Friday, December 29, 2017

மூணு முத்துக் கொலுசு!






மூணு முத்துக் கொலுசு!
வெள்ளிக் கொடி
அதில்,
அங்கங்கே மூனு முத்து!
ஜலக் ஜலக் சத்தம்
இதற்கு பெயர் மூணு முத்துக் கொலுசு!
இதை சொன்னவள்
நீதானடி தோழி!
உன் மூணு முத்துக் கொலுசுக்கு
மறுபிறவி வேண்டுமென
என்மேல் நீ வைத்த
நம்பிக்கைக்கு
உயிர் கொடுக்க
வரைந்தேனடி இம்மடலை!


நீ குழந்தையாய்
அடிமேல் அடிவைத்து
நடக்க பயந்த பொழுது
உன் தாய் போட்டுவிட்டா
மூணு முத்துக் கொலுசு!
அடி எடுத்து வைக்கும் போது
சத்தம் கேட்டு பயமில்லாமல்
அழகாய் அடுத்த  அடி
எடுத்து வைத்தாய்!
அதை பார்த்து ரசிச்சா
ராசாத்தி உன் தாயி!


மூன்று நான்கு வயதிருக்கும்!
விளையாடுகிறேன் என்று
எங்கு போய் ஒளிந்து கொண்டு
கண்ணனென குறும்பு செய்வாய்
என ஆறிந்து கொள்ள
உன் காலில் பூட்டிவிட்டாள்
மூணு முத்துக் கொலுசு!
ஒளிந்து மறைந்து நீ செய்த
குறும்பனைத்தும் காட்டிக் கொடுத்ததாம்
உன் மூணு முத்துக் கொலுசு!

பதின்ம வயது நீ அடைந்த போது
அழகாய் பட்டு பாவாடை சட்டைப் போட்டுவிட்டு
உன் பாதம் அணிவித்து
அழகு பார்த்தாள்
மூணு முத்துக் கொலுசு!
சலக் சலக் என நீ
ஒய்யாரமாய் நடந்த நடையை
ஊர் மக்கள் யாவருமே பார்த்து ரசிக்க
உன் தாய் மட்டும்,”மோகிணி என
டங் டங் என நடக்காதே.
பெண்ணென மெதுவாய்
பூமித்தாய்க்கு வலிக்காமல்
சத்தம் வராமல்
மெதுவாய் கால் பதித்து
அழகாய் நடந்திடடி,”
என பல் இடுக்கில் வார்த்தைகளை
விழுங்கினாளடி தோழி!
”சத்தம் வராமல் நடக்க எனக்கெதுக்கு
மூணு முத்துக் கொலுசு?”
என செல்லமாய் கடிந்து
கொண்டாயடி நீயும்!

நைலக்ஸ் தாவணி அணிந்து
அது நழுவாமல் மேல் இருக்க
இருக்கமாய் அணைத்து பிடித்த புத்தகத்தோடு
தெருவில் நீ நடக்கையிலே
உன் மூணு முத்துக் கொலுசின்
பாட்டொலிக் கேட்டு
வாசலில் வழுக்கி
விழுந்தாரடி வாலிப கிறுக்கர்கள்!

மூன்று முடுச்சு கழுத்திலே ஏறியப்பின்
புதுப்பெண் வருகிறாள்
என்பதற்கு ,அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து போட்டுவிட்ட
புது மெட்டியுடன்
மூணு முத்துக் கொலுசும்
சேர்ந்துத்தான் இசைத்ததடி தோழி!

உன்னவன் அருகினிலே
யாருக்கும் தெரியாமல்
ஆசையாய் நீ கொஞ்சும் போது
உன் மஞ்சள் பூசிய பாதத்தில்
பாம்பாய் நெளியும்
மூணு முத்துக் கொலுசு
மெதுவாய் முனகுமடி!
ஆசையாய் அணிவித்த
மூணு முத்துக் கொலுசையும்
அவிழ்த்துவை என்பான்.
மறுப்பேதும் பேசாமல்
மூணு முத்துக் கொலுசை
நீயும் தான் சத்தமில்லாமல்
சினுங்காமல் , சாதுர்யமாய்
அவிழ்த்திடுவாய்!

