Saturday, December 23, 2017

மார்கழி!

No automatic alt text available.

மார்கழி!
அதிகாலை பனி பொழியும் வானம்!
எங்கோ தூரத்தில் ஒலிக்கும்
சரணம் ஐய்யப்பா பாடல்!
வாசல் தோறும் வண்ணப் பூக்கோலம்!
வெயில் வர வர ,பனி உருகி
கோலத்தின் வண்ணத்தில்
நீர் மொட்டாய் அமர்ந்திருக்கும்!
கோலம் நடுவில்,சானி உருவில்
அமர்ந்திருக்கும் பிள்ளையார்!
அவர் உடலை விட பெரிய
பூசணிப்பூ அவர் தலையில்!
மறுநாள் தண்ணீர் தெளித்து,
கூட்டி பெருக்கினாலும்
வாசல் மண்ணில் ஒட்டிக்கொள்ளும்
கோலத்தின் வண்ணம்!
இருந்தும் வாசலுக்கு
விடாமல் தினம் ஒரு வண்ணம்
பூசும் அழகிய பெண்கள்!
தெருவில் போகும் பொழுது
யார் வீட்டு வாசலில்
அழகாய் கோலம் பூத்திருக்கிறது
என்று பார்த்துக்கொண்டு போகும்
ஆயிரம் ஜோடி கண்கள்!
கூடவே பேப்பர் போடும் பையனின்
சைக்கிள் டயர் கோலம்மீது
கோடுபோடாமல் போகவேண்டும்
என்ற மனதின் பிராத்தனை!
இத்தனையும் வாசலுக்கு
வெளியே!
வீட்டின் உள்ளே,
சத்தமாய் ஒலிக்கும் அபிராமி அந்தாதி,
குளிருக்கு இதம் தரும்
ஆவி பறக்கும் காப்பியின் மனம்
வீடு முழுதும்!
திறந்து வைத்திருக்கும் சன்னல் வழியே
மெதுவாய் தலையை நீட்டும்
சூரியனின் செங்கதிர்கள்
கூடத்தின் தரையில் போடுமாம்
ஒளி வரிக்கோலம்!
சாமி அறையில் இருந்து
வரும் ஊதுபத்தியின் புகை,
கூடவே ஒலிக்கும் மணியின் ஓசை!
இரவு முழுதும் தென்றலோடு
ஆட்டம் போட்ட தென்னை கீற்று
விடிந்ததும் தன் வேர்வை துளிகளை
கொல்லை மண்ணில்
சொட்டு சொட்டாய் சிந்துமாம்!
இவை யாவும் ஒரு காலத்தில்
நிதர்சனமாய் அரங்கேறியது!
இன்றோ,
கொல்லையில் இருப்பது வெறும் மழைநீர் தொட்டி!
தொலைக்காட்சி பெட்டியில்
ஓயாமல் ஒலிக்கும் ராசிபலன்!
கொசுவிற்கு பயந்து
மூடியே இருக்கும் சன்னல்கள்!
குளிருக்கு பயந்து
ஸ்வெட்டர், குல்லா போட்ட பெண்கள்,
அவர்கள் மேல் அடிக்கும் ஓடோமஸின் மனம்!
இருட்டில் வரும் அதிகாலை
செயின் திருடனிடமிருந்து
தப்பிக்க விடிந்ததும்
கோலமிடும் கோலம்!
ஆனாலும் மார்கழி என்றால்
மனதெங்கும் பூக்கும் வண்ணக்கோலம்!

No comments: