானவுடன் மீண்டும் முறுக்கு, லட்டு என்று டாப் அப் செய்து விட்டு அடுத்து யார் யாருக்கெல்லாம் போன் செய்வது என்று யோசித்து போன் செய்தேன்.

பேசிய முக்கால் வாசிப்பேர் கேட்ட கேள்வி ,”என்ன என்ன பலகாரம் செஞ்ச நீ?” என்பது தான். நானும் பதிலுக்கு நான் செய்தவற்றை கூறிவிட்டு ”நீங்கள் என்ன பலகாரம் செய்தீர்கள்?” என்று கேட்டறிந்து கொண்டேன். எல்லோருடனும் ஒன்றாக இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்தது. மகளும் வேறு ஒரு நாட்டில் படிப்பின் காரணமாக, கணவரும் வேலை நிமித்தமாக வேறு ஒரு நாட்டில். நானும் மகனும் தனியாக தீபாவளி கொண்டாடியது ஏதோ ஒரு வித ஈடுபாடில்லாமல் தான் இருந்தது. அதை மறக்கத்தான் எல்லோரிடமும் போன் செய்து பேசினேன். மகனுக்கு ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை. அதுவும் எந்நாள் போன்ற ஒரு நாளாகவே இருந்தது. புது துணி உடுத்தி யாரிடம் காண்பிப்பது என்பது கூட தெரியாமல் அதனை உடுத்தாமலேயே இருந்துவிட்டேன்.

வயதான ஒரு உறவினரிடம் பேசி வாழ்த்து தெரிவிக்கலாமே என்று அவருக்கு போன் செய்தேன். போனை முதலில் எடுத்த மாமா,” என்ன கீதா தீபாவளி எல்லாம் நல்லா கொண்டாடினீங்களா? “, என்றார். நானும் பதிலுக்கு,”நானும் , ரிஷியும் நன்றாக கொண்டாடினோம்,”என்றேன். அதற்கு அவர்,”ஏன் ரவி ஊரில் இல்லையா?” என்றார். “இல்லை, வேலை நிமித்தமாக வெளியூர் சென்று இருக்கிறார், அவர் தனியாக அங்கே கொண்டாடுகிறார், நாங்கள் இங்கே தனியாக கொண்டாடுகிறோம்,”என்றேன். என் குரலில் ஒரு சுனக்கத்தை உணர்ந்த அவர்,” சரி விடு உங்களுக்காகத்தானே இப்படி அலைகிறார் ,”என்றார். ஆம் அவர் கூறியதில் உண்மை இருந்தது.

”தீபாவளி அதுவுமா எப்படி அவர் வெளியூர் போனார், நீங்க எதுக்கு அதுக்கு ஒத்துக்கிட்டீங்க?” என்று பலர் என்னை அன்று கேட்டுத்தீர்த்தார்கள். கேள்வி கேட்ட பலரிடம்,”இல்லை வேறு வழியில்லை , போக வேண்டிய கட்டாயம்,” என்றும், சிலரிடம் கொஞ்சம் ஆதங்கத்துடன்,” அது அவருக்கே தெரியவேண்டும்” என்றும் கூறினேன். தீபாவளி அதுவுமாக அவர்  ஒன்றும் ஆசையாக வெளியூர் போகவில்லை என்பது என் உள்மனதிற்கு தெரிந்தாலும் பலரது கேள்வியும், கேள்வி கேட்ட தோரணையும் எனக்கு அவர் மேல் சிறு கோபத்தை தூண்டியது. அக்கோபம் மனதுக்குள்ளேயே பூட்டப்பட்டு கிடந்தது.

அந்த மாமாவிடம் பேசிவிட்டு, அவரின் மனைவியிடம் பேசினேன். மாமாவிடம்  நான் பேசியதை அவர்கள் அருகில் இருந்து கேட்டிருப்பார்கள் போல்.  எடுத்த எடுப்பிலேயே,” கவலப்படாத கீதா, மாப்பிள்ளை நல்ல விஷயத்திற்கு தானே ஊருக்கு சென்று இருக்கிறார், கெட்ட விஷயத்திற்கு செல்லவில்லை இல்லையா?” என்றார். நான் அவர் கூறியதை பெரிது படுத்தாமல்,” இல்லை இல்லை  நான் கவலை படவில்லை. கொஞ்சம் போர் அடிக்குது தனியாக கொண்டாட அவ்வளவு தான், நீங்கள் எப்படி கொண்டாடினீர்கள்? என்ன என்ன பலகாரம் செய்தீர்கள்?, என்று கேள்விகளைக் கேட்டு அவரின் பேச்சை திசை திருப்ப முயற்சித்தேன். ஆனால் அவர் விடாமல், மீண்டும் இரு முறை ,”நீ அதல்லாம் கவலப்படாத, அவர் நல்ல விஷயத்திற்கு தானே ஊருக்கு போய் இருக்கிறார், கெட்ட விஷயத்திற்கு இல்லையே?” என்று அதே வார்த்தைகளை வீசினார். முதல் முறை கேட்ட பொழுதே எனக்கு அந்த வார்த்தைகள் இதமாக காதில் விழவில்லை. மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகளை கேட்ட பொழுது மனதிற்குள் சுருக் என்று இருந்தது. ஏன் இவர்கள் இப்படி பேசுகிறார்கள் என்று நினைத்து ,”சரி நீங்கள் சந்தோஷமாக தீபாவளியை கொண்டாடுங்கள்”, என்று கூறினேன். அதற்கும் அவர்கள்,”எங்க சந்தோஷமாக கொண்டாறது?” என்று கூறியதுடன், அவர்களின் இறந்த சொந்தங்களை அடுக்கினார்கள். இதற்கு மேல் உரையாடலை தொடர்ந்தால் என் மனம் புண்படும் என்று நினைத்து போனை வைத்துவிட்டேன்.

போனை வைத்துவிட்டேனே தவிர அவரின் வார்த்தைகள் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஏதோ ஒரு பயத்தை உண்டு பண்ணியது. ஊருக்கு சென்று இருப்பவர் பத்திரமாக வரவேண்டுமே என்ற பதைபதைப்பு ஒரு புறம்.நாம் தனியாக இருக்கிறோமே என்று கூட நினையாமல் இப்படி எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுகிறார்களே என்ற சங்கடம், கோபம். அவர்கள் என் மேல் கரிசனமாக இருப்பதானால் இதே வார்த்தைகளை வேறு விதமாக கோர்த்திருக்கலாம். அவரின் வார்த்தைகள் அவரின் மனதை , அவரின் ஆழ் எண்ணங்களை பிரதிபலித்தனவா என்று எனக்கு ஒரு சந்தேகம். அவர் நினைத்திருந்தால் இதமாக, பொதுவாக பேசி இருக்கலாம். ஒருவரது வார்த்தைகள் கண்ணாடியாய் எப்படி ஒருவரது எண்ணங்களை எடுத்துக்காட்டுகின்றன!அவருக்கு தெரிந்தது அவ்வளவு தான் என்று நினைத்துக்கொண்டேன்.

அதையே நினைத்துக்கொண்டு நான் குழம்பினால் அவரின் எண்ணம் வெற்றிப் பெற்றுவிடும். அதனை தீபாவளி பட்டாசு குப்பையென மனதில் இருந்து கூட்டி வெளியில் கொட்டிவிட்டு சாயங்காலம் நண்பர்களுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாட ஆயத்தமானேன். நானும் மகனும் தனியாக இருக்கிறோம் என்று நினைத்து எங்களுக்காக ஆசையாக பலகாரம் எடுத்துவந்த என் இனிய தோழிகளை நினைத்து ஆனந்தம் அடைந்தேன்.  அவர்கள் எடுத்துவந்த பலகாரங்களை ஆசை ஆசையாக உண்டு மகிழ்ந்தேன். தீபாவளி இனிதே முடிந்தது.

வாயில் ஊறும் உமிழ்நீர் ஆயினும் உமிழும்  முன் நாவினால் உணர்ந்துவிட்டோமானால் பிறர் நலன் கருதி  கண்ட இடங்களில் உமிழ மாட்டோம். மீறி உமிழ்ந்தால் என்றாவது ஒரு நாள் பிறரது உமிழ்நீர் மீது நம் கால் பதியும்.

Saturday, September 16, 2017

 Mom and Rishi



It is dinner time. Rishi comes into the kitchen . Looking at mama preparing something ,
Rishi: Mama what's for dinner?
Mom: Stuffed capsicum
Rishi: what is the stuffing inside mom?
Mom:Potato and raw banana masala Rishi
Rishi: Mama , I think you are the only one who can stuff one veggie into another . How come you do this mama? At least  one veggie  stuffed into the other is acceptable. How come you have stuffed two veggies into a veggie? In Total it becomes three veggies in a day. Don't you think this is too much of a veggie serving for a fifteen year old?
Mom: Rishi , you taste it and then tell me. when you can eat a seafood fried rice which has all kinds of seafood  mixed in rice why cant you eat two three veggies mixed together? Just eat it ok.
Rishi tastes the capsicum fry and then
Rishi: Ok not bad. I like it.
Mom: See I told you. Half the time you guys don't want to taste the food and just say you don't like it.

Mom had proudly taken a picture of her new tried capsicum fry and sent it to all her friends and family group even before they sat for dinner.. She had gotten so many "wows" and "yummy" and mouth licking emoticons as a token of appreciation though everyone who saw the picture could only virtually taste it. A few of them even asked her for the recipe and to few of them she voluntarily said that they have to try making it and sent them the recipe. With all those easy earned pats on her back she expected the same from Rishi . Rishi proved to be the son of the dad who is in testing . Mom had her share thanking God for no Quality rejection.
கட்டடத்தின் மேல்
ஒரு பஞ்சு
பொதி குவியல்
சிதறி பரவி இருக்கிறது!
என் வீட்டு
அடுப்பில் பொங்கிய
பாலின் நுரை
எப்படி
அவ்வளவு தூரம்
பறந்து சென்றது?
என் வீட்டு
வெண்ணெய்
தாழியிலிருந்து
எப்படி
இவ்வளவு வெண்ணெய்
வானம் சென்றது?
சொர்க்கம்
அமர்ந்த கண்ணனுக்காகவா
இது யாவும்??

Monday, August 28, 2017

Dead branch



At the roadside
Lay a dried  broken branch .
No leaves,
No flowers,
No buds,
No fruits .
Not a spark of life in any form.
It was lying there ready to be kicked
by the first foot that tipped on it.
No heart to kick it
I picked it up.
Held it close to my eyes
to see its naked beauty.
Didn't want to leave it alone.
I Brought it home ,
Cleaned the sand,
which had changed its color.
After the shower it looked
fresh to me .
Dried it in the hot sun
to bring back
the crispness of the twigs.
After a day or two
put in a brass vase
to give it a place in my house.
Had a few colorful birds
in my showcase,
that were looking for a place to perch.
Made them sit happily on the new home,
After which the dead branch looked beautiful.
So as the birds as if they started to breathe!
If a dead branch of a tree
can bring alive the showcase birds
How about the humans?
Yes, if they wish
they can live in parts
of many lives
even after they
stop to breathe...........