பிள்ளைகள் வளர்ந்தவுடன்
கொலுசு சத்தம் எனக்கெதுக்கு
என்று மூணு முத்துக் கொலுசை
முனுமுனுத்தே கழற்றி வைத்தாய்!
கழற்றிவைத்த மூணு முத்துக் கொலுசும்
பலகாலம் பெட்டகத்தில்
ஊமையாய் உறங்குதடி!

உன்னவன் ஆசைப்பட
அறுபதாம் கல்யாணத்தில்
உன் பாதம் பார்க்குமாம்
மூணு முத்துக் கொலுசு!
வெட்கத்துடன் நீ தலை குணிய,
தோல் சுருங்கிய பாதம்தான்
ஆனாலும் அழகாய்
பாடுமாம் சுப்ரபாதம்
உன் மூணு முத்துக் கொலுசு!

உன் பேத்தி வரும்வரையில்
மெளன விரதம் இருந்துடுமாம்
மூணு முத்துக் கொலுசு!
அவள் வந்தவுடன்
மீண்டும் ஆர்ப்பரிக்குமாம்
உன் மூணு முத்துக் கொலுசு!



Tuesday, December 26, 2017

டிசம்பர் பூக்கள்

Image result for december poo pictures




டிசம்பர் பூக்கள்
டிசம்பர் மாதத்தில்
பூப்பதால் டிசம்பர் பூ
என பெயர் பெற்றாயோ?
வெள்ளை, வெளிர் சிகப்பு, கத்தரிப்பூ நிறம்
ஊதா என பல வண்ணம் கொண்டாயோ?
வண்ணம் பல இருந்தாலும்
டிசம்பர் பூ என்றவுடன்
நினைவில் வந்து போவது
உன் கத்தரிப் பூ வண்ணமே!
கனம் உனக்கு இல்லைதான்
ஆனால் உன்னை சூடிய பின்
எங்கள் தலைகனம் வேறுநிலை!
யானை காதென
காதின் இருபுறமும்
அழகாய் துவள்வாய்!
உன்னை ஊதி ஊதி வெடித்தாலும்
கோபம் கொள்ள மறுப்பாய்!
வண்ண வண்ண நாதஸ்வரமாய்
அழகாய் பூத்துக் குலுங்குவாய்!
அழுத்தி பிடித்தால்
சுகமில்லை என்பதனை
கொஞ்சம் வாடியே நீ உணர்த்துவாய்!
அழகாய் தொடுத்த மாலையாய்
நீ பூக்கூடையை அழகு செய்வாய்!
மனமில்லா காரணத்தால்
தெய்வத்திருவடியை நீ இழந்தாய்!
ஆனாலும் வாஞ்சையுடன்
உனை அரவணைக்க
கிரீடமாய் உனை சூட
ஆயிரம் அழகிய
மங்கையரின் தலை காத்திருக்கும்!

Saturday, December 23, 2017

இதயத் துடிப்பு!









