Saturday, July 15, 2017

மாற்றம் ஒன்றே மாறாதது

மாற்றம் ஒன்றே மாறாதது
அன்று:
அப்பா திரைப்படத்திற்கு அழைத்துச் செல்வார். படம் பார்த்து விட்டு திரையரங்கை விட்டு வெளியே வரும் பொழுதே படம் பற்றிய நினைப்பை, பேச்சை நிறுத்தி விட வேண்டும். வீட்டிற்கு வந்து அதைப் பற்றி பேசுவதோ , ஆராய்ச்சி செய்வதோ கூடாது. மீறி பேசினால் “படம் என்பது பொழுது போக்கிற்கு பார்ப்பது. படம் பார்த்தோமா மறந்தோமானு இருக்கனும். வீட்டிற்கு வந்து அதைப்பற்றி பேசினால் இனி படம் பார்க்க அழைத்து செல்ல மாட்டேன்” என்பதுடன் சேர்ந்து சில பல அர்ச்சனைகள் விழும். அர்ச்சனைக்கு பயந்து வீட்டில் படம் பற்றி பேசாமல் இருந்து விடுவோம் . பள்ளி சென்று படம் பற்றி பேசும் அளவிற்கு ஞானம் இல்லை.படம் நன்றாக இருந்தது அல்லது படம் நன்றாக இல்லை என்பதை தவிர வேறு விவாதம் நடந்ததாக ஞயாபகம் இல்லை. ரேடியோவில் பாட்டு கேட்பது உண்டு--அதுவும் காதை ஸ்பீக்கரில் அமுக்கி வைத்துக்கொண்டு. அதைப் பார்க்கும் அப்பா,” ரேடியோகுள்ளவே போயிடு இந்த ரேடியோவை தூக்கி போட்டு உடச்சாதான் சரிபடுவ.” என்று கோபிப்பார். அப்பா வீட்டில் இல்லாத நேரம் பசை போட்டு ஒட்டியது போல ரேடியோ கேட்பது உண்டு. அதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்தது.
இன்று:
பேத்தியுடன் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்க்கிறார். பிடிக்கவில்லை என்றாலும் நிகழ்ச்சி பற்றி பேத்தி கூறும் கருத்துக்களை, விமர்சனங்களை அமைதியாக கேட்கிறார். மகளை அர்ச்சித்தது போல் பேத்தியை அர்ச்சிப்பது இல்லை.பேத்தியை கண்டிக்க மகள் இருக்கிறாள் என்ற நினைப்போ என்று தெரியவில்லை. அவருக்கு தெரியாது நாங்கள் படம் பார்த்துவிட்டு வரும் போது காரிலேயே படத்தைப்பற்றி குடும்பமே சேர்ந்து ஆராய்ந்து பீராய்ந்து விடுவோம் என்று. கதை எப்படி, இசை எப்படி , நடிப்பு எப்படி என்று பிஹெச்டி பட்டம் வாங்கும் அளவிற்கு ஆராய்ச்சி நடக்கும். எல்லோருமே சுப்புடு ஆகிவிடுவோம். வீட்டிற்கு வந்தவுடன் சமூக வளைதளங்களில் படத்தை பற்றிய மற்றவர்களின் கண்ணோட்டத்தையும் பார்ப்போம். அன்று நான் ரேடியோ ஸ்பீக்கரில் பசைபோட்டு ஒட்டியது போல் பாட்டு கேட்டேன் இன்று என் பிள்ளைகள் ஹெட்போனுடனேயே பிறந்தது போன்று அலைகிறார்கள். என் அப்பாவிற்கு வந்த அதே கோபம் எனக்கும் வருகிறது ஆனால் அப்பா எப்படி ரேடியோவை கடைசிவரை போட்டு உடைக்கவில்லையோ அதே போல் நானும் ஹெட்போனை தண்ணீரில் தூக்கி போடுவேன் என்று சொல்கிறேனே தவிர செய்வதில்லை. காசு போட்டு நாம் அல்லவா வாங்கி கொடுத்து இருக்கிறோம்.