காய்ந்த கிளை




சாலை ஓரத்தில்
தனியாய் கிடந்தது
 ஒரு காய்ந்த  கிளை.
பூவும் இல்லை
இலையும் இல்லை,
காயும் இல்லை,
பழமும் இல்லை.
அதில் சிறு உயிர்
ஒட்டிக்கொண்டிருப்பதற்கான
ஓர் அறிகுறியும் இல்லை.
யாரின் பாதம்
முதல் படுமோ
அவரிடம் மிதிபடும்
அவலம்.
உதைத்து தள்ள
மனமில்லாமல்
கையில் எடுத்து
கண்ணருகில் வைத்து
அதன் ஒப்பனையில்லா
அழகை ரசித்தேன்.
விட்டுவர மனமின்றி
என் வீட்டிற்கு
என்னுடனே எடுத்து வந்தேன்.
அதன் தேகம் நிறம்
மறைத்திருந்த
 மண்ணை
தண்ணீர் விட்டு
கழுவினேன்.
சூடான சூரியன்
தன் கதிர் கொண்டு
ஈரம் காயச்செய்தான்.
ஊறிப்போன குச்சிகள்
மிடுக்காய் நிமிர்ந்தன.
அதன் பின்னே
அதன் நிஜ அழகு
மிலிர்ந்தது
இரண்டொரு நாள்
ஆனப்பின்
பித்தளைப் பூ ஜாடி
ஒன்றுக்குள்
அழகாக நிற்கச்செய்து
என் வீட்டில்
ஓர் இடமளித்தேன்.
என் வீட்டு
கண்ணாடிக் கூண்டுக்குள்
பல காலம் அடைப்பட்டு
சுதந்திரமாய் அமர்ந்திடவே
இடம் தேடி களைத்திருந்த
பல வண்ணக் குருவிகளை
அக்கிளையில் அமரச்செய்தேன்.
குருவிகள் அமர்ந்தப்பின்
காய்ந்த கிளையும்
பச்சையாய் தெரிந்தது.
உயிரில்லா குருவிகளும்
உயிர் பெற்று ஒளிர்ந்தது.
ஓர் மரத்தின்
காய்ந்த  குச்சிகளே
உயிரில்லா குருவிகளுக்கு
உறைவிடமாய் ஆன பொழுது,
மறித்தப் பின்
மரம் மட்டுமல்ல
மனிதனும்
பயனாகலாம்
மனமிருந்தால்!
பல உயிர்களில்
மீண்டும் வாழலாம்
உறுப்புகளாய்.......


Thursday, August 24, 2017

அக்கக்கா அக்கக்கா.......

காலை மணி ஒன்பது இருக்கும். கணவர் ஆபீஸுக்கும் மகன் பள்ளிக்கும் சென்றுவிட்டார்கள். சூரியன் கூட இன்று சோம்பேறியாகவே இருந்தது. ஒன்பது மணி ஆனாலும் அது மேக போர்வைக்குள் சுகமாக பதுங்கி கொண்டிருந்தது. ரம்மியமான அந்தக் காலைப் பொழுதை ரசிக்க ஹால் ஜன்னல்களை திறந்து வைத்தப்படி சோபாவில் அமர்ந்திருந்தேன். எங்கிருந்தோ வந்த தென்றல் என் முகம் வருடியது. வீட்டில் நான் தனியாக இருப்பதால் வீடு அமைதியாக இருக்கும். அந்த அமைதி எனக்கு ஏனோ பிடிப்பதில்லை. பேச்சுக்குரல் கேட்க வேண்டி தொலைக்காட்சியை ஓடவிடுவேன். அதில்   ஏதோ ஒரு  நிகழ்ச்சி கடனே என்று ஓடிக்கொண்டிருந்தது. தினசரியை கண்கள் மேய்ந்துக் கொண்டிருக்க  கையில் சூடான டீ நிரம்பிய கோப்பை வேறு. அப்பொழுது  திடீரென்று ஒரு கூவல் எங்கிருந்தோ விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது. அது அக்கக்கா குருவியின் அழைப்பு. ஏதோ ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில்  மொட்டை மாடியில் அமர்ந்தபடி அது யாருக்கோ அழைப்பு விட்டுக்கொண்டிருந்தது. ”அக்கக்கா அக்கக்கா” என்று அது விடாமல் கத்திக்கொண்டிருந்தது.