இதயத் துடிப்பு!
ஊருக்கு போய்விட்டு வந்து பார்க்கிறேன், என் வீட்டு சுவர் கடிகாரத்தின் இதயம் இப்பொழுதோ அப்பொழுதோ என்று துடித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளின் ஆயுளையும் தன் துடிப்பின் மூலம் குறைக்கும் அதன் இதய முள் எப்பொழுது நிற்கப்போகிறதோ என்று என் இதயத்துக்குள் ஒரு பதைபதைப்பு. அதன் துடிப்பு நின்று விட்டால் நாட்களின் ஆயுள் ஒன்றும் கூடப்போவதில்லை. அதன் இதயம் நாற்பத்தி நான்கிற்கும் நாற்பத்தி ஐந்திற்கும் நடுவில் துடித்துக்கொண்டிருக்கிறது. எமனின் பாசக்கயிற்றின் சுருக்கு இன்னும் அதன் இதயத்தை நெருக்கவில்லை போலும்!உடலின் மற்ற பாகங்கள் யாவும் ஓரிடத்தில் நின்றுவிட இதயம் மட்டும் வாழ ஆசைப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் ஆசை என் கண்களுக்கு மட்டுமே தென்படுகிறது. வீட்டில் உள்ள யாவர் கண்களிலும் அது தென்படவில்லை. அது ஏனோ என்று எனக்கு தெரியவில்லை. யாராவது ஒருவர் அதற்கு புத்துயிர் கொடுப்பார் என்று நானும் இரண்டு நாட்கள் காத்து இருந்தேன். சத்தமில்லா அதன் துடிப்பின் வலி எனக்கு மட்டுமே புரிந்த மொழிஆனது. எட்டா உயரத்தில் இருந்தாலும் என் கால் உதவி பத்தாது என்று நாற்காலியின் உதவியோடு கடிகாரத்தை உடல் நலமில்லா குழந்தையென மெதுவாக தூக்கி உடலை திருப்பி ஆள்காட்டி விரல் நீட்டமே இருந்த பாட்டரியை அதன் முதுகில் திணித்து மீண்டும் இதயம் துடிக்கச்செய்தேன். மறுகணமே எல்லா பாகங்களும் உயிர் பெற்றன. மெதுவாய் கவனத்தோடு மீண்டும் அதன் இடம் சேர்த்தேன். அஃறினையோ, உயர்தினையோ ஒன்றிற்கு உயிர் கொடுக்கும் பொழுது இருக்கும் சந்தோஷம் அளவிடமுடியா ஆனந்தம்.

மார்கழி!

No automatic alt text available.

மார்கழி!
அதிகாலை பனி பொழியும் வானம்!
எங்கோ தூரத்தில் ஒலிக்கும்
சரணம் ஐய்யப்பா பாடல்!
வாசல் தோறும் வண்ணப் பூக்கோலம்!
வெயில் வர வர ,பனி உருகி
கோலத்தின் வண்ணத்தில்
நீர் மொட்டாய் அமர்ந்திருக்கும்!
கோலம் நடுவில்,சானி உருவில்
அமர்ந்திருக்கும் பிள்ளையார்!
அவர் உடலை விட பெரிய
பூசணிப்பூ அவர் தலையில்!
மறுநாள் தண்ணீர் தெளித்து,
கூட்டி பெருக்கினாலும்
வாசல் மண்ணில் ஒட்டிக்கொள்ளும்
கோலத்தின் வண்ணம்!
இருந்தும் வாசலுக்கு
விடாமல் தினம் ஒரு வண்ணம்
பூசும் அழகிய பெண்கள்!
தெருவில் போகும் பொழுது
யார் வீட்டு வாசலில்
அழகாய் கோலம் பூத்திருக்கிறது
என்று பார்த்துக்கொண்டு போகும்
ஆயிரம் ஜோடி கண்கள்!
கூடவே பேப்பர் போடும் பையனின்
சைக்கிள் டயர் கோலம்மீது
கோடுபோடாமல் போகவேண்டும்
என்ற மனதின் பிராத்தனை!
இத்தனையும் வாசலுக்கு
வெளியே!
வீட்டின் உள்ளே,
சத்தமாய் ஒலிக்கும் அபிராமி அந்தாதி,
குளிருக்கு இதம் தரும்
ஆவி பறக்கும் காப்பியின் மனம்
வீடு முழுதும்!
திறந்து வைத்திருக்கும் சன்னல் வழியே
மெதுவாய் தலையை நீட்டும்
சூரியனின் செங்கதிர்கள்
கூடத்தின் தரையில் போடுமாம்
ஒளி வரிக்கோலம்!
சாமி அறையில் இருந்து
வரும் ஊதுபத்தியின் புகை,
கூடவே ஒலிக்கும் மணியின் ஓசை!
இரவு முழுதும் தென்றலோடு
ஆட்டம் போட்ட தென்னை கீற்று
விடிந்ததும் தன் வேர்வை துளிகளை
கொல்லை மண்ணில்
சொட்டு சொட்டாய் சிந்துமாம்!
இவை யாவும் ஒரு காலத்தில்
நிதர்சனமாய் அரங்கேறியது!
இன்றோ,
கொல்லையில் இருப்பது வெறும் மழைநீர் தொட்டி!
தொலைக்காட்சி பெட்டியில்
ஓயாமல் ஒலிக்கும் ராசிபலன்!
கொசுவிற்கு பயந்து
மூடியே இருக்கும் சன்னல்கள்!
குளிருக்கு பயந்து
ஸ்வெட்டர், குல்லா போட்ட பெண்கள்,
அவர்கள் மேல் அடிக்கும் ஓடோமஸின் மனம்!
இருட்டில் வரும் அதிகாலை
செயின் திருடனிடமிருந்து
தப்பிக்க விடிந்ததும்
கோலமிடும் கோலம்!
ஆனாலும் மார்கழி என்றால்
மனதெங்கும் பூக்கும் வண்ணக்கோலம்!

Sunday, December 3, 2017

என் குருவிக்கும் 
தண்ணீர் வேண்டுமாம்.
கூவி அழைத்து 
தண்ணீர் கேட்க
அதற்கு தெரியவில்லை!
என் மீது நம்பிக்கை
வைத்து காத்து இருந்தது!
செடிக்கு தண்ணீர்
விடும் பொழுது
தன் தவிச்ச வாய்க்கும்
ஒரு வாய் தண்ணீர்
கிடைக்கும் என்று
பொருமையாய்
பறந்து செல்லாமல்
காத்து இருந்தது!
ஒரு வாய் தண்ணீர்
என்ன, உனக்கு,
தண்ணீரால் அபிஷேகம்
செய்கிறேன் நான் இன்று!
தண்ணீர் உடம்பில்
உணர்ந்த மறுநொடியே
என்னைப் பார்த்து
சிரித்தது!
சிலிர்த்துக் கொண்டு
சிறகடித்து
பறக்க வில்லை!
மீண்டும் ஒரு குளியலுக்காக
காத்து இருந்தது!
நான் ஊற்றும் தண்ணீர்
செடியை மட்டுமில்லை
உன்னையும்
உயிர் பெறச் செய்யுமா?
நான் வெளியில்
செல்லும் போதெல்லாம்
முகம் மலர்ந்தபடி
என்னை நீ வழி அனுப்புகிறாய்.
உன்னிடம் விடைப் பெற்றப்
பின்னே நான் வெளி செல்கிறேன்.
நான் வீடு திரும்பும் போதெல்லாம்
முன் நின்று
அதே புன்னகையுடன்
என்னை வரவேற்கிறாய்!
உனக்கும் எனக்கும்
ஓர் இனம்புரியா
பிணைப்பு.
இது நான் உனக்கு
கொடுக்கும்
அந்த ஒரு சில
துளி தண்ணீரால்
ஏற்பட்ட
உறவா?

கார்த்திகை தீப திருநாளாம்!