நான் சிறுமியாக இருந்தது பொழுது எங்கள் வீட்டு தென்னை மரத்தில் வந்து அமர்ந்து அக்கக்கா குருவி கத்தும். கேட்கவே பாவமாக இருக்கும்.  அந்த சத்தம் மனதை பிழியும். அந்த  ஒலியின் பின் ஒரு கதை இருப்பதாக என் அம்மா கூறியது நினைவிற்கு வந்தது. அக்கா குருவியும், தங்கை குருவியும் ஆற்றில் குளிக்க போனார்களாம். அப்பொழுது திடீரென்று வந்த வெள்ளத்தில் அக்கா குருவி அடித்து செல்லப்பட்டதாம். அன்றிலிருந்து அந்த தங்கை குருவி “அக்கக்கா, அக்கக்கா” என்று தன் அக்காவை அழைத்துக் கொண்டே இருக்கிறதாம். வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தன் அக்கா மீண்டும் தன்னிடமே உயிருடன் வந்து விடுவாள் என்று அது நினைத்து அழைத்துக் கொண்டே  இருக்கிறதாம்.  அக்கக்கா அக்கக்கா என்ற  அந்த கூவலை கேட்ட பொழுது இனம் தெரியாத ஒரு உணர்வு மனதை கவ்விக்கொண்டது. ஒரு சோக கீதம் அந்த கூவலில் எதிரொலித்தது. தன் அக்கா மேல் எவ்வளவு ஆசை இருந்திருந்தால் அது எவ்வளவு காலம் விடாமல் தொலைந்த தன் அக்காவை தேடிக்கொண்டிருக்கும்? அன்னக்கிளி படத்தில் வரும் பாடல் வரிகள் ஞாபகத்திற்கு வந்தது. ஏனோ என் கண்களில் நீர் கசிந்தது!

”சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை
அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில்
அது வாழுது தன் நிழலில்
அக்கக்கோ எனும் கீதம்
அதுதானே அதன் வேதம்”


ஆம் அதற்கென்று அழுது புலம்ப யாருமே இருக்கவில்லை. தன் சோகத்தை அதனால் யாரிடமும் பகிர முடியவில்லை. காலை  வேளை ஆதலால் எல்லோரும் அலுவலகத்திற்கும், பிற இடங்களுக்கும் செல்வதில் மும்முரமாக இருந்தார்கள். வாகன சத்தத்திற்கு நடுவே யாருக்கும் அவளின் குரல் கேட்டதாக எனக்கு தெரியவில்லை. அவளுக்கு அவள் அக்காவை தேடிக்கொடுக்க யாரும் முன் வரவில்லை. தத்தமது வேலையை பார்க்க விறுவிறு என்று ஓடிக்கொண்டிருந்தார்கள். எனக்கு பாவமாக இருந்தது. தொடர்ந்து கூவியதால் அவளின் குரல் ஒரு கட்டத்தில் கரகரத்தது. ஆனாலும் அவள் தன் கூவலை நிறுத்தியபாடு இல்லை. கூவலுக்கு இடையேயான இடைவெளியை கூட்டினாலே தவிர கூவலை நிறுத்தவில்லை. சற்று நேரம் ஆன பின் மீண்டும் விடாமல் கூவினால். தன் அக்காவை தொலைத்த  இடம் விடுத்து எங்கெங்கோ தேடி அலைகிறாள் அவள் பாவம். கையில் இருந்த  டீயை நான் குடித்து முடித்து இருந்த போதும் கோப்பையை கீழே வைக்க கூட நினையாமல் அந்த கூவலில்  மூழ்கி போயிருந்தேன்.

 ஒரு முப்பது நாற்பது நிமிடங்கள் இருக்கும் அதற்கு பின் அவள் ஓய்ந்துவிட்டாள். ஒருவேளை இவ்விடம் தன் அக்கா இல்லை என்பதை உறுதி படுத்திக்கொண்டு வேறு இடம் பறந்து சென்று விட்டாள் போலும். தன் தேடுதலை அவள் விடப்போவதில்லை என்பது மட்டும் எனக்கு உறுதியாக தெரிந்தது. வாழும் காலத்தில் உறவுகளை உதாசினப்படுத்தி உதறிவிடும் மனிதர்கள் மத்தியில்  காலம் காலமாய் , ஜென்ம ஜென்மமாய் தன் அக்காவை தேடும் அக்காகுருவி எனக்கு அதிசயமாய் தோன்றியது. உண்ணாமல் உறங்காமல் இப்படி ஊர் ஊராக, நாடு நாடாக தேடி அலைகிறாளே இவள்!  என்றாவது ஒருநாள் தன் அக்காவை தேடிக் கண்டு பிடிக்கவேண்டும் என்று என் மனம் வேண்டியது. அன்று முழுதும் அக்கக்கா அக்கக்கா அக்கக்கா என்ற அந்த ஒலி என் காதுகளில் எதிரொலித்துக்கொண்டே இருந்தது, மனமும் கனத்துக்கொண்டே இருந்தது........