கார்த்திகை தீப திருநாளாம் இன்று! வருடா வருடம் வரும் பண்டிகை என்றாலும் இதற்கு ஒரு தனி சிறப்பு உண்டு, அழகுண்டு, மகிமை உண்டு, ஒளி உண்டு! நினைவில் பல வண்ண நினைவலைகள்! இரண்டு நாள் முன்பே அம்மா அகல் விளக்குகளை கழுவி காய வைப்பாள். அகல் விளக்கு என்றாலே அது சிகப்பு நிற செம்மண்ணினால் வடிவமைக்கப் பட்டதாகவே இருக்கும். இன்று கிடைப்பது போன்று வண்ண வண்ண விளக்குகள் அப்பொழுது கிடையாது. அவற்றிற்கு வண்ணம் பூச வேண்டும் என்று கூட தெரியாது. அலங்கரிப்பதென்றால் அதற்கு மஞ்சள் , குங்குமம் வைப்பது தான். அந்த பொறுப்பை என்னிடம் தருவாள் அம்மா. கொஞ்சம் சினுங்கி கொண்டே செய்வேன்! வீடு வாசல் சுத்தம் செய்யப்படும்.
முதல் நாள் பரணி தீபம் என்று சில அகல் விளக்குகள் ஏற்றுவாள். மறக்காமல் அடுப்பிற்கு ஒன்று, கிணற்றிற்கு ஒன்று ஏற்றுவாள்! இன்றும் என்னிடம் ”மறக்காமல் அடுப்பிற்கு ஏற்றிவிடு ”,என்று ஞாபகப்படுத்துகிறாள். இன்றுவரை அவள் வீட்டு தண்ணீர் இல்லா முன்னூற்று ஐம்பது அடி போர் போடப்பட்ட கிணற்றிற்கு விளக்கொன்று ஏற்றி வைக்கிறாள். தண்ணீர் தரும் கிணற்றை பூஜித்து தங்கச் சுரங்கமென நினைக்கிறாள். மணல் அள்ளி ஆறுகளையும், குளங்களையும் மலடாக்கிக் கொண்டிருக்கும் நம் அறிவீனம் ஒரு நொடி மூளையை தட்டிப் பார்க்கிறது. கார்த்திகை பொரி கிளறுவாள். கார்த்திகையின் போது மட்டுமே அப்பொரி கிடைக்கும். வெல்லம் போட்டு அப்பம் செய்வாள்! அந்த அப்பம் தொப்பி போல் வடிவத்தில் இருக்க வேண்டும் என்று அவ்வளவு பிரயத்தனம் செய்வாள். அது தொப்பி மாதிரி அழகாக ஒரே மாதிரியாக வந்து விட்டாள் அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. அதனை உண்டு மகிழ்வதை விட பார்த்து மகிழ்வாள். எங்களிடம் காண்பித்து எங்களையும் மகிழச் செய்வாள். அந்த அப்பத்திற்கு கந்தர் அப்பம் என்று பெயராம். கந்தனுக்கே இவள் குல்லா போட பார்க்கிறாளோ என்று தோன்றும். தொலைக்காட்சியில் திருவண்ணாமலை தீபம் ஏற்றுவதை லைவ்வாக காண்பிப்பார்கள் . அதற்குப் பின் தான் வீட்டில் விளக்கேற்றுவாள். வீட்டில் தொலைகாட்சி பெட்டி இல்லாத போது சாயங்காலம் ஆறு மணிக்கு விளக்கேற்றுவோம். தொலைக்காட்சி பெட்டி வந்தப்பின் திருவண்ணாமலை தீபத்தை நேரில் பார்ப்பதைப் போன்ற உணர்வு !
வீடு முழுதும் தீபம் ஏற்றுவோம். பெண் பிள்ளைகள் அழகால உடை உடுத்தி விளக்கு ஏற்றும் போது ஒரு தனி அழகு தான். மதில் சுவர் எங்கும் விளக்குகள் ஏற்றிவிட்டு அது காற்றில் அனையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டின் ஓவ்வொரு அறை வாசலிலும் அகல்கள் அலங்கரிக்கும். பார்த்து பத்திரமாக நடக்க அம்மா சொல்லிக்கொண்டே இருப்பாள். அங்கங்கே எண்ணை கசிந்து வேறு இருக்கும். வழுக்கி விட்டுவிடுமோ என்ற பயம் அவளுக்கு. இப்பொழுதெல்லாம் டீ லைட் கேண்டில் தான் என் வீடு அகலில். அகலை கழுவ வேண்டும், எண்ணைய் ஊற்ற வேண்டும், பொட்டு வைக்க வேண்டும் என்ற கோட்பாடுகள் இல்லை. கால மாறுதல்களில் ஒதுவும் ஒன்று.
வீடு முழுவதும் விளக்கு ஏற்றி விட்டு, அதனை வீட்டிற்கு வெளியே நின்று பார்க்கும் பொழுது மனதிற்குள் பட்டாம்பூச்சி படபடக்கும். நம் வீட்டை மட்டும் அல்லாது தெரு முழுவதும் , ஒவ்வொரு வீட்டிலும் எரியும் விளக்குகள் கண்கொள்ளா காட்சி. பொதுவாக கார்த்திகை அன்று மழை தூரல் இருக்கும் , சிலு சிலு என்று காற்றும் வீசும். அந்த தூரலில் நின்று கொண்டு விளக்கு ஏற்றி மகிழ்வது ஒரு சுகம் தான். மழை தூறுமோ, விளக்கு அனைந்து விடுமோ என்ற கவலை எனக்கு இப்பொழுது இல்லை. நான் இருக்கும் எட்டாவது மாடி அடுக்கு வீட்டின் வாசலுக்கு மழை சாரல் கூட அண்டாது. நானே விளக்கேற்றி, நானே ரசித்துக் கொள்வேன். என் அம்மா அப்பத்தின் அழகை எங்களுக்கு காட்டி மகிழ்ந்தது மாதிரி இப்பொழுது நான் என் குடும்பத்திடம் நான் வரையும் கோலம், ஏற்றும் தீபம் என்று ஒவ்வொன்றாக காண்பித்து மகிழ்கிறேன். நல்ல வேளையாக வாட்ஸ் ஆப் வந்தது. கடல் கடந்து இருக்கும் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் படம் எடுத்து அனுப்பி மகிழ்கிறேன். இதில் ஒரு அற்ப சந்தோஷம்.
என்ன தான் நான் அப்பம், பொரி செய்தாலும் அம்மாவின் அப்பத்திற்கும் பொரிக்கும் ஈடாகாது. அந்த பொரியில் நிறைய தேங்காயை கீறி நெய்யில் வறுத்து போட்டிருப்பாள். நினைத்தாலே தானாகவே எட்சில் ஊறும். சில நேரம் அம்மா எனக்காக கார்த்திகை பொரியை எடுத்து வைப்பாள். விடுமுறைக்கு கார்த்திகையை ஒட்டி ஊருக்குச் சென்றாள் அந்த குடுப்பினை உண்டு.தீபாவளிக்கு வாங்கிய வெடி, கம்பி மத்தாப்பு சிலவற்றை கார்த்திகை தீபத்தன்று வெடிக்க பத்திரப்படுத்தி வைப்பதுண்டு. கார்த்திகைக்கு மறுநாளும் சில அகல்களை ஏற்றுவோம். அதற்குப் பின் அந்த அகல்களை மீண்டும் கழுவி, இரண்டு மூன்று நாட்கள் காயவைத்து ஒரு சிகப்பு ப்ளாஸ்டிக் டப்பாகுள் வைத்து அடுக்கி மூடி லாப்டில் வைத்து விடுவாள். அந்த சிகப்பு டப்பா அடுத்த வருட கார்த்திகை வரும் பொழுது தான் வெளிச்சம் பார்க்கும். எனக்கு அந்த வேலை இல்லை. டீ லைட் கேண்டில் எரிந்து முடிந்த பின் எடுத்து குப்பையில் வீசி விடுகிறேன். அம்மா இன்று வரை ரீ சைக்கிள் செய்கிறாள். அதன் பொருள் தெரியாமலேயே. நானோ சுற்றுப் புறச்சூழல் பற்றி வாய் கிழிய பேசினாலும் பூமியில் மேலும் குப்பையை சேர்க்கிறேன். சோம்பேறித்தனம் என்று சொல்வதை விட வேறு இதற்கு பெயர் என்ன?
வயதானாலும் அம்மா அப்பமும், பொரியும் செய்து தன் இஷ்ட தெய்வத்திற்கு வைத்து கும்பிடுகிறாள். விளக்குகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதே தவிர அவற்றை ஏற்ற அவள் சோம்பேறித்தனம் அடைவதில்லை!. என்னால் முடிந்தவரை நானும் அம்மாவைப் போல் செய்கிறேன். என் அம்மா அகல் விளக்கு ஏற்றினாள், நான் டீ லைட் கேண்டில் ஏற்றுகுறேன்.என் மகள் சர விளக்கு, ஸ்ட்ரிங் லைட் ஏற்றி கொண்டாடுவாள். மொத்தத்தில் கார்த்திகை அன்று ஒளி பிறந்தாள் சரி!